Last Updated : 19 Sep, 2018 11:13 AM

 

Published : 19 Sep 2018 11:13 AM
Last Updated : 19 Sep 2018 11:13 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஜப்பான் ஏன் இப்படி இருக்கிறது?

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஜப்பானிய வீரர்கள் சமீபத்தில் ரஷ்யா சென்றிருந்தார்கள். பாவம், தோற்றுவிட்டார்கள். வருத்தம்தான். சோகம்தான். கோபம்கூட வந்திருக்கும்.

ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? தோற்றுப் போன கையோடு அறைக்குத் திரும்பி, ‘ரொம்ப ரொம்ப நன்றி’ என்று ரஷ்ய மொழியில் ஒரு குறிப்பையும் எழுதி வைத்துவிட்டு, அமைதியாக விமானம் ஏறி வீட்டுக்குப் போய்விட்டார்கள்.

தோற்றதற்கு இப்படி என்றால், வென்றால் என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கிறீர்களா? சென்ற வாரம் உலகப் புகழ்பெற்ற செரினா வில்லியம்ஸைத் தோற்கடித்த கையோடு, ஜப்பானிய வீராங்கனை நவோமி ஒசாகா என்ன செய்தார் தெரியுமா? செரினாவிடமும் செரினாவின் ரசிகர்களிடமும் மனமுருகி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். எதற்காம்?

ஆயிரம் இருந்தாலும் செரினாவைப்போல் வருமா? அவர் வெல்வார் என்று உலகமே எதிர்பார்த்திருந்தபோது அவரைத் தோற்கடித்தது தப்பில்லையா? எனவே, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று செரினாவைக் கட்டிப்பிடித்து அழுது தீர்த்திருக்கிறார்.

ரயில் தாமதமாகிவிட்டால் ஜப்பானிய ஓட்டுநர் என்ன செய்வார் தெரியுமா? தனது இருக்கையிலிருந்து ஓடிவந்து பயணிகளிடம் பயபக்தியோடு மன்னிப்புக் கேட்பார். ”எத்தனை பெரிய தவறு செய்துவிட்டேன். எத்தனை ஆயிரம் பேரின் பொன்னான மணித் துணிகளை வீணாக்கிவிட்டேன்! இனி இப்படிப்பட்ட தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்.” அவர் கண்களில் கண்ணீரே வந்துவிடும்.

சரிப்பா பரவாயில்லை, இதெல்லாம் ஒரு விஷயமா என்று நீங்கள் சமாதானம் செய்தாலும் விடமாட்டார். சரி, அப்படி எத்தனை மணி நேரம் வண்டியைத் தாமதப்படுத்திவிட்டார் என்று நினைக்கிறீர்கள்? மூன்று அல்லது இரண்டு நொடிகள்.

நாளை மாலை பூங்காவில் 4.32க்குச் சந்திப்போம் என்று ஒரு ஜப்பானியர் சொன்னால், அவர் சரியாக 4.32க்கு அங்கே இருப்பார் என்று அர்த்தம். ஒருவேளை 4.34க்கு வந்துவிட்டால் போச்சு! பூமியே தலைகீழாகத் திரும்பிவிட்டதைப்போல் நூறு முறை உங்கள் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டு, அழுது புரண்டு ஒரு வழி செய்துவிடுவார். நீங்கள் அலட்சியமாக மூன்று நொடிகள் தாமதமாகச் சென்றுவிட்டால் உங்களைப் பிடித்து உலுக்கி எடுத்துவிடுவார்.

உங்களுக்காக மூன்று நொடிகள் இங்கே வெட்டியாகக் காத்திருந்தேன் தெரியுமா? ஏன் இந்த அளவுக்குப் பயங்கரமாகத் தாமதப்படுத்துகிறீர்கள்? உங்களால் என்னுடைய வேலை எந்த அளவுக்குக் கெட்டுப் போயிருக்கிறது தெரியுமா? இனியொரு முறை இப்படிச் செய்யாதீர்கள். அவரைக் கட்டிப்பிடித்து அரை மணி நேரமாவது தேம்பித் தேம்பி அழுதால்தான் ஓரளவுக்காவது சமாதானம் அடைவார்.

ஒரு ஜப்பானியருக்கு எப்படி வணக்கம் சொல்ல வேண்டும் என்று தெரியும் அல்லவா? தலை குனிந்து முதுகை வளைத்து வணங்க வேண்டும். ஒருவர் எந்த அளவுக்கு முக்கியம் என்று நினைக்கிறீர்களோ அந்த அளவுக்கு உடல் குனிய வேண்டும். ரொம்ப ரொம்ப முக்கியம் என்றால், அப்படியே தரையில் படுத்துக்கொண்டுவிட வேண்டுமா என்று தெரியவில்லை.

நீங்கள் ஒரு பெண் என்றால், உங்கள் பற்கள் அடுத்தடுத்து வரிசையாக அமைந்திருக்கின்றன என்றால் ஜப்பானியர்கள் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள். இதென்ன இப்படி நேராக இருக்கிறது, நீ ஏன் ஒரு நல்ல பல் மருத்துவரைப் பார்த்து சரி செய்துகொள்ளக் கூடாது என்று சிபாரிசு செய்வார்கள்.

கொஞ்சம் ஏற்றமும் இறக்கமுமாகப் பற்கள் இருந்தால்தான் அங்கே அழகு. இது இப்போதைய நாகரிகம். 1800கள்வரை எது நாகரிகம் தெரியுமா? கரியைக் கொண்டு பற்களை அடிக்கடிக் கறுப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் உர்ர்ர், புர்ர்ர் என்றெல்லாம் உறிஞ்சி சத்தம் போட்டுச் சாப்பிட்டால் இங்கிருப்பவர்கள் உங்களை முறைப்பார்கள்தானே? ஜப்பானில் யாராவது உங்களை வீட்டுக்கு வரவேற்று விருந்து வைத்தால், அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்துவிடக் கூடாது. கிட்டத்தட்ட கரடிபோல் மாறி, வீடே அதிரும்படிச் சத்தம் போட்டுச் சப்புக்கொட்டிச் சாப்பிடவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு உணவு பிடித்திருக்கிறது என்று அர்த்தம். எந்த அளவுக்குச் சத்தம் போடுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களை அவர்களுக்குப் பிடிக்கும்.

உங்கள் நண்பரைச் சந்திக்க அவசரமாகப் பூங்காவுக்கு ஓடிக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் கைப்பை தவறி கீழே விழுந்துவிட்டதா? அல்லது கையில் கட்டியிருந்த கடிகாரம் கழண்டு விழுந்துவிட்டதா? அல்லது சட்டைப் பையிலிருந்து பணம் பறந்துவிட்டதா? கவலைப்படாதீர்கள், நீங்கள் பாட்டுக்கு ஓடுங்கள்.

நண்பரிடம் கதை பேசிவிட்டுத் திரும்பிவந்தால் நீங்கள் போட்டது போட்ட இடத்தில் அப்படியே இருக்கும். அவசரப்படாமல் எடுத்துக்கொண்டு வீடு போய்ச் சேரலாம். ஒருவேளை பணம் இல்லை என்றால் ஐயோ காணோமே என்று பதறாதீர்கள். காற்றில் பறந்து பக்கத்து கடையில் விழுந்திருக்கும். கேட்டுப் பாருங்கள், ஓ! ஆமாம் எடுத்து வைத்திருக்கிறேன் என்று கொண்டுவந்து கொடுப்பார்கள். அவர்களுக்கு அப்படியே குனிந்து ஒரு வணக்கம் போட்டுவிட்டுக் கிளம்பிவிடலாம்.

இந்தத் தர்பூசணிப் பழம் இருக்கிறதே. அதுகூட ஜப்பான் போகும்போது அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறது. நம் ஊரில் எல்லாம் அழகாக நீள் உருண்டையாகத்தானே இருக்கும். ஜப்பானில் மட்டும் சதுர வடிவில் தர்பூசணியை வளர்க்கிறார்கள். நீள் உருண்டையாக இருந்தால் அடுக்கி வைப்பது சிரமமாக இருக்கிறது. பெட்டிபோல் சதுரமாக இருந்தால் ஒன்றன்மீது ஒன்றாக நிறைய அடுக்கலாம். இடமும் மிச்சமாகும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கும் வசதியாக இருக்கிறது என்கிறார்கள்.

ரயில் முதல் தர்பூசணிவரை எல்லாவற்றிலும் ஏன் ஜப்பான் வித்தியாசமாக இருக்கிறது? விடை தெரிய வேண்டுமானால் நீங்கள் ஒரு மாதம் எங்களோடு வந்து தங்கியிருங்கள் என்று அழகாக முதுகை வளைத்து வரவேற்கிறார்கள் ஜப்பானியர்கள். ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வருவோமா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x