Last Updated : 09 Aug, 2018 10:22 AM

 

Published : 09 Aug 2018 10:22 AM
Last Updated : 09 Aug 2018 10:22 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஐன்ஸ்டைன் என்னும் புதிர்!

ஐன்ஸ்டைன், உங்கள் தலைமுடி ஏன் காடு மாதிரி வளர்ந்திருக்கிறது? இப்படி ஒரு கேள்வி வந்தபோது ஐன்டைனின் முகத்தில் கொஞ்சம்கூடக் கடுகடுப்போ சிடுசிடுப்போ இல்லை. நான் யார் தெரியுமா? என்னைப் பார்த்து எப்படி நீ இப்படி எல்லாம் கேட்கலாம் என்று அவர் கோபப்படவும் இல்லை. ஏதோ கணித சமன்பாட்டில் சந்தேகம் கேட்டதுபோல் மிகவும் நிதானமாக அவர் பதிலளித்தார்.

“அதை ஏன் கேட்கிறீர்கள்? எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கொஞ்ச நேரம் வளராமல் இரு என்று பலமுறை தலைமுடியிடம் மன்றாடிப் பார்த்துவிட்டேன். கேட்டால்தானே? சரி, எக்கேடாவது கெட்டுப்போ என்று அப்படியே விட்டுவிட்டேன்!” என்றார்.

ஒரு சீப்பு எடுத்து சீவினால் தலைமுடி வாலைச் சுருட்டிக்கொண்டு அடங்கி இருக்கும். என்னென்னவெல்லாமோ தெரிந்து வைத்திருக்கும் ஐன்ஸ்டைனுக்கு இது தெரியாதா என்ன? தெரியும். ஆனால் செய்ய மாட்டார். “ஒரு சீப்பைத் தேடி எடுக்க வேண்டும். பிறகு கையில் எடுத்து தலைக்குக் கொண்டு போக வேண்டும். பிறகு அங்கும் இங்கும் சீப்பை வைத்து இழுத்து, இழுத்து தலைமுடியைப் படியவைக்க வேண்டும்.

அதற்குள் நான்கு பக்கம் படித்துவிடலாம். பத்துக் கணக்கு போட்டுப் பார்த்துவிடலாம். ஒரு வகுப்பு எடுத்து முடித்துவிடலாம்.  கொஞ்சம் குச்சி குச்சியாக நீட்டிக்கொண்டு நின்றால் அழகு என்ன குறைந்துவிடவா போகிறது? அப்படியே குறைந்தால்தான் என்ன?

சரி, தலை அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்” என்பார்.

”நீங்கள் ஏன் இதே கோட்டைக் கடந்த பத்து நாள்களாக அணிந்து கொண்டிருக்கிறீர்கள் ஐன்ஸ்டைன்?” என்று கேட்டால் வெட்கத்துடன் புன்னகை செய்வார். “நான் கவனிக்கவில்லை. வீட்டுக்குப் போய் அலமாரியைத் திறந்தால் எல்லா கோட்டும் ஒன்றுபோலதான் இருக்கிறது. ஏதோ ஒன்று போட்டுக்கொண்டு கிளம்பிவிடுவேன். நாளை நிச்சயம் மாற்றிவிடுகிறேன்” என்று உறுதியளிப்பார்.

ஆனால் மாற்றமாட்டார். “இப்போதுள்ள கோட்டை மாற்ற வேண்டுமானால் அதைத் தனியே வைத்துவிட்டு, வேறு ஒன்றைத் தேடி எடுத்து அணிந்துகொள்ள வேண்டும். அந்த கோட் என்ன நிறம் என்று பார்க்க வேண்டும். அதை மறக்காமல் மறுநாள் மாற்ற வேண்டும். இதை எல்லாம் யார் நினைவில் வைத்துக்கொள்வது? அதற்குப் பதிலாக ஒரே கோட்டை ஒரு வாரமோ பத்து நாளோ அணிந்துகொள்வது தவறில்லையே?”

போகட்டும். தலை, கோட் இரண்டையும் விட்டுவிடுவோம். “கொஞ்சம் குனிந்து உங்கள் காலைப் பாருங்கள் ஐன்ஸ்டைன். நீங்கள் யார்? உலகமே வியந்து கொண்டாடும் ஒரு விஞ்ஞானி. இந்த உலகில் உங்களுக்குத் தெரியாததே ஒன்றும் இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். அமெரிக்காவும் பிரிட்டனும் பிரான்ஸும் போட்டிப் போட்டுக்கொண்டு உங்களை அவர்கள் நாட்டுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கின்றன.

இஸ்ரேல் ஒருபடி மேலே சென்று, தயவுசெய்து எங்கள் நாட்டின் அதிபராக நீங்கள் இருங்கள் என்றுகூட உங்களிடம் கேட்டுவிட்டார்கள். நீங்கள் எங்கே போனாலும் உங்களைப் பார்ப்பதற்கு மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் நீங்கள்? உங்கள் ஷூவைப் பாருங்கள். இப்படியா யாராவது காலணி அணிந்துகொள்வார்கள்?”

ஏன், இதற்கு என்ன குறைச்சல், நன்றாகத்தானே இருக்கிறது என்று குழம்பினார் ஐன்ஸ்டைன். “நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சாக்ஸ் அணிந்த பிறகுதானே ஷூ போட வேண்டும்? அது உங்களுக்குத் தெரியாதா?”

ஐன்ஸ்டைன் மென்மையாகச் சிரித்தார். “ஏனோ சாக்ஸ் எனக்கு ஒத்துக்கொள்வதே இல்லை. எப்போது போட்டாலும் பாதங்கள் ஒரு மாதிரி ஆகிவிடுகின்றன. காலில் ஏதோ பூச்சி ஊர்வதுபோல் இருக்கும். என் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் வீட்டுக்கு வாருங்கள், காட்டுகிறேன். என்னிடம் உள்ள எல்லா சாக்ஸிலும் எப்படியோ ஓட்டைகள் விழுந்துவிடுகின்றன. அதனால் சாக்ஸை மூட்டைக் கட்டி வைத்துவிட்டேன். யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”

தனியாகத்தான் இருப்பார். தனியாகப் படிப்பார். தனியாக நடப்பார். கார் ஓட்ட மாட்டார். எங்கு போக வேண்டுமானாலும், எத்தனை தூரமாக இருந்தாலும் நட நட என்று நடந்துகொண்டே இருப்பார். நீச்சல் தெரியாது. பயம். அவருடைய மேஜையில் அவருடைய பொருள்கள் தவிர, வேறு எதுவும் இருக்கக் கூடாது. வீட்டிலிருந்தால் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே அமர்ந்திருப்பார். உணவுகூட யாராவது கொண்டுவந்து கையில் கொடுக்க வேண்டும்.

இவ்வளவு பெரிய அறிவாளி, இரவு பகலாக படித்துக்கொண்டும் ஆய்வு செய்துகொண்டும் இருப்பார் என்று நினைத்தால் தவறு. வானம் இடிந்து விழுந்தாலும் சரி. தினமும் குறைந்தது பத்து மணி நேரம் உறங்கியாக வேண்டும்.

ஐன்ஸ்டைனுக்கு அபாரமான நினைவாற்றல் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், தவறு. நன்றாகச் சிரித்து சிரித்துப் பேசுவார். மறுநாள் போய், “ஹலோ ஐன்ஸ்டைன்” என்று கையை நீட்டினால் தயக்கத்துடன், “நீங்கள் யார்? என்னை உங்களுக்குத் தெரியுமா?” என்று விழிப்பார். தேதி, ஆண்டு, கிழமை மறந்துவிடும். பெயர்கள் நினைவில் இருக்காது. தொலைபேசி எண் மறந்துவிடும். முகவரி? அதை எதற்கு அநாவசியமாக மனப்பாடம் செய்து பொழுதை வீணாக்க வேண்டும் என்று விட்டுவிட்டேன் என்பார்.

ஐன்ஸ்டைன் விநோதமானவர் மட்டுமல்ல, ஐயோ பாவமும்கூட. ஆஹா ஓஹோ என்று உலகமே அவரைக் கொண்டாடி மகிழ்ந்தது என்றாலும் அவருடைய இயற்பியல் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் அவரைத் தவிர வேறு யாராவது புரிந்துகொண்டார்களா என்பது சந்தேகமே. ஒருமுறை சார்லி சாப்ளின் வாய்விட்டே கேட்டுவிட்டார். “ஐன்ஸ்டைன், என்னுடைய படத்தைப் மக்கள் ஆரவாரமாகக் கைத்தட்டி ரசிக்கிறார்கள்.

நான் எங்கு போனாலும் என்னை உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள். ஆனால் உங்களுக்கும் ஏன் அதே போன்ற ஆரவாரமான வரவேற்பு கிடைக்கிறது? என் படம் எல்லோருக்கும் புரியும். ஆனால் நீங்கள் சொல்வதோ எழுதுவதோ ஒருவருக்கும் புரியாது. பிறகு எப்படி எல்லோருக்கும் பிடித்தமானவராக இருக்கிறீர்கள்?”

“எனக்கும் ரொம்ப நாளாக அதே சந்தேகம்தான் சாப்ளின்” என்று குழம்பினார் ஐன்ஸ்டைன். “என்னவோ போங்கள், சில விஷயங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை!”

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x