Last Updated : 11 Jul, 2018 10:39 AM

 

Published : 11 Jul 2018 10:39 AM
Last Updated : 11 Jul 2018 10:39 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: இறந்த காலத்துக்கு உயிர் உண்டா?

 

சை ஆசையாக உள்ளே நுழைந்த குழந்தைகள், ‘அமைதியாக இருக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்த பலகையைப் பார்த்ததும் உச்சுக்கொட்டினார்கள். அட என்னப்பா இது! வகுப்பறையில் பேசக் கூடாது. நூலகத்தில் பேசக் கூடாது. ஜாலியாக வெளியில் போகலாம் என்று பிரிட்டிஷ் அருங்காட்சியகம் வந்தால் இங்கும் அதே கதை. பேசாதே, பேசாதே என்றால் இந்த வாயை வைத்துக்கொண்டு வேறு என்னதான் செய்வதாம்?

புரியாத ஓவியங்களையும் சிற்பங்களையும் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்க்க முடியும்? அதிலும் சிலவற்றில் கையும் காலும் தலையும் உடைந்திருக்கின்றன. மாடிக்குப் போனால் முழுக்க முழுக்க உடைந்த பானைகள், கிழிந்து போன புத்தகங்கள், அறுந்து போன மணிகள், உடைந்த கட்டிடத்தின் பகுதிகள்!

சலிப்புடன் குழந்தைகள் வெளியில் வந்து, புல் தரையில் அமர்ந்துகொண்டார்கள். இது அலுப்பாக இருக்கிறது என்றான் ஒரு சிறுவன். ஓட்டை உடைசல்களை எல்லாம் எதற்காக எடுத்துவந்து கண்ணாடியில் போட்டுப் பாதுகாக்கிறார்களோ தெரியவில்லை! விலங்குகளாவது உயிரோடு இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை என்றாள் ஒரு சிறுமி. இதில், பேசக் கூடாது, தொடக் கூடாது என்று கட்டுப்பாடுகள் வேறு! இன்னொரு சிறுவன் கொதித்தேவிட்டான். கடையில் கொடுத்தால் ஒரு பென்சில்கூடத் தர மாட்டார்கள். அத்தனை பழைய நாணயங்களைப் பெட்டிக்குள் வைத்து பூட்டியிருக்கிறார்கள். என்ன விசித்திரமோ!

செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த தாத்தா புன்னகையுடன் நெருங்கிவந்தார். ‘‘நியாயமான கேள்விகள்தான். எனக்கும் சிறு வயதில் இந்த இடம் பிடிக்கவில்லை. ஆனாலும் அப்பாவும் அம்மாவும் என்னை மீண்டும் மீண்டும் இங்கே அழைத்து வந்துகொண்டே இருந்தார்கள். வேறு வழியில்லாமல் நானும் கவனமாகப் பார்வையிட ஆரம்பித்தேன். அப்போது பல ஆச்சரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தேன்.”

அதென்ன ஆச்சரியம் என்று கேட்ட சிறுமியிடம் திரும்பினார் தாத்தா. ‘‘அதோ அந்த அறையில் தங்க வாள், வைர மோதிரம், யானை தந்தத்தால் ஆன பொம்மைகள் என்று பல கண்கவரும் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பக்கத்தில் உடைந்த பானைகள், செல்லாத காசுகள், கிழிந்த பழைய ஆடைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். இந்த இரண்டில் எது மதிப்பு மிக்கது என்று கேட்டால் இரண்டுமே என்றுதான் இங்கிருப்பவர்கள் சொல்வார்கள். ஏன் தெரியுமா?”

தாத்தா தொடர்ந்தார்: ‘‘ஏனென்றால் இந்த இரண்டுமே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதர்கள் விட்டுச் சென்றிருக்கும் பொருள்கள். சிலவற்றைப் பேரரசர்களும் செல்வந்தர்களும் பயன்படுத்தியிருப்பார்கள். இன்னும் சிலவற்றைச் சாதாரண மக்கள் உபயோகித்திருப்பார்கள். நாம் இதற்கு முன்பு எப்படி இருந்தோம் என்பதை இந்தப் பொருள்களை வைத்துதான் தெரிந்துகொள்ள முடியும். நாம் எப்படி எழுதினோம்? என்ன படித்தோம்? எப்படி ஓவியங்கள் வரைந்தோம்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடம் இருந்ததா? அப்போது எப்படிப் பாடம் எடுத்தார்கள்? அப்போது எப்படிப்பட்ட நாணயங்கள் இருந்தன? இப்போது நாம் நாய், பூனை வளர்ப்பதுபோல் பழங்கால மனிதர்கள் ஏதாவது விலங்குகளை வீட்டில் வளர்த்தார்களா? அப்போது கதை சொல்லும் வழக்கம் இருந்ததா? ஆம் என்றால் எப்படிப்பட்ட கதைகள்?’’

ஆச்சரியத்துடன் கண்களை விரித்த சிறுமியைப் பார்த்துச் சிரித்தார் தாத்தா. ‘‘இப்படி ஏராளமான சுவாரஸ்யங்களும் ரகசியங்களும் இங்கே ஒளிந்துகொண்டிருப்பதால்தான் ஆராய்ச்சியாளர்கள் தொடங்கி குழந்தைகள்வரை அனைவரும் மீண்டும் மீண்டும் இங்கே வருகிறார்கள். இங்கிருக்கும் ஒவ்வொன்றும் ஏராளமான கதைகளையும் ரகசியங்களையும் பாதுகாத்து வைத்திருக்கின்றன. நீங்கள் அமைதியாக இருந்தால்தான் அவை பேசுவது உங்களுக்குக் கேட்கும். எலும்புக்கூடாக இருந்தாலும் சரி, உடைந்த பானையாக இருந்தாலும் சரி. நீங்கள் கவனமாக ஆராய்ந்தால் இங்குள்ள எல்லாவற்றுக்கும் உயிர் இருப்பதைத் தெரிந்துகொள்வீர்கள். இறந்த காலம் என்பது உண்மையில் இறந்த காலமே அல்ல.’’

‘‘சரி, அப்படியானால் வா, இப்போதே போய்ப் பார்க்கலாம்” என்று தாத்தாவுக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே ஓடினார்கள் குழந்தைகள். எகிப்து, கிரேக்க நாகரிகம் என்று எழுதப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தார்கள். பாடம் செய்யப்பட்ட பலவிதமான உயிரினங்கள் அங்கே காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இறக்கை விரித்த பறவைகள். பலவிதமான பட்டாம்பூச்சிகள். சீசாவுக்குள் பாம்புகள். ஒரு புலி கையையும் காலையும் பரப்பிக்கொண்டு வாயைத் திறந்தபடி அமைதியாக படுத்திருந்தது.

சற்றுத் தள்ளி ஒரு பலகையில் நத்தையின் உடலை ஒட்டி வைத்திருந்தார்கள். ‘‘ஏய் நத்தையே, உன் கதை என்ன?” என்று கிசுகிசுத்தபடி நத்தையை நெருங்கினாள் ஒரு சிறுமி. அப்போது அந்த அதிசயம் நடந்தது. ஆம், அந்த நத்தைச் சற்று அசைந்தது. ‘ஆ, ஐயோ’ என்று சிறுமி அலறியதைக் கேட்டதும் அதிகாரிகள் ஓடிவந்தனர். ‘‘இந்த நத்தை... இது... இதற்கு உயிர் இருக்கிறது” என்று அந்தச் சிறுமி சொன்னபோது, அவர்கள் சிரித்தார்கள். ‘‘இதோ பார் குழந்தை. இங்குள்ளவை வரலாற்றுப் பொருள்கள். எதற்கும் உயிர் இல்லை, பயப்படாதே!”

சிறுமி மறுத்தாள். ‘‘இல்லை, இல்லை. இதோ நத்தை அசைகிறது பாருங்கள். நன்றாகப் பாருங்கள்.” கூர்ந்து கவனித்த அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். இது நடந்தது 1850-ம் ஆண்டு. பழங்கால ஆதாரங்களைச் சேகரிக்கும்போது தவறுதலாக இந்த நத்தையையும் கொண்டுவந்து ஒட்டி வைத்துவிட்டார்கள். பாவம், நான்கு ஆண்டுகளாக அந்த நத்தை ஒரு காட்சிப் பொருளாக அங்கேயே இருந்துவிட்டது. உண்மை தெரிந்த பிறகு நத்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அதை விடுவித்துவிட்டார்கள்.

குழந்தைகளுக்குக் குதூகலம் தாங்கவில்லை. ‘‘தாத்தா, தாத்தா” என்று கத்தியபடியே உற்சாகமாக வெளியில் ஓடினார்கள். ‘‘நீங்கள் சொன்னது உண்மை. வரலாறுக்கு உயிர் இருக்கிறது!” அந்தச் சிறுமி ஓடிக்கொண்டே நிம்மதி பெருமூச்சுவிட்டாள். ‘‘நல்ல வேளையாக, நான் நத்தையிடம் போனேன். புலியிடம் பேசி இருந்தால் என்ன ஆகியிருக்குமோ!”

(சில வகை நத்தைகள் ஆண்டுக் கணக்கில் நீள் உறக்கம் (Hibernation) கொள்கின்றன.)கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x