Last Updated : 03 Jul, 2018 05:33 PM

 

Published : 03 Jul 2018 05:33 PM
Last Updated : 03 Jul 2018 05:33 PM

சாதனை: லிட்டில் கிராண்ட் மாஸ்டர்

உலகம் முழுவதும் ஆச்சரியத்தோடு உச்சரித்துக்கொண்டிருக்கும் பெயர் பிரக்ஞானந்தா. மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, செஸ் உலகின் இளவரசனாக வலம் வருகிறார். ஜூன் 24-ந் தேதி இத்தாலியில் நடைபெற்ற நான்காவது கிரெடின் ஓபன் செஸ் தொடரில், தன்னைவிட வயதில் பெரிய வீரர்களை வென்று இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

12 வயது 10 மாதங்களில் பட்டம் வென்றதன் மூலம் இந்தியாவில் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது சிறுவன்.

30CH_Pragright

சென்னை முகப்பேரில் வசிக்கும் பிரக்ஞானந்தா, ஏழாம் வகுப்பு படிக்கிறார். இத்தாலியில் இருந்து வந்தவுடன் நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகளுடன், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் இவரது வீட்டுக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கின்றன. எல்லோருடைய பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருந்தாலும் பிரக்ஞானந்தா தனக்கும் அந்தச் சாதனைக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் அமைதியாக இருக்கிறார்.

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ‘சதுரங்கச் சக்கரவர்த்தி’ விஸ்வநாதன் ஆனந்த், தன் வீட்டுக்கு லிட்டில் கிராண்ட் மாஸ்டரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

“ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச செஸ் போட்டிகளில் விளையாடி இருக்கேன். இந்த முறை கிராண்ட் மாஸ்டர் ஆவேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதிலும் விஸ்வநாதன் ஆனந்த் சார் வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது. இத்தாலியில நான் விளையாடி வெற்றி பெற்ற சுற்றுகளின் ஒவ்வொரு ‘நகர்வையும்’ பத்திக் கேட்டார்.

அடுத்து ஸ்பெயின் நாட்டில் நான் விளையாடப் போற முதல் சீனியர் லெவல் போட்டிக்கு ஆலோசனைகள் சொன்னார்” என்று பூரிக்கிறார், எல்லோராலும் ’பிரக்’ என்று செல்லமாக அழைக்கப்படும் பிரக்ஞானந்தா.

இவ்வளவு பெரிய சாதனை எப்படிச் சாத்தியமானது என்று கேட்டால், “என் அக்கா வைஷாலியைப் பார்த்துதான் நான் செஸ் விளையாட ஆரம்பிச்சேன். நானும் அக்காவும் சேர்ந்துதான் போட்டிகளுக்குப் போவோம். இப்போ நான் பட்டம் வென்ற போட்டியிலகூட பெண்களுக்கான கிராண்ட் மாஸ்டர் (WGM) போட்டியில அக்கா இரண்டாவது இடத்தைப் பிடிச்சிருக்கார். மூன்றாவது முறையும் அவர் வெற்றி பெற்றால் அவரும் கிராண்ட் மாஸ்டர் ஆகிடுவார். அக்காதான் எப்பவுமே எனக்கு இன்ஸ்பிரேஷன்.

அதேபோல அப்பாவும் அம்மாவும் என்னை உற்சாகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. அம்மாதான் எல்லா இடங்களுக்கும் என்னை அழைச்சிட்டுப் போவாங்க. எல்லாத்துக்கும் மேலே என் மீது நம்பிக்கை வைத்து வழிநடத்துவது என்னுடைய பயிற்சியாளர் ரமேஷ் சார். என் பலம், பலவீனம் எல்லாம் பார்த்து நுட்பங்களைக் கத்துக் கொடுப்பார்.

தன்னம்பிக்கை ஊட்டுவார். அதனால்தான் கடினமாக என்னால் உழைக்க முடிந்தது. ‘நான் நல்ல பிளேயர்’ என்ற எண்ணம் எனக்குள்ளே எப்போதுமே உண்டு. அதுதான் என்னைத் தொடர்ந்து சிறப்பா விளையாட உந்தித் தள்ளுது” என்று சிரித்துக்கொண்டே விடைபெற்றார் பிரக்ஞானந்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x