Last Updated : 12 Jun, 2018 05:53 PM

 

Published : 12 Jun 2018 05:53 PM
Last Updated : 12 Jun 2018 05:53 PM

கதை: நீ என்ன ஆகப் போறே?

 

பா

வலர் பாலர் பள்ளியில் ஏற்கெனவே பதினைந்து குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தார்கள். பதினாறாவதாகப் பள்ளியில் சேர்ந்தாள் மீனா.

“புதிதாக வந்திருக்கும் இந்த மாணவியின் பெயர் மீனா. ஒவ்வொருத்தரும் உங்க பேரைச் சொல்லி அறிமுகம் செய்ங்க பார்க்கலாம்” என்றார் ஆசிரியர்.

பதினைந்து பேரும் தங்களுடைய பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார்கள். இறுதியில் எழுந்தாள் மீனா. 15 பேரின் பெயர்களோடு தன்னுடைய பெயரையும் சொல்லிவிட்டு அமர்ந்தாள். ஆசிரியரும் சக மாணவர்களும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

சிற்றுண்டி இடைவேளை நேரம் வந்தது. மாணவர்கள் வரிசையாக ஆசிரியரிடம் சென்றனர். அவர் ஆளுக்கு இரண்டு பிஸ்கெட்கள் கொடுத்தார். எல்லோரும் சாப்பிட்டார்கள். ஆனால், மீனா மட்டும் தன்னுடைய பிஸ்கெட்களைச் சாப்பிடாமல், வால் ஆட்டிக்கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டிக்குக் கொடுத்தாள்.

“ஏன் மீனா, பிஸ்கெட்டை நாய்க்குக் கொடுக்கறே? பிடிக்கலையா?” என்று கேட்டார் ஆசிரியர்.

“நாய்க்குட்டியின் வயிறு ஒட்டிப் போயிருக்கு. அதான் பசியோட இருக்கும் நாய்க்குட்டிக்குச் சாப்பிடக் கொடுத்தேன் டீச்சர். எனக்குப் பசிச்சா உங்க கிட்ட கேட்கலாம், அது என்ன செய்யும் பாவம்” என்ற மீனாவின் பதிலைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டார் ஆசிரியர். சிறிது நேரத்துக்குப் பிறகு, ”நாய்க்குப் பசிக்கும்னு எல்லாம் உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது?” என்றார் ஆசிரியர்.

“நமக்குப் பசிக்கிற மாதிரிதானே நாய்க்கும் பசிக்கும். இது எனக்கே தெரியும்” என்றாள் மீனா.

உயிர் எழுத்துப் பாடத்தை ஆரம்பித்தார் ஆசிரியர்.

“இது என்ன எழுத்துன்னு சொல்லுங்க?”

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பதில் அளித்தார்கள். மீனாவின் முறை வந்தது. ‘அ’ எழுத்தைக் காட்டினார் ஆசிரியர்.

“இது டாய் ஸ்டோரி திரைப்படத்தில வர்ற தொப்பைக் கரடி!”

வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. ‘இ’யைப் பார்த்து, ”இது, எங்க பார்வதி பாட்டி. இப்படித்தான் பாட்டி, சேலை முந்தானையைத் தலையில் போட்டுக்கிட்டு உட்காருவாங்க” என்றாள் மீனா.

‘ஒ’ எழுத்தைக் காட்டினார் ஆசிரியர். உடனே, “குட்டி யானையோட தலை” என்று சிரித்த மீனாவின் கற்பனை வளத்தையும் திறமையையும் பார்த்து மகிழ்ச்சியடைந்த ஆசிரியர், கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

“நாளைக்குப் பள்ளிக்கு வரும்போது எல்லோரும் மறக்காமல் ஒரு இறகு கொண்டு வரணும்” என்று சொல்லிவிட்டு, மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

றுநாள் வகுப்பே கலகலப்பாக இருந்தது. காகத்தின் இறகைக் கொண்டுவந்திருந்தாள் கயல். தோட்டத்தில் கூடுகட்டி வசித்த மைனாவின் இறகை எடுத்துவந்திருந்தாள் மாதவி. பாட்டி வீட்டில் வளரும் சேவல் இறகைக் கொண்டு வந்திருந்தான் குணா. வாத்து இறகை வைத்திருந்தான் வருண். இறகை மறந்துவிட்டு வந்த மேகலா, பள்ளியில் வசித்த புறாவின் இறகைப் பத்திரப்படுத்தினாள்.

ஒவ்வொரு மாணவரின் இறகையும் பார்வையிட்ட ஆசிரியர், ”மீனா, உன்னோட இறகு எங்கே? மறந்துட்டீயா?” என்று கேட்டார். சற்றுப் பதற்றமடைந்த மீனா, பைக்குள் கைவிட்டுத் தேடினாள். எதுவும் கிடைக்கவில்லை. பென்சில் பாக்ஸைத் திறந்து பார்த்தாள். இறகைக் காணவில்லை.

“இறகு இல்லைன்னா பரவாயில்லை மீனா. நாளைக்குக் கொண்டு வா” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார் ஆசிரியர். கீழே பார்த்த மீனாவின் முகம் மலர்ந்தது. “டீச்சர், இதோ நான் கொண்டுவந்த இறகு” என்று காட்டினாள்.

கண்ணுக்கே தெரியாத அந்தச் சிறிய இறகைப் பார்த்த ஆசிரியர் திகைத்துப் போனார். மாணவர்கள் எழுந்து மீனா அருகே வந்தார்கள். அது என்னவென்று ஒருவருக்கும் புரியவில்லை.

“என்ன மீனா, இது?”

“நேத்து சாயந்திரம் மழை பெய்யும்போது, எங்க வீட்டுத் திண்ணையில் ஒரு ஈசல் வந்து விழுந்தது. அதுக்கும் இறகு இருந்தது. அதைத்தான் இப்போ கொண்டு வந்திருக்கேன் டீச்சர்!” என்றதும், சக மாணவர்கள் சிரித்தனர்.

“பறவைகள் பற்றிப் பாடம் எடுப்பதற்காக இறகுகளைக் கொண்டுவரச் சொன்னேன். நீ ஈசல் இறகைக் கொண்டு வந்திருக்கீயே மீனா…” என்று ஆசிரியர் முடிப்பதற்குள் மீனா குறுக்கிட்டாள்.

“டீச்சர், நீங்க இறகுதான் கொண்டு வரச் சொன்னீங்க. பறவையின் இறகுன்னு சொல்லவே இல்லை. அதான் நான் ஈசல் இறகைக் கொண்டு வந்தேன்!”

“நீ சொன்னது சரிதான். நான் பறவை இறகுன்னு சொல்லலை. ஆனால் எல்லோரும் அதைத்தான் கொண்டு வந்திருக்காங்க. நீ வித்தியாசமாக யோசிக்கிறே மீனா. வெரி குட்” என்று பாராட்டினார் ஆசிரியர்.

இப்படி மீனா வந்ததிலிருந்து ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் சுவாரசியத்துக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. அன்று மாலை, “நீங்க எல்லாம் பெரியவங்களான பிறகு என்னவாக ஆகப் போறீங்க என்று வரிசையாகச் சொல்லுங்க பார்க்கலாம்” என்றார் ஆசிரியர்.

“நான் போலீசாவேன்” என்றான் நகுலன்.

“ஏன் அப்படி நினைக்கறே?”

“அந்த சினிமாவில் எனக்குப் பிடிச்ச ஹீரோ போலீசா இருப்பார்” என்று சிரித்தான் நகுலன்.

அடுத்து பூஜா எழுந்து, “நான் டாக்டர். எங்க அம்மாவும் அப்பாவும் அதைத்தான் படிக்கச் சொல்லியிருக்காங்க” என்றாள்.

மீனா என்ன சொல்லப் போகிறாள் என்று ஆசிரியரும் மாணவர்களும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“பசிக்கிறவங்களுக்குச் சாப்பாடு கொடுக்குற மெஷினைக் கண்டுபிடிக்கப் போறேன்” என்று மீனா சொன்னதும் வகுப்பே சிரித்தது.

ஓடிவந்து மீனாவைக் கட்டிக்கொண்டார் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x