Last Updated : 02 May, 2018 11:54 AM

 

Published : 02 May 2018 11:54 AM
Last Updated : 02 May 2018 11:54 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: ரகசியக் கடிகாரம்

 

ன்னும் சில தினங்கள்தான் பாக்கியிருக்கின்றன. அதற்குள் விடை கண்டுபிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிரான்ஸ் அழிந்துவிடும். இல்லை, இல்லை ஐரோப்பாவே காணாமல் போய்விடும். அதுவும் இல்லை. முழு உலகமும் அழிந்துவிடலாம். ஒரே ஒரு சிறிய கேள்விக்கு விடை கண்டுபிடித்துவிட்டால் போதும். எல்லோரையும் காப்பாற்றிவிடலாம். ஆனால் அந்த ஒரே ஒரு கேள்வி பத்து மாதங்களாகப் போட்டுப் படுத்திக்கொண்டிருக்கிறது.

புத்தகத்தில் இல்லாததே இல்லை, தேடிப் பாருங்கள் என்று சிலர் சொன்னார்கள். உடனே அவர்கள் ஓடிச் சென்று நூலகத்திலுள்ள புத்தகங்களையெல்லாம் எடுத்துத் தேடு தேடு என்று தேடிப் பார்த்துவிட்டார்கள். பலனில்லை. பல்கலைக்கழகப் பேராசிரியர்களையோ ஆய்வாளர்களையோ சென்று கேட்டுப் பாருங்கள், அவர்களுக்குத் தெரியாததே எதுவும் இல்லை என்றார்கள் வேறு சிலர். ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரிடமும் கேட்டுப் பார்த்தார்கள். ஒரு மாதிரியாகப் பார்த்தார்களே தவிர, வாயே திறக்கவில்லை. இணையத்தில் நுழைந்து நாள் கணக்காக நேரம் செலவழித்தார்கள். ம்ஹும், கூகுளிடம்கூட பதிலில்லை.

அப்படி என்ன பிரமாதமான கேள்வி அது? ஒன்றுமில்லை. 2005-ம் ஆண்டு பிரான்ஸுக்கு மிக மோசமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்லிவிட்டனர். நாட்டில் நிதி நிலைமை சரியில்லை. இப்படியே போனால் 2005-ம் ஆண்டு மக்கள் அதிகம் அவதிப்பட வேண்டியிருக்கும். எல்லாப் பொருள்களின் விலையும் கிடுகிடுவென்று ஏறிவிடும். பல பேருடைய வேலை பறிபோய் விடும். நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும். மொத்தத்தில் நாடு முழுக்க குழப்பமும் வருத்தமும் அதிகரிக்கும். ஒரு நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் அது இன்னொரு நாட்டையும் தொற்றிக்கொள்ளும் அல்லவா? அதனால் உலகம் முழுக்கப் பிரச்சினைகள் வெடிக்கலாம் என்றார்கள் நிபுணர்கள்.

உடனே சில நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்கள். ஒரு முடிவுக்கும் வந்தார்கள். 2005-ம் ஆண்டு என்றொன்று வந்தால்தானே பிரச்சினை? அதை வரவிடாமல் செய்துவிட்டால் என்ன? முந்தைய ஆண்டே அவர்கள் அதற்காக ஓடியோடி உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் ஒரே ஒரு கேள்விக்கான விடை. ஒரு புதிய ஆண்டு பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இதற்குத்தான் ஒருவரும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். 2005-ம் ஆண்டைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்னும் தலைப்பில் ஒரு புத்தகமாவது யாராவது எழுதியிருக்கிறார்களா? இல்லை. படித்த அறிவுஜீவிகளுக்காவது தெரிகிறதா? தெரியவில்லை.

பிரச்சினை வரும் என்று மட்டும்தான் சொல்லத் தெரிகிறதே தவிர, அதைத் தடுப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க ஒருவரும் தயாராக இல்லை. ச்சே, எத்தனை மோசமான உலகம் இது என்று சலித்துக்கொண்ட நண்பர்கள், தங்கள் முயற்சியில் மனம் தளராமல் தொடர்ந்து விடை தேடிக்கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்துகொண்டு கடலை கொறித்துபடியே பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒருவர் கத்தினார். ‘‘ஒரு பிரமாதமான திட்டம் தயார். கடிகாரம் இருந்தால்தானே நேரம் நகரும். பேசாமல் ஊரில் உள்ள எல்லாக் கடிகாரங்களையும் உடைத்துவிட்டால் என்ன?’’

கடிகாரங்களை உடைப்பதற்கும் நம் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் என்றார் இன்னொருவர். ‘‘இதுகூடவா புரியவில்லை? இப்போது மணி மாலை ஆறு. என் கடிகாரத்தை நான் உடைத்துவிட்டால் ஆறு மணியோடு என் நேரம் நின்றுவிடும். ஆனால் உன் கையில் உள்ள கடிகாரம் ஆறு, ஏழு என்று ஓடிக்கொண்டிருக்கும். அதையும் உடைத்துவிட்டால், இன்னொருவரின் கடிகாரம் ஓடும். நாம் செய்யவேண்டியது எல்லாக் கடிகாரங்களையும் தேடித் தேடி உடைப்பது. கடிகாரம் இல்லாவிட்டால் நேரம் நின்றுவிடும். நேரம் ஓடினால்தானே இன்றைய தினம் முடிந்து இன்னொரு நாள் பிறக்கும்?’’

உடனடியாக வேலையைத் தொடங்கினார்கள். ஆளுக்கோர் உருட்டுக் கட்டையை எடுத்துக்கொண்டார்கள். முதலில் தங்கள் கடிகாரங்களை உடைத்தார்கள். பிறகு பூங்காவில் உள்ளவர்களின் கடிகாரங்களை வாங்கி உடைத்தார்கள். வழியில் வருவோர், போவோரை எல்லாம் நிறுத்தி, கடிகாரத்தைப் பிடுங்கி சுக்கல் நூறாக உடைத்தார்கள். இவர்கள் கேட்டவுடன் எப்படி எல்லோரும் கடிகாரத்தைக் கொடுத்தார்கள் என்று கேட்கிறீர்களா? பிறகு, கட்டையோடு பத்துப் பேர் வழி மறித்து நின்றால் பயப்பட மாட்டார்களா?

அடுத்து கடைகளுக்குள் நுழைந்தார்கள். பெரிய பெரிய சுவர் கடிகாரங்களை எல்லாம் அடி, அடி என்று அடித்துச் சிதறடித்தார்கள். கடிகாரக் கடைகளை உடைத்து நொறுக்குவதற்கு நேரம் இன்னும் அதிகமானது. பொதுமக்களில் சிலரும் இவர்களுக்கு உதவ முன்வந்தனர். பாவம், நம் நாட்டுக்காகத்தானே இவ்வளவு செய்கிறார்கள். நாமும் சேர்ந்து உடைப்போம், எப்படியாவது இந்த 2005-ம் ஆண்டை வரவிடாமல் செய்துவிட்டால் போதும் என்று அவர்களும் கட்டையைத் தூக்கிக்கொண்டனர்.

ஆனால் பாவம். பல அப்பாவி கடிகாரங்கள் ஊர் முழுக்க உடைந்து சிதறியதுதான் மிச்சம். கடிகாரம் இல்லாவிட்டாலும் நேரம் என்னவோ ஓடிக்கொண்டே இருந்தது. இரவு வந்தது,பிறகு பொழுது விடிந்தது, மீண்டும் இரவு வந்தது. அவர்களும் காலத்தோடு போட்டிப் போட்டுக்கொண்டு காலை முதல் இரவுவரை அலைந்து திரிந்து வேக வேகமாகக் கடிகாரங்களை உடைத்துக்கொண்டேதான் இருந்தார்கள். கை வலித்தாலும் கால் வலித்தாலும் விடாமல் ஓடினார்கள். ஆனால் 2005-ம் ஆண்டு பிறந்ததை அவர்களால் தடுக்கவே முடியவில்லை.

மீண்டும் பூங்காவில் ஒன்றுகூடினார்கள். ‘‘கவலைப்படாதீர்கள் நண்பர்களே. நம் திட்டத்தில் தவறில்லை. ஆனால் ஒரே ஒரு கடிகாரம் ரகசியமாக நமக்குத் தெரியாமல் எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் 2005-ம் ஆண்டை அழைத்து வந்துவிட்டது. முயற்சி திருவினையாக்கும் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். எப்படியாவது அந்தக் கடிகாரத்தைக் கண்டுபிடித்து உடைப்போம். எடு அந்தக் கட்டையை!’’

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x