Last Updated : 02 May, 2018 11:53 AM

 

Published : 02 May 2018 11:53 AM
Last Updated : 02 May 2018 11:53 AM

கதை: நந்தனின் நட்சத்திரங்கள்

ந்தன் மற்ற குழந்தைகளைவிட வித்தியாசமானவன். அவனுடைய கண்களில் நட்சத்திரங்கள் இருந்தன. இவற்றின் உதவியால் மாதம் ஒருமுறை பிறருக்கு உதவி செய்ய முடியும்.

மீன் பிடிப்பதற்காகக் குளத்தை நோக்கிக் கிளம்பினார் அப்பா. உடனே தானும் குளத்துக்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டான் நந்தன். ஆனால் மழை வருகிற மாதிரி இருப்பதால் இன்று வர வேண்டாம் என்று சொன்னார் அப்பா.

ஏமாற்றமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விளையாட ஆரம்பித்தான். சற்று நேரத்தில் வீட்டில் வளர்த்த வாத்தைக் காணவில்லை என்றார் அம்மா. உடனே வாத்தைத் தேடிக் கிளம்பினான் நந்தன்.

வழியில் ஒரு கல் தடுக்கி விழுந்தான். வலிக்கவும் அழ ஆரம்பித்தான். அப்போது கண்களில் இருந்த நட்சத்திரங்கள் கீழே விழுந்தன.

வேகமாக வந்த சாம்பல் நாரை கீழே கிடந்த நட்சத்திரங்களைக் கொத்திச் சென்று, எதிரிலிருந்த பாறையில் அமர்ந்தது.

“நாரையே, என் நட்சத்திரங்களைத் திருப்பித் தந்துவிடு” என்று கெஞ்சினான் நந்தன்.

“இந்த நட்சத்திரங்களை நெற்றியில் பதித்து வைத்துக்கொள்ளப் போகிறேன். கொண்டலாத்தி குருவிக்கு மிக அழகான கொண்டை இருக்கிறது என்று பெருமையடித்துக்கொள்கிறது. எனக்குக் கொண்டை இல்லாததால் இந்த நட்சத்திரங்களை வைத்துக்கொள்கிறேன்” என்றது நாரை.

“இவை அலங்காரத்துக்கான நட்சத்திரங்கள் இல்லை. இவற்றை வைத்து மாதம் ஒருமுறை பிறருக்கு என்னால் உதவ முடியும்” என்றான் நந்தன்.

“சரி, எனக்கு என்றாவது ஒருநாள் நீ உதவுவாய் என்ற நம்பிக்கையில் தருகிறேன்” என்று நட்சத்திரங்களைப் போட்டுவிட்டுப் பறந்தது நாரை.

நந்தன் எடுப்பதற்குள் ஒரு நண்டு நட்சத்திரங்களை எடுத்துக்கொண்டு வளையை நோக்கி ஓடியது.

“நண்டே, என் நட்சத்திரங்களை இப்படி எடுக்கலாமா?” என்று கேட்டான் நந்தன்.

“அருகில் வராதே. வளைக்குள் ஒளிந்துகொள்வேன். என்னை உன்னால் வெளியே கொண்டு வரவே முடியாது” என்றது நண்டு.

“இவை சாதாரண நட்சத்திரங்கள் இல்லை. பிறருக்கு உதவக்கூடிய மாய நட்சத்திரங்கள். விளையாடாதே” என்றான் சற்றுக் கோபமாக நந்தன்.

“இந்த நீர்க்குமிழிகளை எண்ணிச் சொன்னால் நட்சத்திரங்களைத் தருகிறேன்” என்று சிரித்தது நண்டு.

நீர்க்குமிழிகளை எண்ண ஆரம்பித்தான். ஆனால் முடியவில்லை. நந்தனின் வருத்தத்தைப் பார்த்த நண்டு, “என்றாவது ஒருநாள் எனக்கு உதவி தேவைப்படும்போது உதவ வேண்டும். ஓடிப் போய் எடுத்துக்கொள்” என்றபடி நட்சத்திரங்களைத் தூக்கி வீசியது.

நட்சத்திரங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த நத்தையின் மீது விழுந்தன. நத்தை அவற்றை எடுத்து வைத்துக்கொண்டது.

நத்தையிடம் நட்சத்திரங்களைத் தருமாறுக் கேட்டான் நந்தன்.

“ஒரு கேள்வி கேட்பேன். பதிலைச் சரியாகச் சொன்னால் தந்துவிடுகிறேன்” என்றது நத்தை.

“எனக்கு எத்தனை கால்கள்?”

நந்தனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. நத்தைக்கு அருகில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்தான். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“நான் சொல்றேன். கால்களே கிடையாது. பாதம் மட்டும்தான் உண்டு. சரி, இந்தா நட்சத்திரங்களை எடுத்துக்கொள்” என்று நீட்டியது நத்தை. ஒரு தவளை தாவிக்குதித்து நட்சத்திரங்களை எடுத்துக்கொண்டு, தண்ணீரில் பாய்ந்தது.

நந்தனுக்கு வருத்தமாகிவிட்டது. இனி நட்சத்திரங்கள் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தான்.

“தவளையே, நட்சத்திரங்கள் எனக்குச் சொந்தமானவை. தயவுசெய்து என்னிடம் தந்துவிடு.”

“தண்ணீரில் இருக்கும் தாமரை இலைகளைப் பார். அதில் ஒன்றில் என் மனைவி இட்ட முட்டைகளை வைத்திருக்கிறேன். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வரும்வரை கொஞ்சம் காவலுக்கு இருப்பாயா?” என்று கேட்டது தவளை.

“வீட்டைவிட்டு வெளியே வந்து ரொம்ப நேரமாகிறது. அம்மா தேடுவார். நட்சத்திரங்களை நீயே வைத்துக்கொள்” என்று கிளம்பினான் நந்தன்.

உடனே கோபத்தில் நட்சத்திரங்களைக் குளத்தில் வீசியது தவளை. நட்சத்திரங்கள் எங்கே என்று அப்பா கேட்டால் என்ன செய்வது என்று யோசித்தான். அழுகை வந்தது.

நந்தா, நந்தா என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் நந்தன். குளத்துக்குள் இருந்து அவனது நண்பன் வாத்து சிரித்தது. அழுகைக்கான காரணத்தைக் கேட்டது.

“முதலில் முகத்தைத் தண்ணீரால் சுத்தம் செய். உன்னுடைய நட்சத்திரங்களைத் தேடித் தருகிறேன்” என்று ஆறுதலாகப் பேசியது வாத்து.

நந்தன் முகம் கழுவினான். வாத்திடம் கதை பேசினான். சிறிது நேரம் கழித்து நட்சத்திரங்கள் நினைவுக்கு வந்தவுடன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.

“எதுக்கு மறுபடியும் அழறே?” என்றது வாத்து.

“நட்சத்திரங்களை நீ இன்னும் தேடித் தரலையே?” என்றான் நந்தன்.

சிரித்தது வாத்து.

“நண்பன் துன்பத்தில் இருக்கும்போது சிரிப்பதுதான் நட்புக்கு அழகா?”

“நான் உன் துன்பத்தைப் பார்த்துச் சிரிக்கலை. உன் கண்களைப் பார்த்துச் சிரித்தேன்.”

“புரிகிற மாதிரி சொல். நேரமாகிவிட்டது. அம்மா தேடுவார். நாம் இருவரும் செல்ல வேண்டும்” என்றான் நந்தன்.

“தண்ணீரில் உன் முகத்தைப் பார்.”

குளத்து தண்ணீரில் முகம் பார்த்தான். அவனது கண்களில் நட்சத்திரங்கள் ஜொலித்தன. வாத்துக்கு நன்றி சொன்னான். வாத்தோடு வீட்டை நோக்கி நடந்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x