Last Updated : 11 Apr, 2018 10:48 AM

 

Published : 11 Apr 2018 10:48 AM
Last Updated : 11 Apr 2018 10:48 AM

ருட்யார்டு கிப்ளிங் கதை: ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி?

நீ

ண்ட காலத்துக்கு முன்பு ஹௌலிங்க் பாலைவனத்தில் வசித்த மனிதரிடம் ஒட்டகம் நாய், குதிரை, எருது என நான்கு விலங்குகள் இருந்தன. ஒட்டகத்தைத் தவிர மற்ற மூன்று விலங்குகளும் மனிதருக்கு உதவி செய்துவந்தன. வேலையும் செய்யாமல் இரை தேடியும் செல்லாமல் மிகவும் சோம்பேறியாக இருந்தது ஒட்டகம். யாராவது ஏதாவது கேட்டால் ‘ஹம்ப்’ என்று மட்டும் சொல்லும்.

ஒரு நாள் காலை மூட்டையைச் சுமந்தபடி வந்த குதிரை, “என்னோடு வாயேன். மூட்டைகளைச் சுமந்துகொண்டு சுகமான காற்றை அனுபவித்தவாறு நடக்கலாம்” என்று ஒட்டகத்தை அன்போடு அழைத்தது.

வழக்கம்போல் ‘ஹம்ப்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிக்கொண்டது ஒட்டகம். மனிதரிடம் சென்று விஷயத்தைச் சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தது குதிரை.

குதிரையைத் தொடர்ந்து வாயில் ஒரு குச்சியுடன் வந்த நாய், ‘‘வாயேன், ரம்மியமான மாலைப் பொழுதை நமதாக்கிக்கொண்டு, காவல் பணிக்காகத் தெருவை ஒரு சுற்றுச் சுற்றி வரலாம்’’ என்று ஒட்டகத்தைக் கனிவுடன் கூப்பிட்டது.

‘ஹம்ப்’ என்று குதிரைக்குச் சொன்ன அதே பதிலை நாய்க்கும் சொன்னது ஒட்டகம். வேறுவழியின்றி மனிதரிடம் தகவலைச் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றது நாய்.

சற்று நேரத்தில் எருது வந்தது. ‘‘என்னோடு வா. நாற்று நடுவதற்கு வசதியாக இருவரும் சேர்ந்து நிலத்தை உழுவோம்’’ என்று ஒட்டகத்தை அன்போடு அழைத்தது.

எருதுக்கு மட்டும் பதில் சொல்லிவிடுமா என்ன? குதிரைக்கும் நாய்க்கும் சொன்ன அதே பதில்தான். ‘ஹம்ப்’ என்று சொல்லியவாறே முகத்தைத் திருப்பிக்கொண்டது ஒட்டகம். தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாமல் ‘ஹம்ப்’ என்று சொன்னதை அப்படியே மனிதரிடம் சொல்லிவிட்டு, உழவுப் பணியைத் தொடர்ந்தது எருது.

இரவு நேரம். குதிரை, நாய், எருதை அழைத்த மனிதர், ‘‘பாலைவனத்தில் வசிக்கும் ஒட்டகம் எந்த வேலைக்கும் லாயக்கில்லை. அதை அங்கேயே விட்டுவிட்டு நம் வேலையைப் பார்ப்போம். அதைப் பற்றிக் கவலைப்படுவதில் பயன் இல்லை. ஆனால் ஒருவர் குறைந்த நிலையில் நீங்கள் மூவரும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.

மனிதன் சொன்னதைக் கேட்ட குதிரை, நாய், எருதுக்குக் கோபம்வந்தது. ‘‘வேலை செய்ய மறுத்த ஒட்டகத்திடம் வேலை வாங்கத் தெரியவில்லை. நம்மை இன்னும் அதிகமாக வேலை செய்யச் சொல்கிறார். பிறந்தால் ஒட்டகமாகப் பிறக்க வேண்டும்’’ என்று புலம்பிக்கொண்டே நடந்தன.

வழியில் பாலைவன ராஜா டின் வந்தார். ‘வேலை செய்யாமல் யாராவது சோம்பேறியாக இருக்க முடியுமா?’ என்று மூன்று விலங்குகளும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தன.

‘‘இது சாத்தியமே இல்லை. ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு வேலையைச் செய்தே ஆக வேண்டும். இந்த உலகில் வேலை செய்யாமல் இருக்க யாருக்குமே விதிவிலக்கு இல்லை’ என்றார் டின்.

‘‘அப்படியா? இந்தப் பாலைவனத்தில் நீண்ட கழுத்து, உயரமான கால்களுடன் ஒரு பிராணி வாழ்ந்துகொண்டிருக்கிறது. எங்களுக்குத் தெரிந்து அது ஒரு வேலையும் செய்வதில்லை’’ என்று மூன்றும் ஒரே குரலில் புகார் பட்டியல் வாசித்தன.

‘‘ஓ அதுவா? அது என்னுடைய ஒட்டகம்தான். என்ன சொல்கிறது?’’

‘ஹம்ப்’ என்பதைத் தவிர எதுவும் சொல்வதிலை என்றது நாய்.

டின் புழுதிக் காற்றில் வேகமாகப் பயணித்து, ஒட்டகம் இருக்கும் இடத்தை அடைந்தார். ஒரு வேலையும் செய்யாமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஒய்யாரமாகச் சாய்ந்துகொண்டிருந்தது ஒட்டகம்.

‘‘உன் மீது நிறைய புகார்கள் வருகின்றன. நீ ஒரு வேலையும் செய்வதில்லையாமே, உண்மையா?”

‘ஹம்ப்’ என்று முகத்தைச் சுழித்தது ஒட்டகம்.

‘‘எல்லோரிடமும் கூறும் அதே பதிலை என்னிடமும் கூறுகிறாயா? இனி ஒரு முறை அந்த வார்த்தையைச் சொல்லாதே? பிறகு வருத்தப்படுவாய்’’ என்று எச்சரித்தார் டின்.

டின்னின் எச்சரிக்கையை ஒட்டகம் கண்டுகொள்ளவில்லை. உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்ற தோரணையில் ‘ஹம்ப்’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் ஒய்யாரமாகச் சாய்ந்துகொண்டது.

அடுத்த நிமிடம் ஒட்டகம் தன் முதுகில் ஏதோ ஒரு சுமை இறங்குவதை உணர்ந்தது. இதுவரை ‘ஹம்ப்’ என்று கூறியபோது ஏற்படாத ஒரு மாற்றம் இப்போது ஏற்பட்டது. ஒட்டகத்தின் முதுகில் ஒரு மூட்டையை ஏற்றியதுபோல் திடீரென்று வீக்கம் காணப்பட்டது. சீராக இருந்த தனது முதுகில் திடீரென்று ஏற்பட்ட பெரிய வீக்கத்தைக் கண்டு அலறியது ஒட்டகம்.

‘‘அது வேறொன்றும் இல்லை. உன்னுடைய முதுகுதான். நீ எந்த வேலையும் செய்யாமல், எதையும் சுமக்காமல், இத்தனை காலம் ஏமாற்றிக்கொண்டிருந்தாய் அல்லவா? அதற்கான தண்டனையாகக் காலமெல்லாம் இந்த வீக்கத்தைச் சுமந்தே தீர வேண்டும். மேலும் எல்லாக் கேள்விகளுக்கும் ஹம்ப்… ஹம்ப் என்று நக்கலாகப் பதில் சொன்னாய் அல்லவா? இனி அந்த ‘ஹம்ப்’ எப்போதும் உன் உடலோடு ஒட்டி இருக்கும். நீ சொல்கிற ஹம்ப் என்ற வார்த்தைக்குத் தமிழில் ‘திமில்’ என்று பெயர். நீ ஆசையோடு ‘ஹம்ப்’ என்று அடிக்கடி சொன்னதால் இனி உன் முதுகில் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதைச் சுமந்துதான் ஆக வேண்டும். கீழே இறக்கி வைக்க முடியாது” என்றார் டின்.

இப்படித்தான் ஒட்டகங்களுக்குத் திமில் வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x