Last Updated : 28 Feb, 2018 11:26 AM

 

Published : 28 Feb 2018 11:26 AM
Last Updated : 28 Feb 2018 11:26 AM

ருட்யார்டு கிப்ளிங் கதை: திமிங்கிலத்துக்குத் தொண்டைச் சிறிதானது ஏன்?

மு

ன்னொரு காலத்தில் கடலில் பெரிய திமிங்கிலம் ஒன்று வாழ்ந்துவந்தது. கண்ணில் தென்படும் பெரிய, சிறிய கடல் வாழ் உயிரினங்களை எல்லாம் பெரிய வாயால் பிடித்து, விழுங்கிவந்தது. ஒரு சின்னஞ்சிறு மீன் மட்டும் அதன் வாய்க்குள் அகப்படாமல் தப்பித்துக் கொண்டே வந்தது. திமிங்கிலத்தின் காதுப் பக்கத்தில் நீந்திக்கொண்டே வந்ததால் அந்தச் சின்னஞ்சிறு மீன் அதன் கண்களுக்குப் புலப்படவே இல்லை .

ஒருநாள் சின்னஞ்சிறு மீனை எப்படியோ பார்த்துவிட்டது திமிங்கிலம். உடனே சாப்பிடப் போவதாகப் பயமுறுத்தியது.

”என்னைப் போன்ற சிறிய மீனை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் உங்கள் உருவத்துக்கும் பசிக்கும் ஏற்ற சரியான உணவு மனிதன்தான். என்றாவது மனிதனை ருசித்திருக்கிறீர்களா?” என்று கேட்டது சின்னஞ்சிறு மீன்.

”மனிதனா? எப்படி இருக்கும்? நான் சாப்பிட்டதே இல்லையே!”

”உங்களுக்கு ஏற்ற ருசியான உணவு!”

”அப்படியா! நாக்கில் எச்சில் ஊறுகிறது. இப்போதே எனக்குச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. எங்கே கிடைக்கும்?” என்றது திமிங்கிலம்.

”ஒரு வேளைக்கு ஒரு மனிதனைச் சாப்பிட்டால் போதும். அட்சரேகைக்கு மேற்கே ரப்பர் கயிறு, கத்தி, நீலக் கால்சட்டையுடன் ஒரு மாலுமி மரப்படகில் உட்கார்ந்து கொண்டிருப்பான். அவன்தான் மனிதன்” என்றது சின்னஞ்சிறு மீன்.

மனிதனைத் தேடி கடலுக்குள் வேகமாக நீந்தி, ஒரு வழியாக மனிதன் இருக்கும் இடத்தை அடைந்தது. அவனைப் பார்த்தவுடன் சுவையான உணவு கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளியது திமிங்கிலம்.

பிரம்மாண்டமாக வாயைத் திறக்க, ரப்பர் கயிறு, கத்தியுடன் மாலுமியும் அவன் உட்கார்ந்திருந்த மரப்படகும் அதன் வாய்க்குள் சென்றன.

திமிங்கிலத்தின் வாய்க்குள் போன மனிதன் சும்மா இருப்பானா? மேலும் கீழும் குதித்தான், பக்கவாட்டில் இங்கும் அங்கும் இடித்தான். கீழே படுத்துக் குட்டிக்கரணம் அடித்தான். கை, கால்களை வேகமாக ஆட்டினான். காலைத் தூக்கி நாட்டியம் ஆடினான். தலையால் முட்டி மோதினான். உருண்டான், தவழ்ந்தான், நடந்தான், குதித்தான், ஓடினான்.

மனிதன் செய்த ஆர்ப்பாட்டம் திமிங்கிலத்தை நிலைகுலைய வைத்தது. முழுங்கவும் முடியாமல், துப்பவும் இயலாமல் அவஸ்தைப்பட்டது.

”இந்த மனிதன் தொண்டையில் மாட்டிக்கொண்டு தொந்தரவு தருகிறான். இவனால் அடிக்கடி விக்கல் வருகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லாம் உன்னால் வந்த வினை” என்று சின்னஞ்சிறிய மீனைத் திட்டியது திமிங்கிலம்.

”அவனை வெளியே வரச் சொல்லுங்கள். அதுதான் ஒரே தீர்வு” என்று திமிங்கிலத்திடம் சொன்னது சின்னஞ்சிறு மீன்.

”மனிதா! நீ படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. போதும். அடிக்கடி விக்கல்வருகிறது. தொண்டை வலி தாங்க முடியவில்லை. தயவு செய்து வெளியே வந்துவிடு” என்று கெஞ்சியது திமிங்கிலம்.

”நேடால் கடற்கரைக்கு என்னை அழைத்துச் செல். பிறகு என் முடிவைச் சொல்கிறேன்” என்றான் வாய்க்குள் இருந்த மனிதன்.

”இந்த இம்சையிலிருந்து விடுபட அவன் சொன்னபடி நீங்கள் செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. மனிதன் காரியவாதி. புத்திசாலியும் கூட. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்ல மறந்துவிட்டேன்” என்று வருத்தத்துடன் சொன்னது சின்னஞ்சிறு மீன்.

வேகமாக நீந்தத் தொடங்கியது திமிங்கிலம். மாலுமி சொன்ன நேடால் கடற்கரையை அடைந்தவுடன் மனிதன் வெளியேற வசதியாக வாயை மீண்டும் பிரம்மாண்டமாகத் திறந்தது.

மனிதன் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான். ஆனால் சும்மா வரவில்லை. துண்டு துண்டாக வெட்டி ஒன்றாக இணைத்து, ரப்பர் கயிற்றால் கட்டிய மரக்கட்டைகளைத் தொண்டைக்குள் வைத்துவிட்டான்.

அன்று முதல் திமிங்கிலங்களால் பெரிய உருவம் கொண்ட எந்த உயிரினத்தையும் முழுங்கவே முடியவில்லை. சின்னச் சின்ன மீன்களையும் இறால்களையும் மிதவை உயிரினங்களையும் மட்டுமே உண்டு வாழ்கின்றன. இப்படித்தான் திமிங்கிலங்களுக்குத் தொண்டைச் சிறியதாக மாறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x