Last Updated : 21 Feb, 2018 10:47 AM

 

Published : 21 Feb 2018 10:47 AM
Last Updated : 21 Feb 2018 10:47 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: மேதைகள் பலவிதம்

 

ழுதி எழுதி ரொம்பக் களைத்துவிட்டது, நான் தூங்கப் போகிறேன். என்னை யாரும் எழுப்பக் கூடாது என்று சொல்லிவிட்டு தூங்கப் போவார் பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக். நிம்மதியாகத் தூங்கவும் ஆரம்பிப்பார். ஒரு மணி நேரம் ஆகியிருக்குமா? டக்கென்று எழுந்து உட்கார்ந்துவிடுவார். விளக்கைப் போட்டுக்கொண்டு எழுத ஆரம்பிப்பார். ஒரு வார்த்தை எழுதுவார். சமையலறைக்கு ஓடிச் சென்று காபி போட்டுக் குடிப்பார். நாலு வரி எழுதுவார். காபி தீர்ந்துவிடும். மீண்டும் ஒரு காபி போடுவார். மீண்டும் நான்கு வரி. மீண்டும் ஒரு காபி.

ஒரு நாளைக்கு அவர் எத்தனை பக்கம் எழுதுவார் என்று தெரியவில்லை. ஆனால் ஐம்பது கப் காபி குடிப்பார் என்று சொல்கிறார்கள். இரவு, பகல், மதியம் என்று வேறுபாடே இல்லை. எப்போதெல்லாம் விழித்திருக்கிறாரோ அப்போதெல்லாம் எழுதுவதில் ஆர்வம் காட்டியிருக்கிறார். எப்போதெல்லாம் எழுதும் ஆர்வம் வருகிறதோ அப்போதெல்லாம் காபி அவசியம்.51 வயதுவரை வாழ்ந்த பால்சாக் கிட்டத்தட்ட 50,000 கோப்பை காபி அருந்தியிருக்கலாம் என்று சிலர் கணக்கு போட்டுச் சொல்கிறார்கள்.

உளவியல் துறையின் தந்தை என்று கருதப்படும் சிக்மண்ட் பிராய்டுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் போதவில்லை. ஆயிரத்தெட்டு வேலைகள். ஆயிரத்தெட்டு புத்தகங்கள். எழுதவேண்டும், படிக்கவேண்டும், நோயாளிகளைப் பார்க்கவேண்டும். ஒரு நாளைக்கு 50 காபியா, எனக்கு ஒரு கப் தேநீர் குடிக்கக்கூட நேரம் இல்லை. கப்பை எடுத்து வாயில் வைக்கவேண்டும். உறிஞ்ச வேண்டும். கீழே வைக்கவேண்டும். பிறகு மீண்டும் எடுத்து உதட்டுக்குக் கொண்டு செல்லவேண்டும். சரியாக உதட்டில் வைத்தால்தான் உண்டு, தவறினால் நான் எழுதிக்கொண்டிருக்கும் காகிதத்தில் சிந்திவிடும். எனக்கு இந்த காபி, கீபி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார் அவர்.

டூத் பிரஷ் எடுத்து அதில் பேஸ்டை போடுவதற்கு நேரமாகும் என்பதால் அதைக்கூட அவர் செய்யமாட்டார். தினமும் வீட்டில் யாராவது முன்கூட்டியே எழுந்து பேஸ்டைச் சரியான அளவில் பிரஷ்ஷில் பிதுக்கி அவரிடம் கொடுக்கவேண்டும். துணிகளை யாராவது எடுத்து வைக்கவேண்டும். வீடு முழுக்கப் புத்தகங்களை அங்கும் இங்கும் பாதி மடங்கியும் பாதி திறந்தும் போட்டுவிடுவார். அவற்றை எல்லாம் எடுத்து அடுக்கி வைக்கவேண்டும். நான் எடுக்கவேண்டுமென்றால் கீழே குனிய வேண்டும், கையைப் புத்தகத்தில் வைக்கவேண்டும், புத்தகத்தைத் தூக்கவேண்டும், நிமிரவேண்டும், பிறகு அலமாரி வரை நடக்கவேண்டும்.. அடப்போங்கப்பா, சொல்லி முடிப்பதற்குள் ஐந்து நிமிடம் காணாமல் போய்விடும் என்று விறுவிறுவென்று நடந்து போய்விடுவார் பிராய்ட்.

பீத்தோவனுக்கும் காபி பிடிக்கும்தான். ஆனால் காபிக்கொட்டையைப் போட்டு அரைத்தோமா, இறக்கினோமா குடித்தோமா என்று அவரால் இருக்க முடியாது. மாபெரும் இசை மேதையல்லவா? எல்லாமே சரியான அளவில் சரியாக ஒன்று கலக்கவேண்டும். அவருடைய காபியை அவரே அரைத்துக்கொள்வார். சரியாக 60 காபி கொட்டைகளைக் கவனமாக எண்ணித் தேர்ந்தெடுப்பார். கூடவோ குறையவோ செய்தால் காபியே குடிக்கமாட்டார்.

குஸ்தாவ் மாலர் ஆஸ்திரியாவில் வசித்த உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர். காலை ஆறு மணிக்குத் தினமும் எழுந்துவிடுவார். 5.59-க்கு அல்ல, 6.01-க்கு அல்ல, மிகச் சரியாக, துல்லியமாக 6.00 மணிக்கு. ஒரு நிமிடம் முன்னே பின்னே எழுந்தாலும் வருந்துவார். பனி, மழை, விடுமுறை தினம் என்று எந்த வேறுபாடும் இல்லை. கட்டுப்பாடு முக்கியம் இல்லையா? சரி, எழுந்தவுடன் என்ன செய்வார்? வீட்டைவிட்டு எழுந்து ஓடு ஓடு என்று ஓடி பக்கத்தில் உள்ள காட்டுக்குப் போவார். அங்கே ஒரு மர வீடு இருக்கும். அது அவருக்கே அவருக்கான தனிமையான வீடு. அங்கே போய்ச் சேர்ந்ததும் அப்பாடா என்று நிம்மதியாக மூச்சு விடுவார். படிக்கவேண்டுமோ, இசை பழகவேண்டுமோ என்ன செய்வதாக இருந்தாலும் அங்கேதான்.

நடுவில் இடியே விழுந்தாலும் அசைந்துகொடுக்க மாட்டார். தப்பித்தவறி வழியில் நண்பர்கள் யாராவது ஹலோ குஸ்தாவ் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டால் என்ன செய்வார் தெரியுமா? வழக்கத்தைவிட இன்னும் வேகமாக ஓடிச் சென்றுவிடுவார். நான் நன்றாக இருக்கிறேன் என்று பதில் சொல்வதற்குள் பதினைந்து விநாடிகள் கடந்துவிடும். அதற்குள் நாலு வார்த்தை படிக்கலாம் அல்லது வயலினை இரண்டு இழு இழுக்கலாம். எனவே நண்பர்களையோ உறவினர்களோ அவ்வளவு ஏன், மனிதர்களைக் கண்டாலே ஓடி காட்டு வீட்டுக்குள் ஒளிந்துகொண்டுவிடுவார் குஸ்தாவ்.

விக்டர் ஹியூகோவுக்கு எழுதுவதற்கு முன்பு குளித்தே ஆகவேண்டும். இது சாதாரணமான விஷயம்தானே என்கிறீர்களா? நம்மைப் போல் சாதாரண நீரிலோ வெந்நீரிலோ அல்ல, ஐஸ் கட்டிகளைப் போட்டு ஜில்ஜில் என்று குளித்தால்தான் அவருக்குக் குளித்தது போலவே இருக்குமாம். நாம் தூங்கி எழுந்தால் போதாது.

உடலும் புத்துணர்ச்சியுடன் விழிக்கவேண்டும். மூளை சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். கையும் காலும் பரபரவென்று பறக்கவேண்டும். அடுத்து, அடுத்து வரிகள் எழுதிக்கொண்டே போகவேண்டும். ஒரு நாவல் எழுதுவதென்றால் சும்மாவா? அதனால்தான் இந்த ஐஸ் குளியல்.

மேதைகள் என்றாலே இப்படி ஏதாவது வித்தியாசமான வழக்கம் இருக்கும் போலிருக்கிறது. உங்களுடைய விசித்திரமான வழக்கம் என்ன?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x