Last Updated : 17 Jan, 2018 11:24 AM

 

Published : 17 Jan 2018 11:24 AM
Last Updated : 17 Jan 2018 11:24 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: பறவையும் குழந்தையும்

 

ரு நாள் பாட்டி ஏதோ துணி தைத்துக்கொண்டிருந்ததைக் கண்டார் குட்டிப் பெண் ஸாய். என்ன தைக்கிறாய் பாட்டி என்று கேட்டபோது, பாட்டி எடுத்துக் காட்டினார். மிகவும் சிறிய ஆடை. அந்த வீட்டில் ஸாய் உள்பட பல குழந்தைகள் இருந்தார்கள் என்றாலும் அந்த ஆடைக்குள் நுழையும் அளவுக்கு அவ்வளவு குட்டியாக யாரும் இல்லை. “இது யாருக்குப் பாட்டி?” என்றார் ஸாய். ‘வீட்டுக்குப் புதிதாக வந்திருக்கும் சிட்டுக் குருவிக்குதான்” என்று பதில் வந்தது.

ஸாய் கடகடவென்று சிரித்துவிட்டார். ”ஐயோ என்ன பாட்டி, குருவிக்குப் போய் யாராவது துணி தைப்பார்களா? நீங்கள் தைத்தாலும் குருவி போட்டுக்கொள்ளுமா?’

“என்னிடம் கேட்காதே, போய் சலீம் அலியிடம் கேட்டுக்கொள்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் தைக்கத் தொடங்கினார் பாட்டி.

சலீம் மாமூவை எப்போதும் பாட்டி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்துகொண்டிருப்பார். என்ன இருந்தாலும் அவருடைய தம்பியல்லவா? அதனால் ரொம்பவே செல்லம். ’பாட்டி, அப்படியென்றால் நான் செல்லமில்லையா?’ என்றால், ‘உன்னைவிட சலீம் குழந்தை’ என்பார். அது சரி, குழந்தைதானே குருவிக்கு துணி தைக்கச் சொல்லும்?

மாமூ என்றுதான் சலீமை அழைப்பார் ஸாய். இன்று என்னையும் பறவைகளைப் பார்க்க அழைத்துக்கொண்டு போயேன் என்று கத்துவார். அல்லது எப்போதும் பறவையையே பார்க்காதே, இதோ ஒரு சிறுத்தை உன்மீது ஏறுகிறது பார் மாமூ என்று சொல்லி சீறியபடி அவருடைய தோள்மீது பாய்வார். பாட்டிதான் ஓடிவந்து அதட்டுவார். “ஸாய், கொஞ்சம் அமைதியாக இருக்க மாட்டாயா? உன் மாமூ எப்போது ஓய்வாக இருக்கிறாரோ அப்போது அவரிடம் உன் வம்பை வைத்துக்கொள்” என்பார். “அடப்போ பாட்டி, அவர் எப்போது பார்த்தாலும் ஏதாவது வேலை செய்துகொண்டுதான் இருப்பார். எப்போதுதான் அவரைச் சீண்டுவது?”

சலீம் அலிக்குப் பறவைகளைத் தேடிச் செல்வது பிடிக்கும் என்றால், ஸாய்க்கு வீட்டில் என்னென்ன தின்பண்டங்கள் இருக்கின்றன என்று தேடிச் செல்வது பிடிக்கும். பிஸ்கட், பழம், கேக் என்று என்ன கிடைத்தாலும் எடுத்துச் சாப்பிட்டுவிடுவார். பிறகு நேரே சலீம் அலியின் அறைக்குள் சென்று அங்கிருப்பதை எல்லாம் வேடிக்கை பார்ப்பார். அந்த அறைக்குப் போவதற்குக் காரணம் ஒன்றுதான். அங்கே போகாதே என்று பாட்டி சொல்லியிருந்தார்.

“ஏ, குட்டிக் குரங்கு வா வெளியில் போகலாம்” என்று சலீம் மாமூ ஒருமுறை அழைத்தார். துள்ளிக்கொண்டு ஓடினார் ஸாய். இது குருவி, அது காக்கா என்று தொடங்கி பலவிதமான பறவைகளை ஸாய்க்கு அறிமுகப்படுத்தினார் சலீம். பறவைகள் என்னென்ன சாப்பிடும்? எப்படிக் கூடு கட்டும்? எப்படித் தூங்கும்? எப்போது சண்டை போடும்? எப்போது பறக்கும்? எல்லாவற்றையும் பொறுமையாக விளக்கினார்.

அடிக்கடி தேர்வும் வைப்பார். “இப்போது கண்ணை மூடிக்கொள். ஒரு பறவை கத்துவது கேட்கிறதா?” என்பார். எங்கே மாமூ, எதுவும் கேட்கவில்லையே என்று சொன்னால், ஒரு காதைப் பிடித்து செல்லமாகத் திருகுவார். ”அப்படியே சிலை போல் அசையாமல் இரு. கண்ணைத் திறக்காதே. நன்றாகக் காதைத் தீட்டிக்கொண்டு கேள். இப்போது கேட்கிறதா?”. ’ஆம் கேட்கிறது’ என்று தலையசைத்தார் ஸாய். “இப்போது சொல், அது என்ன பறவை?” ஸாய் பல நிமிடங்கள் யோசித்துவிட்டு, கத்தினார். “புள்ளி வைத்த புறா! சரியா மாமூ?” சலீம் குனிந்து ஸாயின் இன்னொரு காதைப் பற்றிக்கொண்டார்.

17chsuj_Idam.jpg

“ஏ, குரங்குக் குட்டி, இப்போது சத்தம் போட்ட பறவையின் பெயர் அணில். கண்ணைத் திறந்து நன்றாகப் பார்!”

இன்னொரு நாள் சலீம் மாமூ வெளியில் சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்ட பிறகு அவர் அறைக்குள் நுழைந்தார் ஸாய். சத்தம் போட்டுப் பாடினார். சுற்றிச் சுற்றி ஓடினார். அணில் போல் கத்திப் பார்த்தார். படுக்கையில் ஏறி குதி குதி என்று குதித்தார். நோட்டுப் புத்தகங்களை எடுத்து தூக்கிப் போட்டு விளையாடினார். சலீம் அலி மாதிரியே கண்ணாடி போட்டுக்கொண்டு விறுவிறுவென்று நடந்தார். சட்டென்று கதவு திறக்கும் ஓசை கேட்டது. திருதிருவென்று விழித்தபடி கட்டிலுக்கு அடியில் சென்று படுத்துக்கொண்டார் ஸாய்.

யார் இப்படிச் செய்தது என்று அங்கும் இங்கும் தேடினார் சலீம் மாமூ. பிறகு நிதானமாக எல்லாப் புத்தகங்களையும் அடுக்கி வைத்துவிட்டு, கட்டிலில் படுத்துத் தூங்கிவிட்டார். ஸாய்க்கு ஒரே உற்சாகம். அதற்குப் பிறகு பலமுறை உள்ளே நுழைந்து எல்லாவிதமான அட்டகாசங்களையும் செய்துவிட்டுச் சத்தம் போடாமல் கட்டிலுக்குக் கீழே ஒளிந்துகொண்டுவிடுவார். ஒருமுறைகூட மாமூ கண்டுபிடித்ததே இல்லை.

ஒருநாள் பாட்டி கொடுத்த மாம்பழத்தைக் கடித்தபடியே யோசித்தார் ஸாய். சலீம் மாமூவின் கண்ணில் சிக்காத பறவைகளே இல்லை என்கிறார்கள். பெரிய மேதை என்கிறார்கள். எழுத்தாளர் வேறு. ஆனால் கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்க்கக்கூட இவருக்குத் தெரியவில்லையே? பாட்டி சொன்னது உண்மை. இந்த வீட்டில் இவர்தான் நிஜமான குழந்தை.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x