Last Updated : 10 Jan, 2018 11:43 AM

 

Published : 10 Jan 2018 11:43 AM
Last Updated : 10 Jan 2018 11:43 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: மண்ணே வணக்கம்

 

ஆ,

அத்தனை விலையா என்று எல்லோரும் வாய் பிளக்கும் வகையில் ஒரு கார் பொம்மையை வாங்கிக்கொடுத்தார் ஒரு பெரும் பணக்கார அப்பா. ஆசையோடு கையில் வாங்கிப் பார்த்துவிட்டு அடுத்த நொடியே வீசியெறிந்துவிட்டது குழந்தை. அப்பாவுக்குப் புரியவில்லை. இருப்பதிலேயே விலை உயர்ந்த பல பொம்மைகளையும் துணிகளையும் வாங்கிக் கொடுத்தாலும் ஏன் இந்தக் குழந்தை அவற்றைக் கடாசிவிடுகிறது? என்ன வாங்கிக் கொடுத்தால் இந்தக் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்?

விரைவில் அவருக்கு விடை கிடைத்தது. வீட்டில் உள்ள எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அந்தக் குழந்தை தோட்டத்தில் உள்ள மண்ணைக் கை நிறைய அள்ளி அள்ளியெடுத்து பாதியைத் தன்மீதும் மீதியை அருகிலுள்ள நாய் குட்டிமீதும் கொட்டி விளையாடி மகிழ்ந்துகொண்டிருந்தது. அப்பா அதிர்ந்து போய் அப்படியே நின்றுவிட்டார். தங்கமும் வைரமும் கொடுக்காத மகிழ்ச்சியை போயும் போயும் மண்ணா கொடுக்கவேண்டும்? யாராவது பார்த்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

குழந்தைகளுக்கு இந்தக் கவலை இல்லை. ஓடியாடி விளையாடும் வயது வந்த பிறகும் மண்ணில் விழுந்து புரள்வதுதான் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. மண்ணில் விழுந்தால்தான் வெள்ளைச் சட்டை அழகாகும். கை விரல்களிலிருந்து மண்ணை நழுவவிடுவதுதான் அதிகபட்ச மகிழ்ச்சி. விமானத்தில் அழைத்துச் சென்று கடற்கரையோர நட்சத்திர விடுதியில் தங்கவைத்தாலும் அடித்துப் பிடித்து ஓடிவந்து மணலில் கால்களையும் கைகளையும், முடிந்தால் தலையையும் பதித்து விளையாடுவதைத்தான் குழந்தைகள் விரும்புகிறார்கள். மாடி மேல் மாடி வைத்து கட்டினாலும் சொந்த கையால் உருவாக்கும் மணல் வீட்டுக்கு இணையாகுமா?

ஆய்வாளர்களும் யோசித்திருக்கிறார்கள். ஏன் மண் மீது இத்தனை ஆசை குழந்தைகளுக்கு? ஆராய்ந்தபோது குழந்தைகள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையில் மணல் பிடிக்கும் என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். மண் மட்டுமல்ல, கல், தூசி, புழுதி எல்லாமே விலங்குகளுக்குப் பிடித்தமானவை. மண்ணிலிருந்து புறப்படும் செடி, கொடி, மரம் எல்லாவற்றோடும் விலங்குகள் விளையாடி மகிழ்வது வழக்கம்.

பாம்பு போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்குகளுக்கு உடல் முழுக்க மண்ணில்தான் இருக்கும். இங்கே ஒரே தூசியாக இருக்கிறது, அந்தப் பக்கம் போய்விடுவோம் என்று பாம்புகளால் ஒதுங்கிச் செல்ல முடியுமா? எறும்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். ரயில் வண்டி போல் வரிசையாக மண்ணின் மீது ஜாலியாக அவை நடந்துசெல்வதைப் பார்க்கலாம். மண்ணில்தான் உறங்குகின்றன, மண்ணில்தான் உணவை எடுத்துச் சென்று சாப்பிடுகின்றன. எலிகள் நிலத்தில் உள்ள பொந்துகளில் தங்கியிருக்கின்றன என்பதால் அவற்றுக்கும் மணல் என்றால் ரொம்பவே பிரியம்.

குட்டி எலிக்கு மட்டுமல்ல பெரிய யானைக்கும் மணல் பிடிக்கும். பொழுது போகவில்லை என்றால் மண்ணை அள்ளி வீசி விளையாடும். குட்டி யானைகள் மணல் குளியல் நடத்துவதைப் பார்க்கலாம். வெயில் சுட்டெரிக்கும்போது இப்படிப் பல விலங்குகள் மணலை அள்ளி உடல் மேலே போட்டுக்கொள்வது வழக்கம். அப்படிச் செய்ய முடியாதபோது கீழே படுத்து ஆனந்தமாக உருள்வதைப் பார்க்கலாம்.

ஒட்டகங்களுக்கு மணலில் கால் பதித்தால்தான் நிம்மதியே பிறக்கும். குரங்குகளுக்கு மண் தரும் மகிழ்ச்சியை வேறு எதுவும் தருவதில்லை. காது, கண், மூக்கு, வால் எல்லாவற்றையும் மண்ணில் போட்டு மகிழ்ச்சியாக அழுக்காக்கிக்கொள்ளும். பிறகு உதறிவிட்டுக்கொள்ள வேண்டியதுதான். தூங்கி எழுந்ததும் மீண்டும் மண்ணில்தான் ஓடிப் போய் உருண்டு விளையாடும்.

மனிதனும் அடிப்படையில் ஒரு விலங்குதான் இல்லையா? மேலும், குரங்கு இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்துதான் மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள். அதே நேரம், மனிதர்களாக மாறிய பிறகும் சில பழைய பழக்கவழக்கங்களை மனிதர்கள் விடாமல் கடைபிடித்து வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான், மணல் விளையாட்டு என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள்.

குழந்தைகளுக்கு இயல்பாகவே மணல்மீது ஏறி அமர்ந்து, கையை காலை அழுக்காக்கிக்கொள்வது பிடிக்கும். இரண்டு கைகளாலும் இரண்டு கால்களாலும் நிலத்தில் தவழ்ந்து செல்லும்போது ஒரு யானைக்குட்டி அல்லது குரங்குக் குட்டி போல் குழந்தையும் இயல்பாக மண்ணை அள்ளியெடுத்து விளையாடுகிறது. அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

சரி, ஏன் வளர்ந்த பிறகு மணல் நமக்குப் பிடிப்பதில்லை? யார் சொன்னது பிடிக்கவில்லை என்று? யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற அச்சம்தான் வளர்ந்த மனிதர்களை மணலிடமிருந்து பிரித்து வைத்திருக்கிறது. இது தவிர இன்னொரு காரணமும் இருக்கிறது. நாம் நன்றாக வளர்ந்து இரண்டே கால்களால் நடக்கத் தொடங்கியதுமே நிலத்திலிருந்து நாம் பிரிந்து வந்துவிட்டோம். காலணிகள் இல்லாமல் வெளியில் நாம் போவதில்லை. காலில்கூட நிலம் படுவதில்லை. கைகளையும் சுத்தமாகவே வைத்திருக்க விரும்புகிறோம் என்பதால் தப்பித் தவறியும் நிலத்தையோ மணலையோ கல்லையோ தொடுவதில்லை. இவையெல்லாம் அழுக்கு. கீழே இருக்கும் மணலை அல்லது கல்லைத் தொடுவது நாகரிகம் அல்ல என்றே எல்லோரும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் கீழே விழுந்த ஒரு பொருளை எடுக்கக்கூட நாம் தயங்குகிறோம்.

குழந்தைகளுக்குத் தயக்கமோ அச்சமோ இல்லை. அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக விளையாட விரும்புகிறார்கள். எனவே எதுவும் அவர்களைத் தடுப்பதில்லை. காரோ விமானமோ பளிங்கு போன்ற வீடோ அவர்களைக் கவர்வதில்லை. தங்கமும் வைரமும் கொடுத்தால்கூடத் தூக்கிப் போட்டுவிடுவார்கள். இவையெல்லாம் பெரியவர்களின் விளையாட்டுப் பொருள்கள். குழந்தைகளுக்கு மணல் போதும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x