Last Updated : 03 Jan, 2018 10:55 AM

 

Published : 03 Jan 2018 10:55 AM
Last Updated : 03 Jan 2018 10:55 AM

கதை: எது உண்மையான பரிசு?

கு

றிஞ்சிக் காட்டில் அழகான குரங்கு குடும்பம் ஒன்று வசித்துவந்தது. ஒரு நாள் தந்தைக் குரங்கும் தாய்க் குரங்கும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தன.

அப்பா, அம்மாவை நோக்கி ஆர்வத்தோடு ஓடிவந்தது குட்டிக் குரங்கு பிங்கி.

“பிங்கி, நன்றாக விளையாடினாயா? ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று அன்போடு கேட்டது தாய்க் குரங்கு.

“அம்மா, எனக்குப் பசியில்லை.”

“இன்று வித்தியாசமான விளையாட்டு ஒன்றைச் சொல்லித் தரலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம்” என்றது தந்தைக் குரங்கு.

“ஜாலி... எனக்கும் ஒரே விளையாட்டை விளையாடி சலிப்பாக இருக்கிறது. என்ன விளையாட்டு என்று சொல்லுங்க அப்பா” என்றது மகிழ்ச்சியுடன் பிங்கி.

“இது உன் அறிவுக்கான விளையாட்டு. நாங்கள் ஒரு புதிரைக் கூறுவோம். சரியான பதிலைக் கூறினால் உனக்கு ஒரு பரிசு தருவோம்” என்றது தாய்க் குரங்கு.

“எப்படியாவது அந்தப் பதிலைக் கண்டுபிடித்து, பரிசை வாங்காமல் விடமாட்டேன்” என்று துள்ளிக் குதித்தது பிங்கி.

“தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்? இந்தப் புதிருக்குச் சரியான பதிலைச் சொன்னால் உனக்குப் பரிசு உண்டு. ஆனால் இன்று மாலைக்குள் நீ விடையைச் சொல்லிவிட வேண்டும்” என்றது தந்தைக் குரங்கு.

“இன்று மாலைக்குள் சொல்லி அந்தப் பரிசைப் பெற்றே தீருவேன்” என்று சொன்னபடியே கிளம்பியது பிங்கி.

“நண்பா, எனக்கு ஒரு உதவி செய்வாயா?” என்று பஞ்சவர்ணக்கிளியிடம் கேட்டது பிங்கி.

“என்ன உதவி வேண்டும்?”

“ஒரு புதிருக்கு விடை தெரிய வேண்டும்.”

“என்ன புதிர்?” என்று பஞ்சவர்ணக்கிளி தன் இறக்கைகளைச் சிலுப்பியபடிக் கேட்டது.

“தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்? விடை உனக்குத் தெரியுமா?” என்றது பிங்கி.

“பிங்கி, விடையை உனக்கு நாளை சொல்லட்டுமா?” என்றது பஞ்சவர்ணக்கிளி.

“எனக்கு இன்று மாலைக்குள் விடை தெரிய வேண்டுமே?” என்று பதற்றப்பட்டது பிங்கி.

“நாம் மயிலிடம் கேட்டுப் பார்ப்போம்” என்று பிங்கியை அழைத்துக் கொண்டு கிளம்பியது பஞ்சவர்ணக்கிளி.

“மயிலே எங்களுக்கு ஒரு உதவி செய்வாயா?” என்றனர் பிங்கியும் பஞ்சவர்ணக்கிளியும்.

“என்ன உதவி வேண்டும்?”

“தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்?” என்று சொல்லிவிட்டு, ஆர்வமாகப் பார்த்தது பிங்கி.

யோசித்தபடியே நின்றுகொண்டிருந்த மயில், “மழை மேகம் வருகிறது. நான் வருகிறேன்” என்று தோகையை விரித்தபடி சென்றுவிட்டது.

“எனக்கு அந்தப் பரிசு கிடைக்காதா?” என்று கவலைப்பட்டது பிங்கி.

“கவலைப்படாதே பிங்கி. பரிசு உனக்குத்தான். அதோ என் புத்திசாலி நண்பன் வருகிறான். குட்டி யானையே, புதிருக்கு விடை சொல்லி, என் நண்பனுக்கு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது பஞ்சவர்ணக்கிளி.

“புதிர் என்ன?”

பிங்கி சொன்னவுடன், “ம்… இது ரொம்ப எளிமையான புதிராக இருக்கிறதே! இதற்காகவா இவ்வளவு நேரம் அலைந்தீர்கள்? அதோ தெரிகிறதே அந்தத் தேங்காய்தான் விடை” என்றது குட்டி யானை.

“நீ உண்மையிலேயே புத்திசாலிதான். புதிருக்கான விடையைக் கூறிவிட்டாயே! நன்றி நண்பா. உன்னுடைய நட்பு கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றது பிங்கி.

“பஞ்சவர்ணக்கிளியே, ஒரு நல்ல நண்பனை அடையாளம் காட்டியதற்கும், விடை தெரிய உதவியதற்கும் நன்றி. உங்களைப் பிறகு சந்திக்கிறேன்” என்று வேகமாகக் கிளம்பியது பிங்கி.

“அம்மா, அப்பா… பரிசு எங்கே?” என்றபடியே வந்தது பிங்கி.

“புதிருக்குப் பதில் கூறாமல் பரிசு எப்படித் தர முடியும்? பதிலைக் கண்டுபிடித்துவிட்டாயா?” என்றது தாய்க் குரங்கு.

“நீங்கள் சொன்ன புதிருக்கான விடை தேங்காய் தானே?”

“சரியாகச் சொல்லிவிட்டாயே! இந்தப் பரிசு உனக்குத்தான்” என்று ஒரு பழக்கூடையை, பிங்கியிடம் தந்தது தந்தைக் குரங்கு.

“ஆஹா! பரிசை ஜெயித்துவிட்டேன்” என்று துள்ளிக் குதித்தது பிங்கி.

“பிங்கி, இந்தப் புதிருக்கு விடை தேடிச் சென்றதில் நீ கற்றுக்கொண்டது என்ன?” என்றது தாய்க் குரங்கு.

“அம்மா, நீங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல் வாழ்வில் வெற்றி பெற நண்பர்கள் தேவை. ஆனால் அந்த நண்பர்களும் புத்திசாலி நண்பர்களாக இருந்தால் சரியான நேரத்தில் நமக்கு உதவி, நாம் வெற்றி பெற துணை நிற்பார்கள் என்ற நல்ல பாடத்தை இன்று கற்றுக் கொண்டேன்” என்றது பிங்கி.

“பிங்கி, புதிருக்கான விடையைக் கூறியதற்காக நாங்கள் கொடுத்த பரிசைவிடவும் உனக்குக் கிடைத்த புத்திசாலி நண்பன்தான் நீ பெற்ற உண்மையான பரிசு! அதுதான் உன் வெற்றி” என்றனர் தாய்க் குரங்கும் தந்தைக் குரங்கும்.

புத்திசாலி நண்பனைப் பரிசாக பெற்ற மகிழிச்சியில் மீண்டும் துள்ளிக் குதித்தது பிங்கி.

ஓவியங்கள்: பிரபுராம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x