Last Updated : 27 Dec, 2017 10:53 AM

 

Published : 27 Dec 2017 10:53 AM
Last Updated : 27 Dec 2017 10:53 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு கதையின் கதை

 

ன்னருக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. நீண்ட நாட்களாக அவரை ஒரு கேள்வி குடைந்துகொண்டிருந்தது. கதை என்றால் என்ன? தன்னுடைய அரண்மனையில் இருந்த புத்திசாலி அமைச்சரிடம்கூடக் கேட்டுப் பார்த்துவிட்டார். அப்படியொன்றை நான் பார்த்ததே இல்லை மன்னா என்று சொல்லிவிட்டார் அவர்.

ஒரு நாள் அரண்மனையில் திருடரிடம் விசாரணை நடந்துகொண்டிருந்தது. நான் திருடவேயில்லை என்று ஆரம்பித்து அந்தத் திருடர் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். திராட்சைப் பழம் சாப்பிடுவதில் மும்முரமாக இருந்த மன்னர் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். ”இப்போது என்ன சொன்னாய்? திரும்பவும் சொல்?” அந்தத் திருடர் திருதிருவென்று விழித்தபடியே சொன்னார்: ‘’மன்னா, பக்கத்து ஊரில் போன வாரம் கதை கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது...”

மன்னர் அரியணையிலிருந்து துள்ளிக்குதித்து எழுந்தார். ”என்ன கதை? யாரிடம் கேட்டாய்? என்ன கேட்டாய்?” திருட்டு குறித்த விசாரணை, கதை குறித்த விசாரணையாக மாறிவிட்டது. உடனே சில வீரர்கள் அந்தத் திருடரைக் குதிரை வண்டியில் உட்கார வைத்து அவர் சொன்ன இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். யாரிடமிருந்து அவர் கதை கேட்டதாகச் சொன்னாரோ அவரை மன்னரிடம் அழைத்துச் சென்றார்கள்.

கொஞ்சம் வயதானவர். இடுப்புவரை தலைமுடி. வெள்ளை தாடி. கோல் ஒன்றை ஏந்தியபடி அவர் நடந்துவந்தார். மன்னர் ஆர்வத்துடன் அவரை நெருங்கினார். ”ஐயா, நீங்கள் கதை சொல்பவர் என்று கேள்விப்பட்டேன். கதை என்றால் என்ன? அது இடமா, பொருளா, பெயரா அல்லது விலங்கா? உடனே சொல்லுங்களேன்.”

அந்தப் பெரியவர் அமைதியான குரலில் பதிலளித்தார்: ”மன்னா, கதை என்றால் என்னவென்று சொல்வது கடினம். வேண்டுமானால் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். கேட்டுவிட்டு நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.”

மன்னர் மகிழ்ச்சியுடன் தலையசைத்தார். ”சொல்லுங்கள், சொல்லுங்கள், அதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

பெரியவர் சிரித்தார். ”கதை கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது, மன்னா. கதை சொல்பவர் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கவேண்டும். கதை கேட்பவர் அவருக்குக் கீழே அமரவேண்டும். அப்போதுதான் கதை வரும். மேலும், நான் சொல்லும்போது ம், ம் என்று சொல்லிக்கொண்டே வரவேண்டும். அப்போதுதான் கதை வளரும்.”

மன்னருக்குத் தயக்கம். அதெப்படி நான் கீழே அமர்வது? நான் எப்படி ம், ம் என்று சொல்வது? அப்படிச் சொல்வது ஒரு மன்னருக்கு அழகா?

வழக்கம்போல் அந்தப் புத்திசாலி அமைச்சர்தான் உதவிக்கு வந்தார். ஒரு மேடையில் பெரியவரை அமர வைத்தார். திருடரை அழைத்துவந்து கீழே உட்கார வைத்தார். பெரியவர் திருடரைப் பார்த்து கதை சொல்லவேண்டும். திருடர் ம், ம் என்று சொல்லிக்கொண்டே வரவேண்டும். அரியணையில் இருந்து மன்னர் கதையைக் கேட்கலாம். எப்படி?

பெரியவர் கதை சொல்ல ஆரம்பித்தார். ஓர் ஊரில் ஒரு காடு. ம், ம் என்றார் திருடர். அங்கே ஒரு சிங்கம். ம், ம். மன்னரும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார். பத்து நிமிடங்கள் போனது. பிறகு அரை மணி நேரம். பிறகு ஒரு மணி நேரம்.

மன்னர் விருட்டென்று அரியணையில் இருந்து எழுந்தார். திருடனை நகரச் சொல்லிவிட்டுக் கீழே அமர்ந்தார். ம், சொல்லுங்கள் என்றார். பெரியவர் புன்னகையுடன் கதையைத் தொடர்ந்தார். மன்னர் வைத்த கண் வாங்காமல் கேட்டுக்கொண்டிருந்தார். கதை முடியும்வரை அவர் நகரவில்லை. ம், ம் தவிர அவர் வாயிலிருந்து எதுவும் வரவில்லை. கதை முடியும்வரை திராட்சையாவது முந்திரியாவது?

மன்னர் எழுந்துகொண்டதும் அமைச்சர் ஓடோடிவந்தார். ”மன்னா, நீங்கள் போய் கீழே உட்காரலாமா?” மன்னரின் முகம் மலர்ந்திருந்தது. ”அமைச்சரே, பெரியவர் திருடரைப் பார்த்து கதை சொன்னால் அது திருடருக்கான கதை. என் முகத்தைப் பார்த்துச் சொல்லும்போதுதான் அது என் கதையாக மாறுகிறது. அடடா, தங்கமும் வைரமும் ஒரு கதைக்கு ஈடு ஆகுமா?”

அமைச்சரின் முகத்திலும் நிம்மதி. ”மன்னா, கதை என்றால் என்ன என்று இப்போது தெரிந்துவிட்டது.”

“அப்படியா, சொல்லேன் கேட்போம்” என்றார் மன்னர்.

“எதற்கும் இறங்கி வராத உங்களையே அது தரையில் உட்காரவைத்துவிட்டது. எனவே, புலி, சிங்கத்தைவிட கதை பயங்கரமான விலங்கு. தங்கம், வைரத்தைவிட உயர்ந்தது என்று நீங்களே சொல்லிவிட்டதால் அது ஒரு மதிப்புமிக்கப் பொருள். கதை கேட்கும்போது அது நம்மை காட்டுக்கே அழைத்துச் சென்றுவிட்டது. எனவே அது ஓர் இடம். கதைக்கு நம் மொழி தெரிந்திருக்கிறது. நம்மைப் போலவே பேசுகிறது. நம்மிடமும் பேசுகிறது. எனவே அதுவும் ஒரு மனிதர்தான். சரிதானே பெரியவரே?”

பெரியவர் தலையசைத்தார். ”நீங்கள் சொன்ன நான்கையும் ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால், கதை இயற்கையானது. கதைக்கு மன்னர், திருடர், அமைச்சர், ஏழை, பணக்காரர் என்று எந்த வேறுபாடும் இல்லை. எல்லோரிடமும் அது ஒன்றுபோலவே பேசுகிறது.”

சொல்லிவிட்டு அவர் மன்னரைப் பார்த்தார். ”பெரியவரே, இனி நான் ஆணவமாக இருக்கமாட்டேன். அனைவரையும் அன்புடன் நடத்துவேன். உங்கள் கதை என்னை மாற்றிவிட்டது” என்றார் மன்னர்.

”கதை என்னையும் மாற்றிவிட்டது. மன்னா, நான்தான் திருடினேன். எனக்குத் தண்டனை கொடுங்கள்” என்றார் திருடர்.

மன்னர் திருடரின் கைகளைப் பிடித்துக்கொண்டார். ”கதையை எனக்கு அறிமுகம் செய்ததே நீதான். உனக்குப் பரிசு அல்லவா கொடுக்கவேண்டும்!”

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x