Published : 27 Dec 2017 10:49 AM
Last Updated : 27 Dec 2017 10:49 AM

கதை: கடல் நாட்டின் கதை

டலுக்கு அடியில் ஒரு நாடு இருந்தது. அங்கே இருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள். ஆனால், கடலுக்கு வெளியிலிருந்து வரும் அந்நியர்களை அந்த நாட்டு மன்னர் அனுமதிக்க மாட்டார். அப்படி எப்போதாவது வருபவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிடுவார்.

ஒருநாள் கடற்கரையோர ஊரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றார். அப்போது கடல் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன், நாட்டை விட்டு வெளியே வந்தான். மீனவரின் தூண்டிலில் சிக்கிவிட்டான்.

“அட! ஒரு குட்டிப் பையன் சிக்கியிருக்கிறானே!” என்று மீனவர் ஆச்சரியமடைந்தார்.

அந்தச் சிறுவனின் உடல் மீன்போலவும் அவன் தலை மனிதத் தலையாகவும் இருந்தது. அவனை விடுவித்த மீனவர், தன் நாட்டு மன்னரிடம் சென்று இந்த விஷயத்தைக் கூறினார். மன்னர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

”இப்படிப்பட்ட விநோத மனிதர்களையும் கடலுக்கு அடியில் இருக்கும் நாட்டையும் காண ஆவலாக இருக்கிறேன். அதனால் கடலுக்குள் செல்லும் விதத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குங்கள்” என்று உத்தரவிட்டார் மன்னர்.

கப்பல் கட்டுவதில் திறமை வாய்ந்தவர்கள், குறுகிய காலத்தில் நீர்மூழ்கிக் கப்பலைச் செய்துகொடுத்தார்கள்.

அரசர் தன் பரிவாரங்களுடன் நீர்மூழ்கிக் கப்பலில் ஏறி, கடலுக்குள் சென்றார்.

“என்ன, இவ்வளவு ஆழத்துக்கு வந்தும் நாட்டைக் காணோம்!” என்றார் மன்னர்.

“மன்னா, நான் கடலுக்குள் சென்று, தேடிவிட்டு வருகிறேன்” என்று ஒரு பெண் கடலுக்குள் குதித்தார். சிறிது தூரம் சென்றதும் ஒரு சுவரில் முட்டிக்கொண்டார். சுவர் மேல் ஏறிப் பார்த்தார். அங்கே ஓர் அழகிய நாடு தெரிந்தது. தான் கண்டதை விரைந்துவந்து அரசரிடம் தெரிவித்தார். எல்லோரும் அந்த நாட்டுக்குள் செல்ல முயன்றார்கள்.

இந்தச் செய்தி கடல் நாட்டு மன்னருக்கு எட்டியது. அவர்களைச் சிறைப் பிடிக்க உத்தரவிட்டார். அப்போது நில நாட்டு மன்னர், கடல் நாட்டு மன்னரிடம் தங்களை விட்டுவிடுமாறும், அதற்குப் பதிலாக என்ன வேண்டுமானாலும் தருவதாகவும் வேண்டிக்கொண்டார்.

“நீங்கள் எங்கள் நாட்டைக் கடலுக்கு மேல் கொண்டுவந்து, நாங்கள் நிலத்திலும் வாழ வழி செய்தால் உங்களை விட்டுவிடுகிறேன்” என்றார் கடல் நாட்டு மன்னர்.

“ஏன் உங்கள் நாட்டை மேலே கொண்டு போக வேண்டும்? இதேபோல் ஒரு நாட்டை மேலே உருவாக்கலாமே?” என்றார் நாட்டைக் கண்டுபிடித்த பெண்.

இரு நாட்டு மன்னர்களும் அந்த யோசனையை ஏற்றார்கள்.

நில நாட்டு மக்கள் ஓராண்டு முழுவதும் உழைத்து, புதிய நாட்டை உருவாக்கினா்கள். அதில் மாடமாளிகைகளும் அகன்ற வீதிகளும் அழகுற அமைக்கப்பட்டன. குளங்களும் ஏரிகளும் உருவாக்கப்பட்டன. இந்த வேலை முடிந்த பிறகு கடல் நாட்டு மக்களுக்கு, தேர்ந்த பயிற்சியாளர்கள் நிலத்தில் வாழும் கலையை முறையாகக் கற்றுக்கொடுத்தார்கள். பதிலாக, கடல் நாட்டில் வாழும் விதத்தை அங்கிருந்த பயிற்சியாளர்கள் நில நாட்டு மக்களுக்குக் கற்பித்தார்கள். காலப்போக்கில் அந்த இரண்டு நாடுகளும் இணைந்தன. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் போய்வருவது எல்லோருக்கும் எளிமையாகிவிட்டது.

இப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, நாடுகளைப் பிடிக்கும் பேராசையில் ஒரு மன்னர் படையெடுத்துவந்தார். “நான் பாதி உலகத்தைக் கைப்பற்றிவிட்டேன். பூமியில் மீதியுள்ள நிலத்தையும் நீரையும் கைப்பற்றப் போகிறேன். என்னுடன் போரிடத் தயாரா?” என்று கேட்டார்.

“போரிடத் தயார். ஆனால், ஒரு நிபந்தனை. நாங்கள் தோற்றால் இரண்டு நாடுகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நீ தோற்றாலோ உன் ஆளுகையின் கீழ் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் விடுதலை அளித்துவிட வேண்டும்” என்றார்கள் நில, கடல் நாட்டு மன்னர்கள்.

தன்னிடம் மூன்றாயிரம் வீரர்கள் இருக்கும்போது வெறும் முந்நூறு வீரர்கள் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் படையெடுத்து வந்த மன்னர், நிபந்தைனையை ஏற்றுக்கொண்டார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு போர் என்று முடிவானது. அந்த மூன்று மாதங்களில் கடல், நில நாட்டுப் படைகள் முறையான பயிற்சியை மேற்கொண்டன. இதுவரை பயிற்சி பெறாமலிருந்த விவசாயிகளும் பெண்களும்கூட இப்போது பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். எதிரிப் படைகள் வென்றுவிடுவோம் என்ற நினைப்பில் பயிற்சி எடுத்துக்கொள்ளவில்லை.

குறித்த நாளும் வந்தது. போர் தொடங்கியது. போரில் கடல், நில நாட்டு மன்னர்களும் மக்களும் பெருவெற்றி பெற்றார்கள். தோற்றுப் போன அரசரின் ஆளுகையின் கீழ் அடிமைப்பட்டிருந்த அனைத்து நாடுகளும் விடுதலை பெற்றன.

- நீரோன் காளி,

பத்தாம் வகுப்பு, லட்சுமி பள்ளி,

மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x