Last Updated : 06 Dec, 2017 11:07 AM

 

Published : 06 Dec 2017 11:07 AM
Last Updated : 06 Dec 2017 11:07 AM

தாய்லாந்து கதை: வாசனையைத் திருட முடியுமா?

 

தா

ய்லாந்து நாட்டின் மிகவும் பழமையான கிராமம் ‘பன் தா சோவன்’. அங்கு வசித்த பூன் நாம் மிகவும் ஏழ்மையானவர். நகரத்தில் வசிக்கும் உறவினரைச் சந்திக்கக் கிளம்பினார். பகல் முழுவதும் கால்கடுக்க நடக்க வேண்டியிருந்தது.

அவரது மனைவி, சாதம் மட்டும் கொடுத்து அனுப்பியிருந்தார். வசதி இல்லாததால் காயோ, குழம்போ கொடுத்து அனுப்பவில்லை.

ஒரு செல்வந்தர் வீட்டைக் கடக்கும்போது கமகமவென்று கறிக் குழம்பு வாசனை வந்துகொண்டிருந்தது. உடனே பூன் நாம்க்குப் பசி எடுத்தது. அந்த வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் அமர்ந்து, வசனையைப் பிடித்தபடியே பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டார்.

திருப்தியாகச் சாப்பிட்டு முடித்ததும் செல்வந்தர் வீட்டுச் சமையல்கார அம்மாவிடம், குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அவரும் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.

”அம்மா, நீங்கள் பிரமாதமாகச் சமைப்பீர்கள் போலிருக்கிறது! வாசனையே அருமையாக இருந்தது. அந்த வாசனையைப் பிடித்துக்கொண்டே வெறும் சாதத்தை வேகமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டேன். இல்லை என்றால் ஒரு வாய் சாதம் கூடச் சாப்பிட்டிருக்க முடியாது. உங்களுக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார் பூன் நாம்.

சமையல்கார அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த நேரம் செல்வந்தர் சாப்பிட வந்தார். அவருக்கு உணவு பரிமாறினார்.

“என்னம்மா, குழம்பு கூட சரியா வைக்கத் தெரியலை. இதை எப்படிச் சாப்பிடுவது?” என்று கோபப்பட்டார் அந்தச் செல்வந்தர்.

”ஐயா, நான் வழக்கம்போல் நன்றாகத்தான் சமைத்தேன். நம் வீட்டு வாசலில் ஒருவர் கறிக்குழம்பின் வாசனையைப் பிடித்துக்கொண்டு, அவரது சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதனால்தான் இந்தக் குழம்பில் ருசி குறைந்துவிட்டது போலிருக்கிறது” என்று தயங்கியபடிச் சொன்னார் சமையல்கார அம்மா. இதைக் கேட்ட செல்வந்தர் மிகவும் கோபம் அடைந்தார்.

வேலைக்காரரை அழைத்து, உடனே பூன் நாம்மை அழைத்துவரச் சொன்னார். சிறிது நேரத்தில் பூன் நாம் செல்வந்தர் முன் நின்றார்.

“என் அனுமதி இல்லாமல் கறிக் குழம்பின் வாசனையைப் பிடித்திருக்கிறாய். அப்படி என்றால் வாசனையைத் திருடிவிட்டாய். அதனால் குழம்பின் ருசி குறைந்துவிட்டது. அதற்குரிய நஷ்ட ஈடு கொடு” என்று கேட்டார் செல்வந்தர்.

”ஐயா, நான் திருடவில்லை. வாசனை தானாகவே என்னிடம் வந்தது. நான் ஏழை. நஷ்ட ஈடு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை” என்றார் பூன் நாம்.

உடனே நியாயம் கேட்பதற்கு, கிராமத் தலைவரிடம் அழைத்துச் சென்றார் செல்வந்தர். நடந்ததைக் கேட்டறிந்தார்.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார் கிராமத் தலைவர். பிறகு, பூன் நாம்மிடம் இருந்த ஒரே ஒரு செப்பு நாணயத்தை எடுத்து, கிண்ணத்தில் போடச் சொன்னார்.

’அடடா! அந்தச் செப்பு நாணயம் எனக்குதான்!’ என்று நினைத்தார் செல்வந்தர்.

”பூன் நாம், உன் நாணயத்தை எடுத்துக்கொள். செல்வந்தரே, வாசனைக்குப் பதிலாக இந்தக் கிண்ணத்தில் உள்ள தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டுக்கும் சரியாகிவிட்டது” என்றார் கிராமத் தலைவர்.

கூடியிருந்த மக்கள் கிராமத் தலைவர் சொன்ன தீர்ப்பைக் கேட்டுப் பாராட்டினார்கள். செல்வந்தர் தலைகுனிந்தார்.

பூன் நாம் நிம்மதியாக உறவினர் வீட்டை அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x