Last Updated : 04 Oct, 2017 10:39 AM

 

Published : 04 Oct 2017 10:39 AM
Last Updated : 04 Oct 2017 10:39 AM

நைஜீரிய நாட்டுப்புறக் கதை: ஆமையும் மாய மத்தளமும்

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அரசர் ஒருவர் மாய மத்தளம் வைத்திருந்தார். அவர் அதை அடிக்கும் போதெல்லாம் பொன்னும் பொருளும் உணவும் கொட்டும்!

அரசாங்கத்திடம் இப்படிச் சேரும் செல்வங்களை எல்லாம் அவ்வப்போது பங்கு போட்டு மக்களுக்குக் கொடுத்துவிடுவார் அரசர். இதனால் மக்கள் அரசர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

மாய மத்தளம் ஒரே ஒரு விதியை மட்டும் அரசருக்கு விதித்திருந்தது. விழுந்து கிடக்கும் மரக்கிளை மீது அரசர் கால் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் மாய மத்தளம் மறைந்துவிடும் என்றும் அரசருக்குத் துன்பங்கள் வந்துசேரும் என்றும் எச்சரித்திருந்தது.

அந்த நாட்டில் வாழ்ந்துவந்த ஓர் ஆமை, தன் குடும்பத்தினருக்குப் பனம் பழம் பறிக்க மரத்தின் மீது ஏறியது.

”சே, என்ன வாழ்க்கை? எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த நாட்டு மக்களும் அரசரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! இதே நாட்டில் வசிக்கும் நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்?” என்று புலம்பியபடி மரத்தில் ஏறி, பனம் பழத்தைப் பறித்தது.

அப்போது பனம் பழம் கைதவறி கீழே விழுந்தது. மரத்தடியில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண், அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டார்.

கீழே இறங்கிவந்த ஆமை பனம் பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது.

”என்னுடைய பனம் பழத்தை நீ தின்றுவிட்டாயா?” என்று கோபத்துடன் கத்தியது.

”என்னை மன்னித்துவிடு. அது உனக்குரியது என்று தெரியாது. அதைத் தின்றதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.” .

“நாள் முழுவதும் நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். நீ எனது குடும்பத்துக்கான உணவைத் திருடிவிட்டாய். நான் அரசரிடம் நீ ஒரு திருடி என்று புகார் செய்யப் போகிறேன்” என்றது ஆமை.

”அட ஆமையே! நான் அரசரின் மனைவி. நீ உண்மையிலேயே புகார் செய்ய விரும்பினால் நானே உனக்குத் துணையாக அரண்மனைக்கு வருகிறேன்” என்றார் ராணி.

இருவரும் சேர்ந்தே அரசரைக் காணச் சென்றனர்.

விஷயத்தைக் கேட்ட அரசர் மிகவும் வருந்துவதாகச் சொல்லி, அதற்கு ஈடாக அரண்மனையிலிருந்து எதை வேண்டுமானாலும் நீ எடுத்துச் செல்லலாம் என்றார்.

இதைக் கேட்ட ஆமை மகிழ்ந்தது. அரண்மனையைச் சுற்றி மணிக்கணக்காக அலைந்தது. சிலவற்றைத் தொட்டுப் பார்த்தது. சிலவற்றை முகர்ந்து பார்த்தது. சூரியன் மறையும் நேரத்தில் ‘மத்தளத்தின்’ முன் வந்துநின்றது.

”நான் இந்த மாய மத்தளத்தை எடுத்துக்கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறியது ஆமை.

ஒரு பனம் பழத்துக்கு மாய மத்தளமா என்று எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். அரசர் வாக்குத் தவறாதவர். மத்தளத்தை ஆமைக்குத் தந்தார். ஆனால் ரகசியத்தை மட்டும் கூறவில்லை.

பேராசை கொண்ட ஆமை வீட்டை நோக்கி விரைந்தது. மாய மத்தளத்தின் அருமையைப் பற்றிச் சொன்னது. மத்தளத்தை அடித்தவுடன் ஏராளமான உணவுகள் தோன்றின. நிம்மதியாகச் சாப்பிட்டு, ஓய்வெடுத்துக்கொண்டது ஆமை. வேலை எதுவும் செய்யாததால் உடல் பருத்து சோம்பேறியாகிவிட்டது. ஊரைச் சுற்றிவந்து, வம்பு பேசிக்கொண்டிருந்தது.

ஒருநாள் ஆமை மரத்திலிருந்து இறங்கும்போது தடுக்கி, கீழே விழுந்தது. அப்போது ஆமையின் கால்கள் ஒடிந்து கிடந்த மரக்கிளையின் மீது பட்டுவிட்டன.

பசியுடனும் களைப்புடனும் வீட்டுக்குத் திரும்பிய ஆமை, மத்தளத்தை அடித்தது. ஆனால் உணவு எதுவும் வரவில்லை. ஆமையின் எதிரிகள் தோன்றின. சண்டையிட்டன.

மத்தளத்தின் மாய சக்தி மறைந்து போனதை உணர்ந்த ஆமை குடும்பம், ஆற்றங்கரைப் பக்கமாக ஓட்டம் பிடித்தது. அங்கு மறைந்து வாழ ஆரம்பித்தது.

மாய மத்தளம் எங்கு சென்றது என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை. அனைவரும் தேடிக்கொண்டிருக்கின்றனர். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x