Last Updated : 20 Sep, 2017 11:04 AM

 

Published : 20 Sep 2017 11:04 AM
Last Updated : 20 Sep 2017 11:04 AM

கதை: நகரும் வீடு

நீ

ண்ட தூரம் பயணம் செய்துவந்த நத்தை மிகவும் களைத்துப் போய், சுருண்டு படுத்தது. மேகம் விலகி, திடீரென்று சூரியன் எட்டிப் பார்த்தது. ஓடு இல்லாத மென்மையான நத்தையின் உடலில் வெயில் பட்டவுடன் துடித்தது. கண்களைத் திறந்து பார்த்த நத்தை பாதுகாப்பான இடத்தைத் தேடியது. எதிரில் ஒரு வளை இருந்ததைக் கண்டவுடன், மகிழ்ச்சியாக நுழைந்தது. ஓர் ஓரத்தில் படுத்து தூங்கிவிட்டது.

"ஏய், யார் நீ? என் வீட்டுக்குள் எப்படி வந்தாய்? எழுந்திரு" என்ற கோபமான குரல் கேட்டு, கண்களைப் பாதி திறந்தது நத்தை.

“நான் வேறு தேசத்திலிருந்து வருகிறேன். தாங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. என் தேசத்தில் உங்களைப்போல் யாரும் இல்லை. நான் ஒரு நத்தை" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டது.

"நத்தையோ... சொத்தையோ... நீ யாராக இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. உன் கதையும் எனக்குத் தேவை இல்லை. நீ இருப்பது என் வீட்டில். படுத்திருப்பது என் படுக்கையில். உடனே எழுந்து வெளியே செல். எனக்குத் தூக்கம் வருகிறது. நண்டாக இருப்பதன் கஷ்டம் அப்படி இருந்து பார்த்தால்தான் தெரியும். கொதிக்கும் மணலில் நாள் முழுவதும் அலைகிறேன். எதிரிகளிடமிருந்து தப்பிச் சென்று உணவு தேடுகிறேன். இந்த வீட்டைக் கட்ட எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறேன் தெரியுமா? என் கொடுக்கு முழுவதும் விஷம். கோபம் அதிகமாவதற்குள் ஓடிப் போய்விடு" என்றது நண்டு.

பாதி மூடிய விழிகளுடன் நத்தை வெளியேறியது. மெதுவாக ஊர்ந்து சென்ற நத்தையை அழகழகான கிளிஞ்சல்கள் ஈர்த்தன. இந்தச் சிவப்பு, மஞ்சள் கிளிஞ்சல் வீடு அழகாக இருக்கிறது! இதில் படுத்து ஓய்வெடுக்கலாம் என்று நினைத்து, ஒரு கிளிஞ்சல் மூடியைத் திறந்தது.

அடுத்த நொடி தூக்கி அடிக்கப்பட்டு, தூரத்தில் போய் விழுந்தது.

”அம்மா, எதுவோ என்னை விழுங்க வருகிறது” என்று அந்தக் கிளிஞ்சலில் இருந்து குரல் வந்தது. உடனே நத்தை அருகே ஏராளமான கிளிஞ்சல்கள் சூழ்ந்துகொண்டன.

”யார் நீ? முத்தெடுக்க மனிதன் உன்னை அனுப்பி வைத்தானா? உன்னால் உன் உடலையே இவ்வளவு கஷ்டப்பட்டுதான் நகர்த்த முடிகிறது. திருட்டுப் பொருளை எப்படிச் சுமக்கப் போகிறாய்? போய் விடு" என்று ஒரு கிளிஞ்சல் கத்தியது.

துக்கத்தையும் தூக்கத்தையும் சுமந்துகொண்டு மெதுவாக ஊர்ந்து மணலைவிட்டு வெளியே வந்தது நத்தை.

‘அட! அந்தப் புதர்ச் செடியின் இலையில் படுத்து நிம்மதியாகத் தூங்கலாம்! இதைப் பார்க்காமல் இவ்வளவு நேரம் அலைந்துவிட்டேனே!’ என்று நினைத்த நத்தை, ஓர் இலை மீது அமர்ந்தது. அசதியில் உடனே தூங்கிவிட்டது.

கீழே விழுந்த அதிர்ச்சியில் கண்விழித்தது நத்தை. புல் மெத்தையில் விழுந்ததால் காயம் ஏற்படவில்லை.

"யார் நீ?" என்று படபடத்தப்படி மஞ்சள் வண்ணப் பட்டாம்பூச்சி கேள்வி கேட்டது.

”நான் நத்தை…”

”என் இலையில் இனி அமர்ந்தால், நத்தை நீ செத்தாய்” என்று எச்சரித்தது பட்டாம்பூச்சி.

நத்தைக்கு ஒன்றும் புரியவில்லை.

”இலைகளில் நான் முட்டை இடுவேன். அவை சின்னச் சின்னப் புழுக்களாக மாறி இந்த இலையைத்தான் சாப்பிட்டு உயிர்வாழும். அவற்றுக்கு இறகு முளைக்கும் வரை நீ என் வீட்டில் அமர்வது உனக்கு நல்லதல்ல" என்றது பட்டாம்பூச்சி.

மணலில் இடம் இல்லை, வளையில் இடம் இல்லை, செடியில் இடம் இல்லை. இந்த நாட்டில் எனக்கென்று வீடு அமைக்க ஓர் இடமில்லை. நான் எப்படி வாழ்வது என்று யோசித்தது நத்தை.

”எனக்காக ஒரு வீட்டை நானே உருவாக்குகிறேன். அதை என் முதுகிலேயே வைத்துக்கொள்வேன். நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்வேன். என்னை யாரும் கேள்விக் கேட்க முடியாது” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட நத்தை, உடனே செயலில் இறங்கியது.

அன்றிலிருந்து நத்தைகள் தங்கள் வீடுகளை முதுகில் சுமந்தபடியே சென்றுகொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x