Last Updated : 13 Sep, 2017 12:02 PM

 

Published : 13 Sep 2017 12:02 PM
Last Updated : 13 Sep 2017 12:02 PM

ஆஸ்கர் வைல்ட் கதை: சுயநல பூதம்

ரம், செடி, கொடிகள் நிறைந்த அழகான தோட்டம். மலர்கள் பூத்துக் குலுங்க, இலைகள் மெல்ல அசைந்து தென்றலை வரவேற்றுக்கொண்டிருந்தன. பறவைகள் கீதம் பாட, புல்வெளி பசுமைக் கம்பளமாகப் படர்ந்திருந்தது. அந்தத் தோட்டம் ஒரு பூதத்துக்குச் சொந்தமானது. வெளியூர் சென்றிருந்த பூதம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதுதான் திரும்பியிருந்தது. தோட்டத்தைப் பார்த்து அதிர்ந்தது. தான் இல்லாதபோது சிறுவர்கள் தோட்டத்துக்குள் நுழைந்து விளையாடியதுடன், அதைப் பாழடித்ததையும் கண்டு கோபத்தில் கொப்பளித்தது.

விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பூதத்தின் கர்ஜனையைக் கேட்டு ஓடி ஒளிந்தனர். அவர்கள் மீண்டும் உள்ளே வருவதைத் தடுக்க, தோட்டத்தைச் சுற்றிப் பெரிய சுவரைக் கட்டி, அதன் மீது ‘அனுமதி இன்றி உள்ளே நுழைவோர் தண்டிக்கப்படுவர்’ என்று எழுதிவைத்தது.

பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய குழந்தைகள், தோட்டத்தைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டனர். குளிர் காலம் முடிந்து வசந்தகாலம் பிறந்தது. நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மரங்களும் செடிகளும் கொடிகளும் வசந்தகாலத்தை வரவேற்கப் பூத்துக்குலுங்கின. பறவைகள் ரீங்காரமிட்டன. ஆனால், சுயநலம் கொண்ட பூதத்தின் தோட்டத்தில் மட்டும் இன்னும் பனி பொழிந்துகொண்டிருந்தது. வசந்தகாலம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

குழந்தைகள் இல்லாததால் பூக்கள் பூக்கவில்லை. பறவைகள் பாடவில்லை. ஒரே ஒரு மொட்டு மட்டும் தலையைத் தூக்கிப் பார்த்தது. ‘அனுமதி இன்றி உள்ளே நுழைவோர் தண்டிக்கப்படுவர்’ என்னும் வாசகத்தைப் பார்த்தவுடன் ‘குழந்தைகள் இல்லாத தோட்டத்தில் நான் யாருக்காக மலர வேண்டும்?’ என்று எண்ணிப் பூக்கவில்லை. வசந்தம் வராததால் பனிப்பொழிவும் அங்கேயே தங்கிவிட்டது. இலைகளும் புல் தரையும் பச்சை ஆடைக்குப் பதில் வெள்ளை ஆடையை உடுத்திக்கொண்டன. பூதம் குழப்பம் அடைந்தது.

திடீரென்று பூதத்தின் காதுகளில் தேன் பாய்வதுபோல இனிமையான சங்கீதம் கேட்டது. அதுவரை வீசாத தென்றல் வீசியது. மலர்களின் வாசனை பரவியது. பூதத்துக்குத் திடீரென்று சந்தேகம். இத்தனை நாட்களாக வராத வசந்தம் இப்போது மட்டும் வருவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வெளியே பார்த்தது.

சுவரில் ஏற்பட்ட சின்ன ஓட்டை வழியே சிறுவர்கள் உள்ளே நுழைந்து விளையாடிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் உள்ளே வந்ததால் மலர்கள் பூத்தன. பறவைகள் கீதம் பாடின. ஆனால், ஒரே ஓர் இடத்தில் மட்டும் வசந்தம் வரவில்லை. பனியும் பொழிந்துகொண்டிருந்தது. அங்கே ஒரு சிறுவன் கிளையில் அமர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

இந்தக் காட்சிகள் பூதத்தின் மனதை மாற்றின. ‘குழந்தைகள் இல்லாத தோட்டத்தில் பசுமை இருக்காது, பூக்கள் பூக்காது, பறவைகள் பாடாது’ என்ற உண்மையைப் புரிந்துகொண்டது. மளமளவென்று கீழே இறங்கிய பூதம், கதவைத் திறந்து விட்டது. பூதத்தைப் பார்த்தவுடன் குழந்தைகள் நடுங்கின. ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் மரத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். மனம் திருந்திய பூதம், அவனை மெதுவாகத் தூக்கி மரக் கிளையில் உட்கார வைத்தது.

சிறுவன் மரக்கிளையில் உட்கார்ந்த உடனே பனி விலகியது, புல்வெளியில் பசுமை படர்ந்தது. பூக்கள் பூத்தன. தரையும் பச்சை ஆடைக்கு மாறியது. பறவைகள் பாடத் தொடங்கின. சிறுவன் குதூகலத்துடன் பூதத்தைக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிந்தான். பதிலுக்கு பூதமும் அந்தச் சிறுவனை வாரி அணைத்தது. பூதமும் சிறுவனும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் மற்ற குழந்தைகள் அச்சம் நீங்கி, மீண்டும் தோட்டத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் நுழைந்த அடுத்த நொடியே மீண்டும் பறவைகள் பாடின. தென்றலும் தவழத் தொடங்கியது.

வழக்கம்போல் குழந்தைகள் தோட்டத்துக்குள் வந்து விளையாடினர். ஆனால், பூதம் முத்தம் கொடுத்த அந்தக் குழந்தை மட்டும் வரவேயில்லை. மாதங்கள், வருடங்கள் உருண்டோடின. பூதத்துக்கும் வயதானது. சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு குழந்தைகள் விளையாடுவதை ரசித்துக்கொண்டே, ‘எனது தோட்டத்தில் எத்தனையோ பூக்கள் இருக்கின்றன. வேறு எங்குமே காண முடியாத அபூர்வ மலர்களும் உள்ளன. ஆனால், உலகிலேயே மிகச் சிறந்த அழகான பூக்கள் இந்தக் குழந்தைகள்தான்’ என்று நெஞ்சம் நெகிழ்ந்தது பூதம்.

திடீரென்று ஒருநாள் தோட்டத்தின் மூலையில் காணாமல்போன சிறுவன் நிற்பதைப் பார்த்தது பூதம். சிறுவனின் உள்ளங்கைகளிலும் கால் பாதங்களிலும் ஆணிகள் அடித்த அறிகுறிகளைக் கண்டு வருத்தமடைந்தது. ‘யார் உன் கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் அடித்தது? இந்தக் கொடுமையைச் செய்த அந்தப் பாதகன் யார்?’ என்று கேட்டது.

‘கோபப்படாதீர்கள். யாரும் என்னைக் கொடுமைப்படுத்தவில்லை. இது அன்பால் விளைந்த காயங்கள்’ என்று புன்னகை செய்தவாறே சிறுவன் பதிலளித்தான். வந்தது யார் என்று இப்போது பூதத்துக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. பேச்சு வரவில்லை. தொண்டை அடைக்கச் சிறுவனிடம் மன்னிப்புக் கேட்டது.

சிறுவன் சிரித்தபடி, “என்னை ஒரு நாள் உங்கள் தோட்டத்தில் விளையாட அனுமதித்தீர்கள். அந்த நன்றிக்காக இப்போது உங்களை என் பரலோகத் தோட்டமான சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றான்.

பூதம் மகிழ்ச்சியோடு புறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x