Last Updated : 18 Jan, 2017 09:54 AM

 

Published : 18 Jan 2017 09:54 AM
Last Updated : 18 Jan 2017 09:54 AM

வகுப்பறைக்கு வெளியே: வந்தது வரலாறு - கம்பெனி ஆட்சியை வீழ்த்திய கிளர்ச்சி

பிளாசியில்1757-ல் மிகப் பெரிய போர் நடைபெற்றது. அதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் தளபதி ராபர்ட் கிளைவ் வெற்றி பெற்றார். அதிலிருந்து வர்த்தகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படப் ஆரம்பித்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் நாட்டின் முக்கியமான பகுதிகள் ஆங்கிலேயரின் பிடிக்குள் சென்றுவிட்டன.

அதன்பிறகு 19-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயருக்கு எதிரான எதிர்ப்பு திரள ஆரம்பித்தது. பிளாசி போருக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பின்னால், இந்த எதிர்ப்பு வெடித்தது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந்திய ராணுவத்திலிருந்த வீரர்கள் 1857-ல் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். அவர்களது எதிர்ப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது. ஆங்கிலேயர்கள் இதை ‘சிப்பாய்க் கலகம்' என்று அழைத்தனர். அதாவது ராணுவத்துக்குள் ஒரு பிரிவினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு கருத்தை உருவாக்க முயன்றனர்.

ஆனால், நம்முடைய வரலாற்று ஆசிரியர்களோ, அதை ராணுவத்தைத் தாண்டிய மிகப் பெரிய கிளர்ச்சி என்றும் ‘முதல் விடுதலைப் போர்' என்றும் அழைத்தனர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டம் அப்போது பரவலான ஆதரவைப் பெற்றிருந்தது.

மீரட்டில் முதல் பொறி

அந்தக் காலத்தில் துப்பாக்கித் தோட்டாவின் பொதியுறையை கடித்து எடுத்துவிட்டு துப்பாக்கியில் தோட்டவைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. பொதியுறையில் வைக்கப்பட்டிருந்த அந்தத் தோட்டாக்களில் பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு தடவப்பட்டிருந்ததாகச் செய்தி பரவியது. இதற்கு இந்து, முஸ்லிம் ராணுவ வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 1857-ல் மீரட் நகரில் தொடங்கிய இந்த எதிர்ப்பு பரவலாக ஆரம்பித்தது.

மீரட்டிலிருந்த ஒட்டுமொத்தப் படைப் பிரிவும் துப்பாக்கித் தோட்டாவைப் பயன்படுத்த மறுத்தது. இதனால் அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது மற்றொரு படைப் பிரிவு சிறையை உடைத்து ராணுவ வீரர்களை விடுவித்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் சுடப்பட்டனர். இதில் கர்னல் ஃபின்னிஸ் மற்றும் பலர் கொல்லப்பட்டனர். இப்படித்தான் முதல் விடுதலைப் போர் தொடங்கியது.

பரவிய கிளர்ச்சி

அப்போது அவர்கள் இட்ட முழக்கமே ‘டெல்லி சலோ'. அதன் பிறகு டெல்லி சென்று கிளர்ச்சி செய்த ராணுவ வீரர்கள், செங்கோட்டையில் நுழைந்து இரண்டாம் பகதூர் ஷாவைக் கிளர்ச்சியில் இணைந்துகொள்ளுமாறு வலியுறுத்தினர். அவரை இந்தியாவின் பேரரசர் என்று அறிவித்துவிட்டு, டெல்லியைக் கைப்பற்ற அவர்கள் புறப்பட்டனர். டெல்லிக்குப் பிறகு கான்பூர், லக்னோ, பனாரஸ், அலகாபாத், பரேலி, பிஹார், அவுத், ஜான்சி போன்ற பகுதிகளில் கிளர்ச்சி வெடித்தது. வடக்கு, மத்திய இந்தியாவில் ராணுவத்திலிருந்த வீரர்களே இந்தக் கிளர்ச்சியில் பெருமளவு ஈடுபட்டனர்.

எதிர்ப்பின் ஒரு பகுதியாக மங்கள் பாண்டே எனும் ராணுவ வீரர் ஆங்கிலய அதிகாரி ஒருவரைச் சுட்டார். ஆனால், அவரது குறி தவறியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். ராணுவ வீரர்களில் முதலில் உயிர் துறந்தவர் அவர்தான்.

ஜான்சி ராணியும் நாணா சாஹிபும்

ராணுவ வீரர்களின் தோட்டா பிரச்சினை ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் டல்ஹெனசி பிரபு, வாரிசு இழப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். இந்தச் சட்டப்படி இந்தியாவில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு முடியாட்சி அதிகாரம் செல்லாது என்று ஆனது. ஜான்சியின் ராணி லட்சுமிபாய் ஓர் ஆண் குழந்தையை தத்தெடுத்து இருந்தார். மகாராஷ்டிரா பகுதியில் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் தத்தெடுக்கப்பட்ட மகன் நாணா சாஹிபும் ஆட்சியில் இருந்தார். இருவரும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டனர்.

அப்போது நானா சாஹிபின் தளபதியாக இருந்தவர் தந்தியா தோப். இவர் ராணி லட்சுமிபாயின் படையைப் பின்னர் வழிநடத்தினார். லட்சுமிபாய் களத்தில் இறந்ததாகவும் தந்தியா தோப் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் நாணா சாஹிப் நேபாளத்துக்குத் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் பகதூர் ஷா அன்றைய பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

கம்பெனி ஆட்சிக்கு முடிவு

ராணுவ வீரர்கள், ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட வர்களின் கிளர்ச்சி ஒருங்கிணைக்கப் படாமல் இருந்ததால், ஆங்கிலேயர்கள் அதை ஒடுக்கிவிட்டனர். நேரடியாகக் கிளர்ச்சி செய்தவர்கள் குறைவாக இருந்தாலும், அவர்களுக்குப் பின்னால் நாடு நின்றது. ஆனால், ஆயுத பலம் குறைவாக இருந்ததால் நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

அதேநேரம், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு இந்தக் கிளர்ச்சி முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு பிரிட்டனே நேரடியாக இந்தியாவை ஆள ஆரம்பித்தது. அதன் காரணமாகவே இந்தக் கிளர்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கிலேயருக்கு எதிராக முதல்முறையாக உருவான இந்தப் பரவலான எதிர்ப்பு, பிரிட்டன் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான நம்பிக்கையைப் பெருமளவு தூண்டியது.

முதல் விடுதலைப் போரின் 150-வது ஆண்டு விழாவை 2007-ல் மத்திய அரசு சிறப்பாகக் கொண்டாடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x