Last Updated : 14 Jun, 2017 09:51 AM

 

Published : 14 Jun 2017 09:51 AM
Last Updated : 14 Jun 2017 09:51 AM

மலையாள நாடோடி கதை: யானை முட்டை

ஓர் ஊரில் கிட்டுண்ணி என்ற சிறுவன் இருந்தான். அவன் யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிவிடுவான். ஒரு நாள் விலைமதிப்புமிக்க தங்க நாணயம் அவனுக்குக் கிடைத்தது. அதை அவன் எடுத்து வைத்துக்கொண்டான். வரும் வழியில் அவனுடைய நண்பன் அப்பு வைப் பார்த்தான். அவன் கையில் பெரிய பலூன் ஒன்று இருந்தது.

அதைப் பார்த்த கிட்டுண்ணி “இது என்ன?” என்று கேட்டான்.

“இது தெரியாதா உனக்கு” இதுதான் யானை முட்டை என்றான் அப்பு.

“ஒரு தங்க நாணயம் கொடுத்தால் யானை முட்டை கிடைக்குமா?” என்று அப்பாவியாகக் கேட்டான் கிட்டுண்ணி.

அதற்குத் தலையாட்டிய அப்பு, தங்க நாணயத்தை வாங்கிக்கொண்டு யானை முட்டையெனச் சொன்ன பலூனைக் கொடுத்தான். கிட்டுண்ணி பலூனைக் கொண்டு செல்லும்போது பலத்த காற்று வீசியது. காற்று வேகத்தில் கையிலிருந்த பலூன் பறந்துபோனது. ஒரு முள்ளுக் காட்டில் விழுந்த பலூன், முள் பட்டவுடன் பெருஞ்சத்தத்துடன் வெடித்தது. அங்கிருந்த நரி ஒன்று, சத்தத்தைக் கேட்டுப் பயந்து ஓடியது.

அதைப் பார்த்த கிட்டுண்ணி, யானை முட்டை வெடித்து யானைக் குட்டி ஓடுவதாக நினைத்தான். யானையைத் துரத்துவதாக எண்ணிக்கொண்டு நரியின் பின்னால் ஓடினான். உயிருக்குப் பயந்த நரி ஒரு குகைக்குள் ஓடி மறைந்தது.

நரியைப் பார்த்துப் பயந்த முயல் ஒன்று குகையிலிருந்து வெளியே ஓடியது. இதைப் பார்த்த கிட்டுண்ணி, வியந்துபோனான். யானைக் குட்டி சிறிய உருவமாக மாறிவிட்டதே என எண்ணி வியந்தான். அடுத்து முயலைப் பிடிக்க ஓடினான். ஓடிய முயல் அங்கே இருந்த வைக்கோல் போரில் நுழைந்து உயிர் தப்பியது. அங்கு ஏற்பட்ட சத்தத்தால் அங்கே இருந்த காட்டுக் கோழி ஒன்று ஓடியது.

திரும்பவும் அற்புதம் நிகழ்ந்துள்ளது என நினைத்தான் கிட்டுண்ணி. உருவம் மாறக்கூடிய சக்தி படைத்தது இந்த யானை எனத் தனக்குத்தானே பேசி வியந்தான்.

சும்மா இருப்பானா அவன், காட்டுக் கோழிதான் அவனுக்கு யானையாயிற்றே. அதையும் பிடிக்க ஓடினான். காட்டுக் கோழி உயிர் பிழைப்பதற்காகத் தலைதெறிக்க ஓடி, ஒரு புல் குவியலுக்குள் ஒளிந்துகொண்டது.

அப்போது மேய்ந்துகொண்டிருந்த பசு மாடு, காட்டுக் கோழியைப் பார்த்து மிரண்டு ஓடியது. இப்போது காட்டுக் கோழி பசுவாக உருவம் மாறியது என எண்ணி அதையும் துரத்திச் சென்று பிடித்துவிட்டான். அந்தப் பசு ஒரு விவசாயினுடையது. கிட்டுண்ணி அசந்த நேரத்தில் அவனிடமிருந்து தப்பித்து ஓடி, ஒரு மாட்டுக் கொட்டகைக்குள் ஒளிந்துகொண்டது பசு. அதைக் கிட்டுண்ணியால் கண்டுபிடிக்க முடியவில்லை. பசு எங்கே போனது என்று கிட்டுண்ணி முழித்துக்கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாக ஒரு வழிப்போக்கர் வந்துகொண்டிருந்தார். அவரிடம் சென்று “என்னுடைய யானையைப் பார்த்தீர்களா” என்றான் கிட்டுண்ணி.

அதற்கு அவர், “ராஜாவின் அரண்மனையில் நிறைய யானைகள் உள்ளன. அங்கே போய்த் தேடிப் பார்” என்றார். அவன் உடனே யானையைத் தேடி அரண்மனை க்குள் நுழைந்தான். யானைப் படையைக் கண்டான். வழக்கம் போல அவனுக்கு வியப்பு. திரும்பவும் யானை உருவத்துக்கு மாறிவிட்டது போல என நினைத்துப் புல்லரித்துப்போனான்.

இதில், ‘எனது யானை எது, எப்படிக் கண்டறிவது’ எனத் தெரியாமல் கிட்டுண்ணி திகைத்து நின்றான்.

எதற்கும் ராஜாவைச் சந்திப்பதென முடிவெடுத்தான். அதன்படியே சந்தித்தான். “என்னுடைய யானை எங்கே உள்ளது” என்று ராஜாவைப் பார்த்துக் கேட்டான்.

ராஜா சற்று ஆச்சரியப்பட்டார். கிட்டுண்ணிஇடம் நடந்ததையெல்லாம் விசாரித்தார்.

அப்புவிடம் ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்து, யானை முட்டை வாங்கியதிலிருந்து தற்போதுவரை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் கிட்டுண்ணி.

அப்பு கிட்டுண்ணியை நன்றாக ஏமாற்றியதை ராஜா புரிந்துகொண்டார். அப்போது அங்கே அப்புவின் அப்பா சென்றுகொண்டிருந்ததை ராஜா பார்த்தார். யானை திரும்பவும் உருவம் மாறிவிட்டது என அப்புவின் தந்தையைச் சுட்டி காட்டினார். கிட்டுண்ணிதான் எதைச் சொன்னாலும் நம்பிவிடுவானே, விடுவானா, உடனே ஓடிச் சென்று அப்புவின் தந்தையைக் கையோடு பிடித்துக்கொண்டு வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனான். கையையும் காலையும் யானைச் சங்கிலியால் வீட்டுத் தாழ்வாரத்தில் கட்டிப் போட்டான்.

அப்பு விவரம் அறிந்து தன் அப்பாவைப் பார்க்க வியர்க்க விறுவிறுக்க ஓடோடி வந்தான். கிட்டுண்ணியிடம் ஏமாற்றி வாங்கிய தங்க நாணயத்தைத் திருப்பிக் கொடுத்தான். தன் தந்தையைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றான்.

அடத் திரும்பவும் தங்க நாணயம் வந்துவிட்டதே என நினைத்த கிட்டுண்ணி, யானை முட்டை எங்கே என யோசிக்க ஆரம்பித்தான்.

குழந்தைகளே! கிட்டுண்ணியைப் பார்த்தால், யானை முட்டை என்ற ஒன்று இல்லை என நீங்கள் சொல்கிறீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x