Last Updated : 07 Dec, 2016 11:50 AM

 

Published : 07 Dec 2016 11:50 AM
Last Updated : 07 Dec 2016 11:50 AM

பஞ்சு மிட்டாயின் சுவையான கதை

மேகத்தைக் கொஞ்சமாகப் பிய்த்து அதற்கு ‘ரோஸ்’நிறத்தை ஏற்றிய ஒரு மிட்டாயைப் பார்த்திருக்கிறீர்களா? அதைக் குச்சியில் அழகாகச் சுற்றியோ பாக்கெட்டில் அடைத்தோ தருவார்கள். வாயில் போட்டால் கரைந்து போகும் அந்தத் திகட்டாத இனிப்பு மிட்டாயைத் திருவிழாக்கள், பொருட்காட்சி, திருமண மண்டபங்கள், பெரிய கடைகள், கடை வீதிகள், சர்க்கஸ் நடக்கும் இடங்களில் அதிகம் பார்த்திருப்பீர்கள். அதுதான் பஞ்சு மிட்டாய்! அந்தக் காலம் முதல் குழந்தைகள் மட்டுமே விரும்பிச் சாப்பிட்ட அந்தப் பஞ்சு மிட்டாய், இன்று உலகம் முழுக்க எல்லா வயதினராலும் விரும்பி சுவைக்கப்படுகிறது.

பஞ்சு மிட்டாயின் இனிப்புக்கு, அது முழுக்கச் முழுக்க சர்க்கரையால் செய்யப்படுவதே காரணம். சர்க்கரை வெண்மை நிறம் என்பதால் அதனுடன் வேண்டிய நிறமூட்டியைச் சேர்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் பஞ்சு மிட்டாய் விற்பவர்கள், அதற்கான இயந்திரத்தில் அங்கேயே தயாரித்துத் தருவதையும் பார்க்க முடியும். குழந்தைகள் அதிகம் இனிப்பு சாப்பிட்டால், பல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று உங்கள் பல் மருத்துவர் எச்சரிப்பார் இல்லையா? அப்படியான, பல் மருத்துவர் ஒருவர்தான் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இயந்திரத்தையும் உருவாக்கினார்!

15-ம் நூற்றாண்டில் இத்தாலியில் பஞ்சு மிட்டாய் மாதிரியான இனிப்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில்தான் பஞ்சு மிட்டாய் பிரபலமானது. அப்போது இயந்திரம் இன்றி மிகவும் சிரமப்பட்டுப் பஞ்சு மிட்டாய் தயாரிக்கப்பட்டதால், அதன் விலையும் அதிகமாக இருந்தது. அதனால், ஏழைகளுக்கு அவை கிடைக்கவில்லை. பணக்காரர்கள் மட்டுமே பஞ்சு மிட்டாயை ருசித்து வந்தனர்.

அந்த நூற்றாண்டின் இறுதியில் பஞ்சு மிட்டாய் இயந்திரம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் மிட்டாயின் தயாரிப்பு எளிமையானது. விலையும் குறைந்தது. 1897-ல் வில்லியம் மோரிஸன் என்ற பல் மருத்துவர், ஜான் வார்டன் என்ற மிட்டாய்த் தயாரிப்பாளருடன் சேர்ந்துதான் அந்த இயந்திரத்தை வடிவமைத்தார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1904-ல் நடைபெற்ற உலக அளவிலான கண்காட்சி வாயிலாகப் பஞ்சு மிட்டாய் பிரபலமானது.

அந்தக் கண்காட்சியில் 70 ஆயிரம் பெட்டி பஞ்சு மிட்டாய்கள் விற்றுத் தீர்ந்தன. சில ஆண்டுகள் கழித்து, மேம்பட்ட இயந்திரத்தை ஜோசப் லாஸ்காக்ஸ் என்ற மற்றொரு பல் மருத்துவர் உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாகப் பஞ்சு மிட்டாய்த் தயாரிப்புக்கான முழு தானியங்கி இயந்திரம் 1978-ல் உருவானது.

ஒரு ஸ்பூன் அளவிலான சர்க்கரையை, சுழலும் எந்திரத்தின் மையத்தில் கொட்டுவார்கள். அங்கே வெப்பமூட்டுவதன் காரணமாகச் சர்க்கரை உருகும். நிமிடத்துக்குச் சுமார் 3 ஆயிரம் சுழற்சிகள் என்ற வேகமான சுழற்சி காரணமாக, ‘மைய விலக்கு விசையால்’உருகிய சர்க்கரை இழைகள் நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறும். காற்றுடன் சேர்த்து அவற்றை ஒரு குச்சியில் அழகாகச் சுற்றி நமக்குச் சுவைக்கத் தருவார்கள். பஞ்சு மிட்டாயின் மென்மைக்கும், அதன் பெரிய உருவத்துக்கும் அதில் சேர்ந்திருக்கும் காற்றே காரணம்.

கால மாற்றத்தில் எத்தனையோ நவீன இனிப்புகள், தின்பண்டங்கள் வந்துவிட்டன. ஆனாலும், எளிய பஞ்சு மிட்டாய் அதன் சிறப்பை இழக்கவில்லை. கிராமமோ நகரமோ பல வகையான பஞ்சு மிட்டாய்களைக் குழந்தைகள் உட்பட அனைவரும் ருசித்து வருகிறோம். அதன் சிறப்பைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதியைப் பஞ்சு மிட்டாய் தினமாக (Cotton Candy Day) மேற்கத்திய நாடுகளில் கொண்டாடுகிறார்கள்.

அந்த நாளை முன்னிட்டுப் பல்வேறு நிறங்கள், சுவைகள், வடிவங்கள் மற்றும் பல்வேறு பெயர்களில் பஞ்சு மிட்டாயைத் தயாரித்து விற்கிறார்கள். பஞ்சு மிட்டாய் சாப்பிட விரும்பும் குழந்தைகள் அதன் சுகாதாரம், எப்போது தயாரிக்கப்பட்டது ஆகியவற்றைப் பெரியவர்கள் உதவியுடன் உறுதி செய்துகொண்ட பின்னர், அளவுடன் ருசித்து மகிழலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x