Last Updated : 22 Mar, 2017 09:27 AM

 

Published : 22 Mar 2017 09:27 AM
Last Updated : 22 Mar 2017 09:27 AM

தினுசு தினுசா விளையாட்டு: பாண்டியாட்டம்!

இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு விளையாட எங்கே நேரமிருக்கிறது. காலையில் டியூஷன், பிறகு பள்ளிக்கூடம். அது முடிந்து வந்ததும், சிறப்பு வகுப்புகள் எனப் பம்பரமாகச் சுழல்கிறார்கள் குழந்தைகள். இதையும் கடந்து, இடையில் கொஞ்ச நேரம் கிடைத்தாலும் டி.வி, வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ் என மூழ்கிவிடுகிறார்கள்.

தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் உடம்பில் சூரிய ஒளி பட வேண்டும். வெளிக் காற்றை சுவாசித்தபடி விளையாட வேண்டும். குழந்தைகளின் உடல், மனநலத்துக்கு விளையாட்டைப் போல் பயனளிக்கும் செயல் வேறு எதுவுமில்லை. இதை அம்மா, அப்பாக்கள் உணர்ந்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

சரி, இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டு, ‘பாண்டியாட்டம் அல்லது சில்லுக்கோடு’.

பெண் குழந்தைகள் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் இந்தப் பாண்டியாட்டத்துக்கு முதன்மையான இடமுண்டு. பல ஊர்களில் ஆண்-பெண் குழந்தைகள் சேர்ந்தும் விளையாடுவார்கள். இந்த விளையாட்டை இரண்டிரண்டு குழந்தைகளாகச் சேர்ந்து விளையாட வேண்டும்

பாண்டியாட்டத்தை எப்படி விளையாடுவது?

> விளையாட்டைத் தொடங்கும் முன், விளையாடுவதற்கான ஆடுகளத்தைத் தேர்வு செய்யுங்கள். இந்த விளையாட்டை விளையாடும் இடம் மேடு, பள்ளங்கள் அதிகமில்லாமல் சமதளமாக இருந்தால் நல்லது.

> ஒன்றரை அடி அளவிலான நான்கு சதுர வடிவிலான கட்டங்களை வரைந்துகொள்ளுங்கள். அதன் பக்கவாட்டில் அதேபோல், இன்னும் நான்கு சதுரங்களை வரையுங்கள்.

> விளையாடும் இருவரும் சிறிய அளவிலான வட்டச் சில்லைக் கையில் வைத்துக்கொள்ளுங்கள் (மண் பானை அல்லது சிமெண்ட் தொட்டியின் உடைந்த ஒரு பகுதியை எடுத்து, அதைத் தேய்த்து உரசி, சிறிய வட்டச் சில்லாக ஆக்கிக்கொள்ள வேண்டும்).

இனி, விளையாட்டைத் தொடங்க வேண்டியதுதான்.

> முதல் ஆட்டக்காரர், தனக்கு ஒதுக்கப்பட்ட நான்கு சதுரக் கட்டங்களுக்கு முன்னே முதுகு காட்டி நிற்க வேண்டும். பிறகு, கையிலுள்ள வட்டச் சில்லை அப்படியே பின்பக்கமாகத் தூக்கி வீச வேண்டும். அப்படி வீசும்போது, வட்டச் சில்லு சதுர கட்டத்துக்குள் விழுந்துவிட்டால் அவர் ‘அவுட்’. அடுத்தவர் விளையாட வர வேண்டும்.

> சதுரக் கட்டத்துக்கு வெளியே வீசி விட்டால், நான்கு சதுரங்களிலும் நொண்டியடித்துச் சென்று, கடைசி கட்டத்திலிருந்து அப்படியே தாவிச் சென்று, வட்டச் சில்லைக் காலால் மிதியுங்கள்.

> அடுத்து, உச்சந்தலையில் வட்டச் சில்லை வைத்துக்கொண்டு, நொண்டியடித்து வாருங்கள். தலையிலிருந்து வட்டச் சில்லைக் குனிந்து கீழே விழ வைத்து, அதைக் காலால் மிதியுங்கள். இதேபோல், உள்ளங்கையில் வைத்துக்கொண்டும், அடுத்த முறை புறங்கையில் வைத்துக்கொண்டும் நொண்டியடித்து வாருங்கள்.

> கடைசியாக, கால் விரல் இடுக்கில் வட்டச் சில்லைப் பிடித்தபடி நொண்டியடித்து வந்து, வட்டச் சில்லைத் தூக்கி எறிந்துவிட்டு, பின் காலால் தாவிச் சென்று மிதியுங்கள்.

> இப்படியாக, ஒரு முழுச் சுற்றை ‘அவுட்’ஆகாமல் முடித்துவிட்டால், ஒரு ‘பழம்’ கிடைக்கும். அதாவது, ஒரு சதுரக் கட்டம் அவருக்குச் சொந்தமாகிவிடும். அந்தக் கட்டத்தில் அவர் எப்படி வேண்டுமானாலும் நிற்கலாம். மற்றொரு ஆட்டக்காரர் அந்தக் கட்டத்தில் கால் வைத்தால் ‘அவுட்’. அந்தக் கட்டத்தில் கால் படாமல் அவர் விளையாட வேண்டும்.

பாண்டியாட்டம் பிடித்திருக்கிறதா? அப்போ, இன்னொருதரம் விளையாடலாமா?!

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x