சுதந்திர தேவி சிலை யார் தந்த பரிசு?

Published : 16 Jul 2014 12:42 IST
Updated : 16 Jul 2014 12:42 IST

நண்பர்கள் ஒருவருக்கொருவர் பரிசு அளித்துக் கொள்வது வழக்கம். ஆனால், ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது கொண்ட நட்புக்கு அடையாளமாகப் பரிசு கொடுத்திருக்கிறது. அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி பிரான்சு நாடு கொடுத்த பரிசு அது. இப்போது தெரிந்திருக்குமே, அதுதான் சுதந்திர தேவி சிலை.

1. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் இருக்கிறது லிபர்ட்டி தீவு. இந்தத் தீவில்தான் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டுள்ளது.

2. இந்தச் சிலையை உருவாக்கியவர் பிரடெரிக் அகஸ்தே பர்தோல்டி. இவருடன் குஸ்டவ் ஈபிள் என்பவரும் வடிவமைப்பில் உதவியிருக்கிறார். இவர்தான் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தையும் உருவாக்கினார்.

3. 1875-ம் ஆண்டு சிலை கட்டுமானம் தொடங்கியது. 1884-ம் ஆண்டு சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது.

4. சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன.

5. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர்.

6. சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.

(தெரியுமா உங்களுக்கு நூலில் இருந்து தொகுத்தவர்) பா. தனுஷ், 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மூலத்துறை, கோவை.,

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor