சிறார்களுக்கான சூப்பர் யோகாசனங்கள்!

Published : 21 Jun 2017 11:27 IST
Updated : 21 Jun 2017 11:27 IST

குழந்தைகளே! இன்று சர்வதேச யோகா தினம் என உங்களுக்குத் தெரியுமா? இந்த யோகாவைப் பெரியவர்கள் மட்டும்தான் செய்வார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். உங்களைப் போன்ற சிறு குழந்தைகளும் தாராளமாகச் செய்யலாம். நீங்கள் செய்வதற்காகவே எளிமையான யோகா சனங்கள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வோமா?

1. தோப்புக்கர்ணம்

பள்ளிக்கூடங்களில் நீங்கள் குறும்பு செய்தாலோ கேள்விக்குப் பதில் சொல்லாமல் போனாலோ சில நேரம் தோப்புக்கர்ணம் போட உங்கள் ஆசிரியர் சொல்வாரல்லவா? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தோப்புக்கர்ணம் மிகச் சிறந்த யோகாசனங்களில் ஒன்று. காதுகளைப் (கர்ணம்) பிடித்துச் செய்வதால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது. இதைச் செய்வது ரொம்ப எளிது.

இடது கையால் வலது காதைப் பிடியுங்கள். பிறகு, வலது கையால் இடது காதைப் பிடியுங்கள். மூச்சை வெளியே விட்டபடியே காலை மடக்கி உட்காருங்கள். மூச்சை இழுத்தபடியே எழுந்து நில்லுங்கள். இதுபோல 8 - 10 முறை செய்யலாம்.

வெளிநாடுகளில் இதை ’சூப்பர் பிரைன் யோகா’ என்று சொல்லி பெரியவர்கள் முதல் சிறியவர் வரை தோப்புக்கர்ணம் போடுவது பிரபலமாகிவருகிறது. இது மூளை நரம்புகளைத் தூண்டுவதால் மனம் ஒருமுகப்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும். படிப்பிலும் கவனம் கூடும்.

2. விருட்சாசனம்

அதென்ன விருட்சாசனம்? விருட்சம் என்றால் மரம். மரம்போல் கைகளை உயர்த்துவதால் இந்தப் பெயர்.

இதைச் செய்யும்போது கால்களைச் சேர்ந்து வையுங்கள். கைகளை உடம்போடு ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். முதலில் ஒரு காலை மடித்து, உள்ளங்காலை மற்றொரு காலின் தொடையில் பதியுமாறு ஒற்றைக் காலில் நில்லுங்கள். பிறகு இரு கைகளையும் தலைக்கு மேல் நன்கு உயர்த்துங்கள். 10 எண்ணும்வரை இப்படி நில்லுங்கள். பிறகு, அடுத்த காலை மடித்து இதேபோல் செய்யுங்கள்.

தொலைவில் உள்ள பொருள் மீது கவனம் செலுத்தினால், ஆடாமல் அசையாமல் நிற்க முடியும். இந்த ஆசனத்தால், மனம் ஒருமுகப்படும்.

3. வஜ்ராசனம்

வஜ்ரம் என்றால் வைரம். உடலுக்கு வைரம்போல உறுதியைத் தரக்கூடிய ஆசனம் இது. இதை எப்படிச் செய்வது?

சாதாரணமாக உட்காருங்கள். முதலில் வலது காலை மடித்து, வலது குதிகாலில் நமது பின்பக்கம் நன்கு அழுத்துமாறு உட்காருங்கள். இதேபோல இடது காலையும் மடித்து, இரு குதிகால்களிலுமாகச் சேர்ந்து உட்காருங்கள். ஆரம்பத்தில் இப்படி உட்கார்ந்து 10 வரை எண்ணிக்கொள்ளுங்கள். பிறகு இந்த நேரத்தைப் படிப்படியாகக் கூட்டிக்கொள்ளலாம்.

இந்த ஆசனம் செய்தால், உடலின் மேல்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால், உள் உறுப்புகள் நன்கு இயங்கும். சீக்கிரம் செரிமானம் ஆகும். வீட்டில் சாதாரண நேரத்தில்கூட வஜ்ராசனத்தில் அமர்வது நல்லது.

4. சேதுபந்தாசனம்

சேது என்றால் பாலம். ஒரு பாலம் போல உடலை வளைப்பதால் இந்தப் பெயர் வந்தது.

முதலில் காலை நீட்டிப் படுத்துக்கொள்ளுங்கள். இரு கால்களையும் மடித்து உடலின் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். உள்ளங்கால்களை நன்கு தரையில் பதித்துக்கொள்ளுங்கள். தலை, கழுத்துப் பகுதிகளையும் தரையில் பதித்துக்கொள்ளுங்கள். இப்போது மூச்சை உள்ளே இழுத்தபடியே, இடுப்புப் பகுதியை மட்டும் நன்கு உயர்த்துங்கள். மூச்சை வெளியே விட்டபடியே இடுப்புப் பகுதியை மீண்டும் இறக்குங்கள். இதுபோல 3 - 4 முறை செய்யுங்கள்.

இடுப்பில் நெகிழ்வுத்தன்மையோடு உறுதியும் அதிகரிக்கும். கால், கணுக்கால்கள் உறுதியடையும். நுரையீரல் நன்கு வேலை செய்யும்.

5. பர்வதாசனம்

பர்வதம் என்றால் மலை. உடலை மலைபோல வளைப்பதால் இந்தப் பெயர் வந்தது.

முதலில் ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராவதுபோல, ஒரு காலை மடித்தும், இன்னொரு காலைப் பின்னால் நீட்டியும் வைத்துக்கொள்ளுங்கள். மடித்திருக்கும் காலையும் பின்னால் நீட்டி, முதுகுப் பகுதியை மேலே உயர்த்தி, உடலை ஒரு குன்றுபோன்ற நிலைக்குக் கொண்டுவாருங்கள். இதில் உள்ளங்கால் முழுவதும் தரையில் பதிந்திருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். பார்வை அடிவயிற்றை நோக்கி இருக்க வேண்டும்.

இதை 10 - 15 எண்ணிக்கைவரை செய்யுங்கள். பிறகு, காலை மீண்டும் முன்னோக்கி (ஓட்டப்பந்தயத்துக்குத் தயாராவதுபோல) கொண்டு செல்லுங்கள்.

இதைச் செய்தால் கை, கால் தசைகள் வலுவடையும். தண்டுவடப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும்.

6. தனுராசனம்

வில் போல உடம்பை வளைப்பதால் இந்தப் பெயர் வந்தது. இதை எப்படிச் செய்வது?

குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள். வலது கையால் வலது கணுக்காலையும் இடது கையால் இடது கணுக்காலையும் உறுதியாகப் பிடியுங்கள். மெதுவாகத் தலை, கழுத்து என உடலின் மேல் பகுதியைத் தரையைவிட்டு மேலே உயர்த்துங்கள். கால்களை நன்றாக வளைத்த நிலையில், இரு கால்களையும் மேல்நோக்கி உயர்த்துங்கள். வயிற்றுப் பகுதியைத் தவிர உடலின் அனைத்துப் பாகங்களையும் வில்போல உயர்ந்த நிலைக்குக் கொண்டுவாருங்கள். இந்த நிலையில் 10 - 15 எண்ணிக்கைவரை இருக்கலாம்.

இதனால் மூச்சு சீராகிறது. கை, கால், முட்டி, முதுகு, இடுப்புப் பகுதிகள் உறுதியடையும்.

7. பத்மாசனம்

நேராக உட்கார்ந்துகொள்ளவும். வலது உள்ளங்காலை இடது தொடைக்கு மேலாகவும் இடது உள்ளங்காலை வலது தொடைக்கு மேலாகவும் வைத்துக்கொண்டு, கண்களை மூடிய நிலையில் உட்காருங்கள். இது சிரமமாக இருந்தால், ஏதாவது ஒரு காலை மட்டும் இன்னொரு தொடைக்கு மேல் வைத்துக்கொண்டு அமரலாம். கை கட்டைவிரல் - ஆள்காட்டி விரல் நுனிகளை மட்டும் இணைத்து, மற்ற 3 விரல்களையும் நீட்டியவாறு வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ‘சின்முத்திரை’ என்று பெயர். நிதானமாக மூச்சை இழுத்து, மூச்சை வெளியே விடவும். இயன்றவரை இந்த ஆசனத்தில் அமரலாம்.

இதனால் மனம் ஓய்வடைகிறது. உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. வெகுநேரம் படிக்கும் மாணவர்கள், இடையிடையே இந்த ஆசனம் செய்வது நல்லது.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor