Last Updated : 02 Nov, 2016 10:54 AM

 

Published : 02 Nov 2016 10:54 AM
Last Updated : 02 Nov 2016 10:54 AM

சித்திரக் கதை: வரிக்குதிரையான வெள்ளைக்குதிரை!

“மணி! வெளியே வா!” என்று எஜமானரின் குரல் கேட்டதும் வெள்ளைக் குதிரை மணி லாயத்திலிருந்து சலிப்போடு வெளியே வந்தது. கடந்த சில நாட்களாக மணியின் மனம் சோர்வாக இருந்தது.

‘இது என்ன வாழ்க்கை? என் எஜமானர் தினமும் எனக்கு உணவும் தண்ணீரும் தருகிறார். தங்குவதற்கு இடமும் தந்திருக்கிறார். ஆனாலும், என் விருப்பத்துக்கு ஊரைச் சுற்ற முடியவில்லையே’ என்று நினைத்துக்கொண்டது மணி.

எஜமானரை விட்டுவிட்டுக் காட்டுக்குள் ஓடிச் சென்று தன் விருப்பம்போல வாழ வேண்டும் என்ற ஆசையை மணியிடம் தூண்டிவிட்டது ஒரு குரங்குதான்.

சில நாட்களுக்கு முன்பு மணியின் எஜமானர், அதன் மீது ஏறி அருகிலுள்ள ஊருக்குச் சென்றார். மணியை ஒரு மரத்தில் கட்டிவிட்டுத் தன் உறவினர் வீட்டுக்குச் சென்றார். அப்போது காட்டிலிருந்து வழிதவறி வந்த குரங்கு அந்த வழியாகச் சென்றது.

அந்தக் குரங்கு மணியிடம், “காட்டில் நான் வரிக்குதிரைகளைப் பார்த்திருக்கிறேன். அவற்றின் உடலில் வெள்ளையும் கறுப்புமாகக் கோடுகள் இருக்கும். ஆனால், வெள்ளை நிறக்குதிரையான உன்னை இப்போதுதான் பார்க்கிறேன். நண்பனே நீ யார்?” என்று கேட்டது குரங்கு.

“நண்பனே! நான் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கிறேன். என் எஜமானருடன் நான் இங்கே வந்தேன். நீ காட்டில் வசிக்கிறவனா? வரிக்குதிரைகளைப் பார்த்திருக்கிறாயா? அவற்றை யார் வளர்க்கிறார்கள்?” என்று கேட்டது வெள்ளைக்குதிரை.

“வரிக்குதிரைகளை யாரும் வளர்க்கவில்லை. காட்டில் அவை தானாகவே பிறந்து வளர்கின்றன. அவை காட்டிலே சுதந்திரமாகத் திரியும். கூட்டம் கூட்டமாகப் போகும். புற்களை மேயும். ஓடியாடி விளையாடும்” என்று வரிக்குதிரைகளைப் பற்றி விவரித்துச் சொன்ன குரங்கு, சிறிது நேரத்தில் கிளம்பிச் சென்றது.

குரங்கு சொன்னதைக் கேட்ட வெள்ளைக்குதிரை மணிக்குத் தானும் காட்டுக்குப் போய் வரிக்குதிரைகளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை வந்தது. சற்று நேரத்தில் அதன் எஜமானர் அதை மீண்டும் கிராமத்துக்குக் கூட்டி வந்துவிட்டார்.

ஆனால், மணிக்குக் கிராமத்தில் வாழப் பிடிக்கவில்லை. எப்போது காட்டுக்குள் ஓடிச் செல்லலாம் என அது காத்திருந்தது. சில நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் இரவு…

மணியின் எஜமானர் லாயத்தை அடைத்து வைக்க மறந்துபோய், தூங்கச் சென்றுவிட்டார். இதுதான் சமயம் என்று நினைத்த மணி, எஜமானருக்குத் தெரியாமல் வெளியே வந்தது. இரவேரடு இரவாகக் காட்டுக்குள் ஓடிச் சென்றது.

காட்டுக்குள் அலைந்து திரிந்த மணி மறுநாள் காலை ஓரிடத்தில் வரிக்குதிரைகளைப் பார்த்தது.

கறுப்பு வெள்ளைக் கோடுகளோடு அழகான உடல் அமைப்புடன் கூட்டம் கூட்டமாகச் சென்ற வரிக்குதிரைகளைப் பார்த்ததும் மணிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அது, வரிக்குதிரைகளோடு தானும் சேர்ந்து வாழ முடிவுசெய்தது.

தன் உடல் மீது கறுப்பு கோடுகளை அது வரைந்துகொண்டு, அவற்றின் முன்னே போய் நின்றது. மணியைப் பார்த்த மற்ற வரிக்குதிரைகளும், அதை வரிக்குதிரை என்றே நம்பின. அவை தங்கள் கூட்டத்தோடு மணியையும் சேர்த்துக்கொண்டன.

மணியும் வரிக்குதிரைகளோடு சேர்ந்து புல் மேய்ந்தது. ஆற்றில் தண்ணீர் குடித்தது. மற்ற வரிக் குதிரைகளோடு ஓடியாடி விளையாடியது. இப்படி ஓரிரு நாட்கள் கழிந்தன.

திடீரென்று ஒரு நாள் வரிக்குதிரைகள் எல்லாம் திரண்டு ஓட ஆரம்பித்தன. ஒரு வரிக்குதிரை மணியிடம், “ஓடு! சிங்கங்கள் நம்மைத் துரத்துகின்றன. நம் கூட்டத்தில் ஒருவன் இன்று எப்படியும் அகப்படுவான்” என்று சொல்லி ஓட்டம் பிடிக்க, மணியும் அச்சத்தோடு அவற்றுடன் சேர்ந்து ஓடியது.

பின்னால் வந்த சிங்கக்கூட்டங்கள், பின்தங்கிவிட்ட வரிக்குதிரை ஒன்றைப் பிடித்துக்கொண்டன. அதைப் பார்த்து மணி திடுக்கிட்டது.

அது ஒரு வரிக்குதிரையிடம், “நண்பனே! இது என்ன? சிங்கங்கள் வரிக்குதிரைகளை இப்படி வேட்டை ஆடுமா?” என்று நடுக்கத்துடன் கேட்டது.

“ஆமாம் நண்பனே. இது எங்கள் அன்றாட வாழ்க்கைதான். சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் எங்களை எந்த நேரம் வேட்டையாடும் என்று சொல்ல முடியாது!” என்றது ஒரு வரிக்குதிரை.

அதைக் கேட்ட மணிக்கு வரிக்குதிரைகளின் வாழ்க்கை பற்றி ஓரளவு புரிந்தது. அது வரிக்குதிரையிடம், “நண்பனே! நீங்கள் எல்லாரும் காட்டில் கூட்டத்தோடு மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால், இந்தக் காட்டு வாழ்க்கை மிகவும் அபாயமாக இருக்கிறதே!” என்று சொன்னது.

“உண்மைதான் நண்பனே. எங்கள் காட்டு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டு. அதேநேரம் எந்த நேரம் ஆபத்து வருமோ என்ற சவாலும் உண்டு. ஒவ்வொரு நாளும் நாங்கள் சவாலுடன்தான் வாழ்க்கையைக் கடத்துகிறோம்” என்றது வரிக்குதிரை.

“ஐயோ! இதுவரை பாதுகாப்பாக வாழ்ந்தேனே. நான் அதன் அருமையை உணராமல் காட்டுக்குள் வந்து சிக்கலில் மாட்டிக்கொண்டேனே” என்று வருத்தத்தோடு சொன்னது மணி.

“நண்பனே! நீ அடுத்தவர் உழைப்பிலேயே வாழ்ந்தவன் போலத் தெரிகிறாய். நீ யார்? இதுவரை நீ எங்கே இருந்தாய்?” என்று கேட்டது அந்த வரிக்குதிரை.

“நான் இந்தக் காட்டின் அருகிலுள்ள கிராமத்தில் வசித்தேன். என் எஜமானர்தான் என்னைச் சிறுவயதிலிருந்தே வளர்த்தார். என் பசிக்கு உணவு தருவார். குடிக்கத் தண்ணீர் தருவார். இரவும் பகலும் மற்ற விலங்குகளோ, மனிதர்களோ என்னைத் துன்புறுத்தாதபடி லாயத்தில் அடைத்து வைப்பார். நான் உண்மையில் வரிக்குதிரையே அல்ல. குதிரை! உங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று என் மீது கறுப்பு கோடுகள் வரைந்துகொண்டேன்!” என்று உண்மையை ஒப்புக் கொண்டது வெள்ளைக்குதிரை மணி.

அதைக் கேட்ட வரிக்குதிரைகள், “சரி, வருந்தாதே! நீ இந்தக் காட்டிலிருந்து வெளியேறி மீண்டும் உன் எஜமானரிடமே போய்விடு. அதுதான் உனக்கு நல்லது” என்று சொல்லி, காட்டிலிருந்து வெளியேறும் வழியை மணிக்குக் காட்டின.

வெள்ளைக்குதிரை மணி, காட்டிலிருந்து வெளியேறி ஒரு குளத்தில் இறங்கியது. தன் மீதிருந்த கறுப்புக் கோடுகளைக் கழுவிய பின் மீண்டும் தன் எஜமானரிடமே வந்து சேர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x