Published : 12 Oct 2016 12:05 PM
Last Updated : 12 Oct 2016 12:05 PM

சித்திரக் கதை: மரங்கள் படித்த வாழ்க்கைப் பாடம்

சூரியன் மெதுவாகக் கிழக்கு வானத்திலிருந்து மேலே எழுந்துக்கொண்டிருந்தது. இலைகளில் படர்ந்திருந்த பனித்துளிகளை உதறியபடி விழித்தெழுந்தது மாமரம்.

“இன்னைக்கு நல்ல நாளாக இருக்கணும். அதுக்காகக் கடவுளிடம் வேண்டிக்கிறேன்!” எனக் கூறியபடி சூரியனைப் பார்த்து வேண்டிக்கொண்டது.

“க்கும்! நல்ல நாளா? உனக்குத்தான் நல்ல நாளெல்லாம்! எங்களுக்கு என்னைக்குமே கெட்ட நாள்தான்” என்றது அருகிலிருந்த வேப்பமரம்.

“ஏன் அப்படிச் சொல்ற?” ஒன்றும் புரியாமல் கேட்டது மாமரம்.

“உன்னோட மாம்பழங்கள் மாதிரி என்னோட பழங்கள் இனிப்பா இல்லையே… கசப்பாவுல இருக்கு. இலைகளும் கசப்பாதான் இருக்கு!” என்றது வேப்ப மரம்.

அதனருகில் நின்று கொண்டிருந்த வாழை மரம், “ஆமா, என்னோட நிலைமையும் அப்படித்தான். வேகமா காத்தடிச்சா கீழே சாஞ்சுடறேன். என்னோட உடம்பு ரொம்ப பலவீனமா இருக்கு. அந்தத் தென்னை மரம் எவ்ளோ உயரமா வளர்ந்திருக்கு! இருந்தாலும் எவ்வளவு காத்தடிச்சாலும் கீழே விழாம உறுதியா நிக்குதுல்ல. அது மாதிரி பலமான உடம்பு எனக்கில்லையே” என அலுத்துக்கொண்டது.

“இங்க மட்டும் என்னவாம், ரொம்ப உயரமா இருக்கறதால சூரிய ஒளி மண்டையைப் பிளக்குது. வேப்பமரத்தை மாதிரி மத்தவங்களுக்கு என்னால நிழல் கொடுக்க முடியலையே” எனத் தன்னிடம் உள்ள குறையைக் கூறியது தென்னை மரம்.

“நீங்க எல்லோரும் உங்ககிட்ட இருக்கிற குறைகளை மட்டுமே பெரிசா சொல்றீங்க” எனக் கூறி, சற்று நிறுத்திய மாமரம் மீண்டும் பேச ஆரம்பிப்பதற்கு முன் நான்கு பேர் மாமரத்தை நோக்கி அருகில் வந்தார்கள்.

“இங்கே நல்ல நிழலா இருக்கு. இங்கேயே உட்காரலாம்” எனக் கூறியபடி மாமர நிழலை நோக்கி நடந்தான் முதலாமவன்.

“அங்கே வேணாம். இங்க பாரு! வேப்பமரம் நிக்குது. வேப்பமர நிழல்ல படுத்தா குளுகுளுன்னு காத்தடிக்கும். உடம்புக்கும் நல்லது!” எனக் கூறிய இரண்டாமவன் வேப்பமர நிழலில் அமர்ந்தான். மற்ற மூவரும் அதைச் சரியென ஒப்புக்கொண்டு வேப்பமர நிழலில் அமரந்தார்கள்.

சிறிது நேரம் ஓய்வெடுத்த நால்வருக்கும் பசியெடுத்தது.

ஒருவன் மாமரத்தில் ஏறி மாம்பழங்களைப் பறித்துப் போட்டான். மற்றொருவன் அவைகளைச் சேகரித்தான். இன்னுமொருவன் வாழை மரத்திலிருந்து வாழைப்பழங்களை தன்னிடமிருந்த சிறிய அரிவாளால் வாழைப்பழத் தாரை வெட்டியெடுத்தான். மூவரும் வேப்பமர நிழலுக்கு மீண்டும் வந்தனர். நான்காமவன், “பசிக்கு உணவு கிடைச்சாச்சு. தாகத்துக்குத் தண்ணீர்?” எனக் கேட்டான்.

“பக்கத்துல ஏதாவது குளமிருக்கான்னு பாரு” இது முதலாமவன்.

சுற்றிலும் பார்த்த நான்காமவன், மாமரத்துக்குப் பின்னே நீர் நிறைந்த சிறிய குட்டை இருப்பதைப் பார்த்து அதனருகில் சென்றான். “ஊஹும்… இந்தத் தண்ணியைக் குடிக்க முடியாது. கை, கால் கழுவிக்கலாம்” எனக் கூறினான்.

“அண்ணே நீரைவிடச் சுவையான நீர் அருகிலேயே இருக்கு!” இரண்டாமவன் தென்னை மரத்தைக் காட்டி, “எனக்கு மரமேறத் தெரியும்!” என மீண்டும் கூறி விட்டு, சிறிய கயிற்றை வளையமாகக் கால்களில் மாட்டிக்கொண்டு விறுவிறுவென தென்னை மரத்தில் ஏறினான். உச்சிக்குச் சென்றவன், தன் இடுப்பில் சொருகியிருந்த சிறிய அரிவாளால் இளநீரை வெட்டிப் போட்டான். ஆளுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது. அவன் மரத்திலிருந்து கீழே இறங்கியதும், வேப்பமரக் கிளையிலிருந்து சிறிய குச்சியை ஒடித்து நால்வரும் பல் துலக்கினர். குட்டை நீரில் வாய் கொப்பளித்தனர்.

பிறகு, வேப்பமர நிழலில் அமர்ந்து பழங்கள் சாப்பிட்டனர். இளநீர் குடித்தனர். “ஆஹா, இந்த மாதிரி விருந்து நான் என்றைக்கும் சாப்பிட்டது இல்லை!” என்றனர் நால்வரும். உண்ட மயக்கத்தில் அப்படியே வேப்பமர நிழலில் சுகமாகப் படுத்து தூங்கினார்கள்.

மாமரம் செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தது. “பார்த்தீர்களா நண்பர்களே! இந்த நால்வரும் உங்ககிட்ட என்னென்ன நிறைகள் இருக்குன்னு தங்கள் செயல்காளால உணர்த்திட்டாங்க! நம்மகிட்ட என்னென்ன நிறைகளும் திறமைகளும் இருக்கோ, அத நினைச்சு பெருமைப்படணும். அத வச்சு வாழ்க்கையில முன்னேறணும். நாம ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் பிறருக்குப் பயனுள்ளவர்களாகத்தான் பிறந்திருக்கோம்.

நம்ம வாழ்க்கையும் அப்படித்தான் அமைஞ்சிருக்கு! நாம அதத் தெரிஞ்சுக்காம மத்தவங்களைப் பார்த்து, அது எங்கிட்ட இல்லையே, இது எங்கிட்ட இல்லையேன்னு நினைச்சு வருத்தப்படுறோம், பொறாமைப்படுறோம். கடைசில தன்னோட வாழ்க்கையைச் சுகமா, மகிழ்ச்சியா வாழாமப் போயிடுறோம். இனி வரும் காலங்களிலாவது நம்மிடம் இருக்கும் நிறைகளை நினைத்துப் பெருமைப்படுவோம். பிறருக்குப் பயனுள்ளவர்களா வாழ்வோம்” எனக் கூறியது.

மற்ற மூன்று மரங்களும் வாழ்க்கையின் இன்னொரு கோணத்தைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் தலையசைத்து ஆமோதித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x