Last Updated : 14 Sep, 2016 11:10 AM

 

Published : 14 Sep 2016 11:10 AM
Last Updated : 14 Sep 2016 11:10 AM

சித்திரக் கதை: கோழிக் குஞ்சுகள் கண்ட கோமேதகக் கற்கள்

அம்மா கோழி இரை தேடப் போய் ரொம்ப நேரமானது. கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த குஞ்சுகள், வெளியே போக ஆசைப்பட்டன. நான்கு குஞ்சுகளும் கூடிப் பேசி ஒரு திட்டம் தீட்டின. கூண்டுக்குப் பக்கத்தில் விளையாடிவிட்டு, அம்மா கோழி வருவதற்கு முன்பு கூண்டுக்குள் வந்துவிட முடிவுசெய்தன.

வாசலுக்கு வெளியே சென்று, அம்மா வருகிறாளா எனப் பார்த்துவிட்டுத் தகவல் தருவதாகச் சொன்னது முதல் கோழிக்குஞ்சு. ஆனால், அது வெளியே போய் விட்டுத் திரும்பி வரவில்லை. இப்படி ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ஒவ்வொன்றாக வெளியேறின.

கோழிகள் வளர்ந்துவந்த வீடு ஒரு பழைய கட்டிடம். அந்த வீட்டுக்கென தனியாக ஒரு சுற்றுச்சுவர் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை செம்மண் பூமிதான். அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல பூஞ்செடிகள் வளர்ந்திருந்தன. வெளி உலகத்தைப் பற்றிய புரிதல் இல்லாத குஞ்சுகள், சுற்றுவட்டாரத்தைப் பார்த்து அதிசயித்தன. ஆசை தீர ஓடியாடி விளையாடி மகிழ்ந்தன.

சற்று நேரத்தில் ‘கொக்…கொக்..கொக்’ என்று சத்தம் எழுப்பியபடி அம்மா கோழிக் கூண்டுக்குத் திரும்பியது. அம்மாவின் குரலை அடையாளம் கண்டுகொண்ட கோழிக்குஞ்சுகள், அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்துசேர்ந்தன.

குஞ்சுகளை மென்மையான இறகை விரித்து அம்மா கோழி அரவணைத்துக்கொண்டது. அருகிலிருந்த முதல் குஞ்சுக்கோழி அம்மாவிடம் சொன்னது:

“அம்மா! நீ இல்லாத நேரம் நான் வெளியே போனேன். வீட்டுக்குப் பக்கத்தில் அதிசயமான ஒரு பொருளைப் பார்த்தேன். அழகான ஒரு முழுநிலா செம்மண் தரையில் விழுந்து கிடந்தது. அதில் ஆயிரக்கணக்கான தங்கக் கட்டிகள் இருந்தன. நான் அவற்றில் ஏறி விளையாடினேன்” என்றது.

“அப்படியா! ஆச்சரியமாக இருக்கே!” என்று பதிலளித்த அம்மா கோழிக்கு, விசயம் என்னவென்று புரியவில்லை. அதற்குள் இரண்டாவது குஞ்சு தாவிக் குதித்து அம்மாவிடம் சொன்னது:

“அம்மா! அதே இடத்துக்கு அருகில் வேறு ஒரு முழுநிலா விழுந்திருந்ததை நானும் பார்த்தேன். அதில் முத்துக்கள் கொட்டிக்கிடந்தன. முத்துக்களுக்குமேல் ஏறி விளையாடியபோது சரிந்து விழுந்தேன்” என்றது.

“உனக்கொன்றும் ஆகவில்லையே?” என்று பதறிய அம்மா கோழி, திகைத்துப்போனது.

அடுத்ததாக மூன்றாவது குஞ்சு வந்துநின்றது. “அம்மா! நான் பார்த்த முழுநிலாவில் பவளங்கள் குவிந்து கிடந்தன. நான் ஒவ்வொரு பவளத்தையும் கொத்தி விளையாட நினைத்தேன். ஆனால், முடியவில்லை” என்றது.

“இத்தனை மதிப்பு மிக்க ஆபரணப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கும் இடம் எங்குள்ளது என்று எனக்குத் தெரியவில்லையே!” ஆதங்கத்துடன் பதில் சொன்னது அம்மா கோழி. கடைசியில் அதுவரை எதுவும் பேசாத நான்காவது குஞ்சும் நடந்த கதையைச் சொன்னது:

“அம்மா! நான் தாவியேறிய முழுநிலாவில் நிறைய வைரக்கற்கள் இருந்தன. அவை உருண்டையாக இருந்தன. கண்ணாடிபோல் இருந்த ஒவ்வொரு வைரக்கல்லிலும் என் முகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.” என்றது.

அம்மா கோழிக்கு மேலும் ஆச்சரியம் பெருகியது. ‘தங்கம், வைரம், பவளம், முத்து ஆகியவற்றைப் பக்கத்தில் எங்கும் தான் பார்த்ததில்லையே. அப்படியொரு உலகம் எங்கே உள்ளது’ என்ற யோசனையில் ஆழ்ந்தது.

அப்போது வீட்டின் எஜமானியம்மா கோழிக் கூண்டுக்குப் பக்கத்தில் வந்து நின்றார். அவர் ஒரு சிறிய அலுமினியத் தட்டை வைத்துவிட்டுப் போனார். அதில் கோழிகளுக்காக கேழ்வரகு வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த உடனே நான்கு குஞ்சுகளும் அம்மாவிடம் ஓடி வந்தன.

“அம்மா! நாங்கள் பார்த்த முழுநிலாக்கள் இந்தத் தட்டை விடப் பெரிதாக இருந்தன. அவை அனைத்திலும் இதுபோலவே கோமேதகக் கற்களும் கலந்திருந்தன. ஆனால், அந்தக் கற்கள் உயிருள்ள பொருட்களைப் போல நகர்ந்தன. ஒன்றின்மீது ஒன்று உருண்டு விளையாடின.” என்றன.

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்த அம்மா கோழிக்கு அப்போதுதான் விசயம் புரிந்தது. “பிள்ளைகளே! முதலில் நீங்கள் பார்த்ததாகச் சொன்ன முழுநிலாக்கள் என்பவை பெரிய அலுமினியத் தட்டுகள். முதல் தட்டில் பரப்பிக் கிடந்த தங்கக் கட்டிகள் என்பவை ‘கோதுமை மணிகள்’. இரண்டாவது தட்டில் கொட்டிக் கிடந்த முத்துகள் ‘உளுத்தம் பருப்பு’. மூன்றாவது தட்டில் கிடந்த பவளங்கள் ‘துவரம் பருப்பு’, கடைசித் தட்டில் குவிந்துகிடந்த வைரக்கற்கள் என்பது ‘ஜவ்வரிசி’. அவை அனைத்தும் எஜமானியம்மா காய வைத்தது. அந்த உணவு தானியங்களை நீங்கள் ஆபரணப் பொருட்கள் என்று தவறாகப் புரிந்துகொண்டீர்கள்” என்று விவரித்துச் சொன்னது அம்மா கோழி.

உணவு தானியங்களைத் தெரிந்துகொண்ட குஞ்சுகள் மகிழ்ச்சி அடைந்தன. மீதி இருந்த ஒரே ஒரு சந்தேகத்துக்கான விளக்கத்தை அம்மாவிடம் கேட்டன:

“அப்படியானால் உணவு தானியப் பொருட்களில் உருண்டு விளையாடிக்கொண்டிருந்த கோமேதகக் கற்கள்?”

“அவை கோமேதகக் கற்கள் இல்லை. அவை உணவு தானியங்களைத் தாக்கும் மாவுப் பூச்சிகள். அந்தப் பூச்சிகளிடமிருந்து உணவு தானியங்களைக் காக்கத்தான் எஜமானியம்மா வெயில் காய வைத்திருந்தார். கடுமையான வெயிலின் சூட்டைத் தாங்கமுடியாமல் பூச்சிகள் இறந்துவிடும். கடைசியில் தானியங்களைத் தண்ணீரில் போட்டுக் கழுவி பயன்படுத்துவார்.”

அம்மா கோழி கற்றுத்தந்த விசயங்களை குஞ்சுகள் கவனமாகக் கேட்டுக்கொண்டன. நேரமானதால் குஞ்சுகளுக்குப் பசியெடுத்தது.

“அம்மா! நாங்கள் எஜமானியம்மா வைத்த கேழ்வரகைச் சாப்பிடவா?” என்று அம்மாவிடம் கேட்டன.

அதைக் கேட்ட அம்மா கோழி சொன்னது. “கேழ்வரகைச் சாப்பிடும் முன், நீங்கள் தானியங்களுக்கு மத்தியில் மறைந்து விளையாடும் மாவுப் பூச்சிகளைக் கொத்திச் சாப்பிடுங்கள். சாப்பிட அவை ருசியாக இருக்கும். எல்லாப் பூச்சிகளையும் தின்று தீர்த்து விடுங்கள். நாள் தவறாமல் நமக்கு உணவுதரும் எஜமானியம்மாவுக்கு அது உதவியாக இருக்கும்.”

அம்மா சொன்ன அடுத்த நொடியே குஞ்சுகள் அனைத்தும் ‘கொக்..கொக்’ என தட்டுகளை நோக்கி ஓடின. மாவுப்பூச்சிகளைத் தேடித்தேடி கொத்திச் சாப்பிட்டன. கோழிகளை வளர்த்த எஜமானியம்மாவுக்கு கோழிக் குஞ்சுகள் செய்த எளிய உதவி அதுதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x