Published : 28 Jun 2017 11:21 AM
Last Updated : 28 Jun 2017 11:21 AM

சித்திரக் கதை: உணவு எப்போது ருசிக்கும்?

அரசருக்கு அன்று கடுமையான பணி. நகர்வலம் சென்றுவிட்டு, அரண்மனை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தார். தாகமும் பசியும் அதிகமாக இருந்தது. கையில் உணவுப் பொருட்களோ தண்ணீரோ இல்லை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார். எதிரிலிருந்த வீட்டு வாசலில் ஒரு பெண் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தார்.

“அம்மா, குடிக்க ஏதாவது கிடைக்குமா? தாகமாக இருக்கிறது” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார் வீரம்மாள்.

“மன்னா, வணக்கம். தாங்கள் பசியுடன் இருப்பதுபோல தெரிகிறது. என் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கேழ்வரகுக் கூழ் தருகிறேன் மன்னா” என்று தயங்கியபடியே கேட்டார் வீரம்மாள்.

“என் நிலை அறிந்து கேட்டதற்கு நன்றி. நான் மிகுந்த பசியுடன் இருக்கிறேன். தாங்கள் எது கொடுத்தாலும் சாப்பிடக் காத்திருக்கிறேன்.”

மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் சென்று, ஒரு குவளை நிறையக் கேழ் வரகுக் கூழ் கொண்டுவந்தார் வீரம்மாள். அரசர் அதை ஆர்வத்துடன் வாங்கி, பசி தீரும்வரை குடித்தார்.

“ஆஹா! என் வாழ்நாளில் இவ்வளவு ருசியான ஒன்றை நான் சாப்பிட்டதே இல்லை. எப்படி வந்தது இவ்வளவு ருசி? இதை எப்படிச் செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லுங்கள். நான் அரண்மனைச் சமையல்காரர்களிடம் இதே பக்குவத்தில் சமைக்கச் சொல்கிறேன்."

வீரம்மாளும் கேழ்வரகுக் கூழ் செய்யும் பக்குவத்தை வீரர் ஒருவரிடம் கூறினார். அந்த வீரர் அதை அப்படியே அரண்மனையின் தலைமைச் சமையல் கலைஞரிடம் கூறினார்.

“ என்னது! மன்னர் கூழ் குடித்தாரா! நான் அவருக்குத் தினமும் நெய் சொட்டச் சொட்ட பாதாமும் பிஸ்தாவும் கலந்து பாயசம் செய்கிறேன். அவற்றை விடவும் இது பிரமாதம் என்கிறாரா? ஆச்சரியமாக இருக்கிறது. சரி, சரி நாளையே கூழ் செய்துவிடுகிறேன்” என்றார் சமையல் கலைஞர்.

மறுநாள் காலை கேழ்வரகுக் கூழ் செய்து, மன்னருக்குக் கொடுத்தார். மன்னர் ஆர்வமாக அதை வாங்கிப் பருகினார். அவருடைய முகம் மாறிவிட்டது.

“இது நேற்று நான் பருகியதுபோல இல்லையே? அதே முறைப்படிதான் செய்தாயா?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டார் மன்னர்.

“ஆம் மன்னா.”

“ஏன் அந்தச் சுவை வரவில்லை? வீரம்மாளை உடனே அழைத்து வாருங்கள். அவர் ஏன் இப்படித் தவறான முறையைச் சொல்லிக் கொடுத்தார்?”

சிறிது நேரத்தில் வீரம்மாள் வந்துசேர்ந்தார்.

“தவறான செய்முறையைச் சொல்லிக் கொடுத்த குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?”

“நான் சரியாகத்தான் சொன்னேன் மன்னா.”

“அந்தச் சுவை வரவில்லையே?"

வீரம்மாள் சிறிதும் பயமின்றி, “நான் எதையும் மாற்றிக் கூறவில்லை. நீங்கள் அருந்திய கேழ்வரகு கூழை எனக்கும் சிறிது தரச் சொல்லுங்கள். நான் உண்ட பின் சொல்கிறேன்” என்றார்.

கூழ் வந்தது. பருகிப் பார்த்தார். “மன்னிக்கவும் மன்னா. இது அதே போன்ற சுவையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இது சுவையாக இல்லை என்று நீங்கள் நினைத்தீர்களானால் அதற்கு மூன்று காரணங்களை என்னால் கூற இயலும்” என்றார் வீரம்மாள்

“என்ன? ”

“மன்னா! ‘பசித்த பின் புசி’ என்பார்கள். நேற்று நீங்கள் கடுமையான பசியில் இருந்தீர்கள். அந்த நேரம் எதை உண்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதையே பசியில்லாத நேரம் உண்டால் ருசிக்காது. இன்று அந்த அளவு பசித்த பின் உண்டீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டாவது அந்தக் கூழ் என் குடும்பத்துக்காக என் கையால் தயாரிக்கப்பட்டது. அதில் அன்பும் அக்கறையும் அதிக அளவு கலந்திருக்கும். இங்கே பணி செய்யும் சமையல்காரர் தயாரித்த கூழில் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? மேலும் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் வாங்கப்படும் உணவுப் பொருளுக்கு உள்ள ருசி மற்றவற்றுக்குக் கிடையாது” என்றார் வீரம்மாள்.

“என்ன அருமையான விளக்கம்!” என்று பாராட்டி, வீரம்மாளுக்குப் பரிசும் கொடுத்து அனுப்பிவைத்தார் மன்னர்.

ஓவியங்கள் : லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x