Last Updated : 16 Nov, 2016 11:22 AM

 

Published : 16 Nov 2016 11:22 AM
Last Updated : 16 Nov 2016 11:22 AM

சித்திரக் கதை: ஆமைகளின் நண்பர்கள்!

இரவு மணி பத்து. கடல் அழகை ரசிக்கப் பிள்ளைகளுடன் வந்திருந்த பொதுமக்கள், வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அலைகளில் கால் நனைத்து விளையாடிய சிறுவர்களைக் காணாமல் இரைச்சல் சத்தத்துடன் அழுதுகொண்டிருந்தது கடல். நடுராத்திரிவரை கடற்கரையில் தாமுவைக் காணாமல் தவித்துப் போனார் தாத்தா. அவனைத் தேடித்தேடி களைத்தும் போனார்.

யார் இந்த தாமு? கடலைப் பார்க்கத் தன்னந்தனியாகவா வந்தான்? தாமுவுக்கு என்ன ஆயிற்று? தொலைந்துவிட்டானா?

தாமு, கடற்கரையில் தண்ணீர் பாக்கெட் விற்று வீட்டைக் காப்பாற்றும் சிறுவன்.

“ரெண்டு ரூபா… ரெண்டு ரூபா… அண்ணா! ஒரு தண்ணி பாக்கெட் வாங்கிக்கோங்க. சில்லுன்னு இருக்கும் சார்! உங்களுக்கு ஒண்ணு தரட்டுமா?”

தினமும் சுமார் இருநூறு தண்ணீர் பாக்கெட்களைக் கூவிக்கூவி விற்றுத் தீர்ப்பான். விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். கூடுதல் காசு கிடைக்கும்.

‘சிப்பிச்சேரி' கடற்கரை, தாமுவுக்கு பழக்கமான இடம். ஐஸ் கட்டிகளும் தண்ணீர் பாக்கெட்களும் நிரப்பிய அலுமினிய வாளியுடன் கடற்கரையைச் சுற்றிச் சுற்றி வருவான். எனவே, தாமு நிச்சயம் தொலைந்து போகும் சாத்தியம் இல்லை. அவனைத் தேடிவந்த தாத்தா முழுமையாக நம்பினார். மக்கள் ஓய்வெடுக்கும் மணல் பரப்பைக் கடந்தார். கடலை ஒட்டிய பாதையில் தனியாக நடந்து சென்றார்.

தாமுவைத் தேடியா தாத்தா கடற்கரைக்கு வந்தார்?

இல்லை. அது மட்டுமே காரணம் இல்லை. தாத்தா, நாள் தவறாமல் கடற்கரைக்கு வருவதுண்டு. ஈரமான மணலில் நெடுந்தூரம் நடந்துசெல்வார். கடற்கரை மணலில் கடல் ஆமைகளின் முட்டைகளைத் தேடியெடுத்துச் சேகரித்துக்கொள்வார்.

“என்ன தாத்தா? இது தப்பில்லையா? ஆமை முட்டைகளைத் திருடிக்கொண்டு போவீங்களா? அது ஆமைகளுக்கு நாமச் செய்ற துரோகமில்லையா?”

ஒரு நாள், தாமு தப்பான எண்ணத்தில் தாத்தாவிடம் கோபித்துக்கொண்டான். விசயத்தைச் சொல்லி அவனுக்குத் தெளிவாக விளக்கினார் தாத்தா.

“அதெல்லாம் இல்லை தாமு” என்று பேச ஆரம்பித்த தாத்தா, “கடல் ஆமை முட்டைகளைச் சேகரித்துக் கொண்டு போய்க் குட்டி ஆமைகள் பொரிந்து வரும்வரை பாதுகாப்பாய் வைத்திருப்பேன். பிறகு அவற்றைக் கடலுக்குள் நீந்த விட்டுவிடுவேன்” என்று சொன்னார்.

அது ஏன்?

கடல் ஆமைகள் கடலோர மணலில் இடும் முட்டைகளைப் பலர் திருடிவிடுகிறார்கள். சில பறவைகள் அவற்றை இரைக்காகக் கொத்திச் செல்கின்றன. வேறுசில கடல்வாழ் உயிர்களால்கூட முட்டைகளுக்கு ஆபத்து உண்டு எனப் புரிய வைத்தார் தாத்தா.

அன்று முதல், தாமுவும் தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். தண்ணீர் விற்பனை முடித்தபிறகு ஆமை முட்டைகள் சேகரிப்பதில் அவருக்கு உதவ ஆரம்பித்தான் தாமு.

கடலோரம் இருட்டாக இருந்தது. தாத்தா, மீன்பிடி படகுகள் நிறுத்தி வைத்திருந்த பகுதியை நெருங்கினார். உடைந்து போன ஒரு படகுக்கு அடியில் தெரிந்த நிழல் அவரைத் திடுக்கிட வைத்தது. அவர் சிறிது பின்னால் நகர்ந்து, நடப்பதைக் கவனித்தார்.

முகம் தெரியாத ஒருவரின் நிழல் தெரிந்தது. அவ்வுருவம் உட்கார்ந்திருப்பது தெளிவாகப் புரிந்தது. அங்கிருந்து வந்த அழுகுரல் தாத்தாவின் காதுகளுக்குக் கேட்டது.

இனியும் மறைந்து நின்று கண்காணிப்பதில் பயனில்லை. பாவம், யாரோ ஒருவர் சிக்கலில் தவிக்கிறார் என்பதை உணர்ந்த தாத்தா படகுக்கு அருகே போனார்.

அடடே! உடைந்த படகில் சாய்த்து உட்கார்ந்து அழுது கொண்டிருப்பவன் தாமுதான்.

“என்னாச்சு தாமு. யாராவது உன்னை அடிச்சாங்களா? வலிக்குதா?” என்று பதறிய தாத்தா, தாமுவின் கன்னத்தைத் துடைத்துவிட்டார். உடம்பில் காயங்கள் ஏதும் உள்ளனவா எனச் சோதித்தார்.

“பதில் சொல்லு தாமு” என உரத்த குரலில் கேட்டார். அவனால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உள்ளங்கையில் வைத்திருந்த ஒரு பொருளைத் தாத்தாவிடம் ஒப்படைத்து விட்டு விம்மிவிம்மி அழுதான்.

நடந்தது என்ன என்பது தாத்தாவுக்கு ஓரளவு புரிந்தது. அவர் கையிலிருப்பது ஒரு கடல் ஆமை. இறந்து போன ஆமை.

“தாத்தா, ஆமையோட வாயைப் பாருங்க. நஞ்சு போன ஒரு தண்ணி பாக்கெட்ட கவ்விப் பிடிச்சிருக்கு. இதுக்கு என்னாச்சு தாத்தா? கரை ஒதுங்கிக்கெடக்குது. ஆமை செத்து போச்சா?”

“தாமு, குடிதண்ணி பாக்கெட், பிளாஸ்டிக் வகையில ஒண்ணு. நம்ம ஜனங்க தண்ணிய குடிச்சிட்டு பிளாஸ்டிக் பாக்கெட்டை அங்கேயே தூக்கி எறியுறாங்க. அதேதோ சாப்பிடுற பண்டம்னு நெனச்சு கடல்வாழ் உயிர்கள் தின்ன நெனைக்குது. அதுல உள்ள விஷத்தன்மை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமையுது. இதே மாதிரிப் பல ஆயிரம் உயிருங்க செத்துப்போகுது”.

“ஐயோ, தாத்தா... தப்பு பண்ணிட்டேனே. கடற்கரையில தண்ணி பாக்கெட் வித்து சம்பாதிக்க நெனச்சு கடல் ஆமைக்குத் துரோகம் செஞ்சுட்டேன்”.

கதறி அழுதபடி தன்னைத்தானே திட்டித் தீர்த்தான் தாமு. தண்ணீர் பாக்கெட் விற்பனையை விட்டுவிடுவதாய்ச் சபதம் எடுத்தான். அதைத் தாத்தாவிடம் தீர்மானமாகச் சொன்னான்.

“ தாமு, நீ விஷயம் தெரிஞ்சு ஏதும் தப்பு செய்யல. அதோட உனக்கு படிப்பு அறிவும் கூட இருந்திருந்தா நல்லது. இன்னைக்கி நான் உன்னைய தேடி வந்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. மொதல்ல நீ அழுகையை நிறுத்து. சொல்றேன்”.

உடனடியாக அழுகையை நிறுத்தினான் தாமு. தாத்தா சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க ஆர்வம் காட்டினான்.

“தாமு, நாளைக்குக் காலையில நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பள்ளிக்கூடத்துக்குப் போறோம். என்னோட நண்பர்தான் அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துறாரு. ஏற்கெனவே அவருட்ட பேசி அனுமதி வாங்கிட்டேன். படிப்புக்கான பணத்தை நான் கட்டிடறேன். சரியா?”

தாமு திகைத்துப் போனான். தாத்தா சொன்ன யோசனையை ஏற்றுக்கொள்வதாகத் தலையசைத்தான்.

“ஒண்ணே ஒண்ணு சொல்லட்டுமா தாத்தா? காலையில பள்ளிக்கூடம் போவேன். சாயங்காலம் கடற்கரைக்கு வந்திடுவேன். உங்கக்கூட ஆமை முட்டைகள சேகரிப்பேன். அதோடுகூடச் ஜனங்க தூக்கி வீசின தண்ணி பாக்கெட்களையும் சேகரிச்சு குப்பை கூடத்துல கொண்டுபோய்க் கொட்டுவேன்”.

“குப்பையில கொட்ட வேண்டாம் தாமு. அத மறுசுழற்சி செஞ்சு குழந்தைங்க விளையாட்டு பொம்மை செய்வோம்”.

தாத்தாவுக்குப் பெருமிதமாக இருந்தது. தாமுவை அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x