Last Updated : 01 Feb, 2017 10:28 AM

 

Published : 01 Feb 2017 10:28 AM
Last Updated : 01 Feb 2017 10:28 AM

சித்திரக்கதை: வானத்தை எரித்தது யார்?

வாணி, 6 வயதே நிரம்பிய குட்டிச் சிறுமி. இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். சிறு வயதிலிருந்தே கொஞ்சம் பயந்த சுபாவம் உடையவள். வீட்டுக்கு வெளியே காற்று வேகமாக வீசினாலே ஜன்னல் கதவுகளை மூடிக்கொள்வாள். வீட்டைச் சுற்றியுள்ள மரங்களின் கிளைகள் வேகமாக அசைந்தாலே மரம் முறிந்துவிடுமோ என்று சந்தேகப்படுவாள். பொட்டு வெடியை வெடிக்கத் துப்பாக்கியைக் கையிலெடுக்கப் பயப்படுவாள்.

“பயந்தாங்கொள்ளி வாணி!” என்று அவளை எல்லோரும் கேலி பேசுவார்கள்.

இரவில் தெரு நாய்கள் குறைத்தால் திருடன் வந்துவிட்டதாக எண்ணிப் பதுங்குவாள். நடு ராத்திரியில் தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்தால் அழ ஆரம்பித்துவிடுவாள். அம்மா, அவளைத் தட்டிக்கொடுத்தபடி இருப்பார். அம்மாவைக் கெட்டியாகக் கட்டியணைத்தபடியே தூங்குவாள்.

ஒரு நாள், வாணி வாசலுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. லேசாகப் பெய்யத் தொடங்கிய மழை, கொஞ்ச நேரத்தில் வெளுத்து வாங்கியது. சடசடவென்று பெய்த மழை வீட்டு மேற்கூரையில் விழுந்து பலத்த சத்தத்தை எழுப்பியது. அதைக் கண்டு பயந்துபோனாள் வாணி. லேசாக நனைந்தும்போனாள்.

“வாணி! வீட்டுக்குள்ள வா. மழையில நனைஞ்சுட்டியா?” என்ற அம்மாவின் குரல் வீட்டிலிருந்து கேட்டது. வாணி, மெல்லத் தனது அறைக்குப் போய்த் தலையைத் துவட்டிக்கொண்டாள். ஆடைகளையும் மாற்றிக்கொண்டாள். அவளது உடம்பு நனைந்ததால் குளிரால் நடுக்கம் கண்டது.

அப்போதைக்கு வாணியின் அப்பா அலுவலகத்திலிருந்து வந்துசேரவில்லை. அப்பா, அடைமழையில் சிக்கிக்கொள்வாரே என்று தவித்தாள். மழையின் வேகம் குறைந்தபாடில்லை. மழை அதிகரித்துக்கொண்டே போனது.

அப்பா வருகிறாரா என வாசலைத் தாண்டி வெளியே எட்டிப் பார்த்தாள். திடீரென்று வானத்தில் மின்னல் வெட்டி மறைந்தது. அடர்த்தியாகப் பரவிய வெளிச்சம் அவளது கண்களைக் கூசியது. கண்களுக்கு எதிரில் தோன்றிய மின்னல் வாசலில் விழுந்ததைப் போல ஜாலம் காட்டிவிட்டு மறைந்தது.

பாவம்! வாணி திடுக்கிட்டுப் போனாள். மிரட்சியில் கண்களை இறுக மூடிக்கொண்டு வீட்டுக்குள்ளே ஓடினாள். மின்னல் வெட்டி மறைந்த சில நொடிகளுக்குள் இடியும் இடித்தது. இடிச் சத்தம் அவளது காதைக் கிழிப்பதுபோல இருந்தது. வாணி ‘ஓ’வெனக் கூச்சலிட்டு அழத் தொடங்கினாள்.

“வாணி! இடி இடிக்கிற பக்கமாப் போய் நிற்காத” என்ற அம்மாவின் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் காதுகளைப் பொத்திக்கொண்டாள். அம்மாவிடம் ஓடிச்சென்று, பயத்தில் அவரது முதுகுப்பக்கம் நின்று கட்டியணைத்துக்கொண்டாள்.

“பயம்ம்ம்ம்ம்மா இருக்குதும்மா!” என்ற வாணி, அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அம்மா அவளைச் சமாதானம் செய்தார். சற்று நேரத்தில் வெளியே மழையின் வேகம் கொஞ்சம் குறைந்தது. அப்பாவும் அந்த நேரத்தில் வீடு திரும்பினார். வானம் தூறிக்கொண்டிருந்தது. அப்பாவைப் பார்த்தவுடன் வாணியின் அழுகை இரு மடங்கானது. அவள் பதற்றத்துடன் இருந்தாள்.

நிற்பது போல இருந்த மழை திரும்பவும் பெய்ய ஆரம்பித்தது. சற்று நேரத்தில் வானத்திலிருந்து மறுபடியும் மின்னல் வெட்டியது. வாணி, கதறி அழ ஆரம்பித்தாள்.

“வாணி, ஏன் அழற?” என அப்பா ஓய்வறையிலிருந்து கேட்டார்.

உடனே வேகமாக ஓடி வந்து, “அப்பா! வானம் தீப்பிடிச்சு எரியுதுப்பா!” என்று சொல்லி வாணி, சத்தமாகக் கத்தினாள். அப்பா என்னென்னவோ சொல்லிப் பார்த்தார். வாணி எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

சற்று நேரம் யோசித்த அப்பா, பையிலிருந்த செல்போனை எடுத்தார். அதில் சில எண்களைத் தட்டி யாரையோ அழைத்தார். ஆனால், எதிர் பக்கத்திலிருந்து பதில் வரவில்லை. அப்பா யாரிடம் பேசப்போகிறார் என்று வாணி பார்த்துக்கொண்டே இருந்தாள்.

“ச்சே! மழை நேரத்தில சிக்னலும் சரியா கிடைக்கமாட்டேங்குது!” என்று பதில் சொன்னவரிடம் தொடர்ந்து கேட்டாள் வாணி:

“யாருக்குப்பா போன் செய்றீங்க?”

“கொஞ்சம் பொறு! இப்போ சிக்னல் கிடைச்சுருச்சு” என்றவர், “ஹலோ! ஹலோ!” என அழைப்பைத் தொடர்ந்தார். எதிர்ப்பக்கத்திலிருந்து ஒருவர் பதில் சொல்வதைப்போலத் தனக்குத்தானே பாவனை செய்தார். வாணி, அப்பாவையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

“ஹலோ! தீயணைப்பு நிலையமா? வானத்தை அண்ணாந்து பார்த்தீங்களா? வானத்துல யாரோ தீயைப் பத்த வெச்சுருக்காங்க. காட்டுத் தீ மாதிரி வானத்துல, தீ பயங்கரமா கொழுந்துவிட்டு எரியுது” என்று தகவல் தெரிவித்த அப்பா, மேலும் அவரிடம் சொன்னார்.

“சார்! உடனடியாக ஒரு தீயணைப்பு வண்டியை வானத்துக்கு அனுப்பி வையுங்க. வானத்தை எரிச்சு சாம்பல்லாக்கப்போற தீயைச் சட்டுன்னு அணைக்கச் சொல்லுங்க.” என்று எச்சரிக்கைச் செய்துவிட்டு, அலைபேசியைத் துண்டித்தார்.

அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டுச் சமாதானமடைந்த வாணி, அழுகையை நிறுத்தினாள். தனக்கு அருகில் நெருங்கி வந்து கையைப்பற்றிக்கொண்ட மகளிடம் அப்பா சொன்னார்:

“வாணி! இதோ இப்பவே ஒரு தீயணைப்பு வண்டிய வானத்துக்கு அனுப்புறதா சொல்லியிருக்காங்க. ‘டிங்..டிங்..’ன்னு மணியடிச்சுக்கிட்டே கிளம்புற வண்டிக்குள்ளே ஐந்தாறு தீயணைப்பு வீரர்கள் இருக்காங்க. அவங்க, தண்ணிய பீய்ச்சியடிச்சு வானத்தில எரியுற தீயை அணைச்சுடுவாங்க. பிறகு பாரேன்! தீயை அணைச்ச தண்ணியெல்லாம் சேர்ந்து கனமழையா கொட்டும்” என்று மகளைத் தேற்றினார்.

அதற்கடுத்த ஐந்து நிமிடங்களில் மின்னல் வெட்டுவது நின்று போனது. மழை தீவிரமாகப் பெய்யத் தொடங்கியது. அந்த ஐந்து நிமிட இடைவெளியில், அம்மா அவளுக்கு இரவு உணவை ஊட்டி முடித்திருந்தார்.

‘ச்சோ’வென ஊரில் மழை பெய்துகொண்டிருந்தது.

“வாணி! பார்த்தியா. தீயணைப்பு வீரர்கள் வானத்தில எரிஞ்ச தீயை அணைச்சுட்டாங்க” என்றார் அப்பா. அப்பா சொவ்வதை உண்மையென நம்பிய வாணி, ஓடிச்சென்று அப்பாவின் மடியில் தாவியேறிக் கன்னத்தில் முத்தம் தந்தாள். பிறகுதான் அவளுக்கு நிம்மதி திரும்பியது. வாணி, பயத்திலிருந்து முழுவதுமாக மீண்டிருந்தாள்.

கடைசியில் அவள், அப்பாவின் மடியில் சாய்ந்தபடியே அழுகையை நிறுத்திவிட்டுத் தூங்கிப்போனாள். வானத்தை எரித்தது யார் என்ற கேள்வியைக் கேட்க மறந்தே போனாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x