Last Updated : 28 Oct, 2015 11:47 AM

 

Published : 28 Oct 2015 11:47 AM
Last Updated : 28 Oct 2015 11:47 AM

சித்திரக்கதை: மனம் மாறிய வைக்கோல்!

காலை வேளை. சூரியன் தகதகவென எழ ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மஞ்சள் நிறம் ஒளிர்ந்தது. அந்த ஒளிக்கதிர் வயல்களில் வளைந்திருந்த நெற்கதிர்களின் மேல் பட்டதும் வயலும் பொன் நிறத்தில் மின்ன ஆரம்பித்தது. ‘அறுவடைக்குத் தயாராகி விட்டேன்’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்த முற்றிய நெற்கதிர்கள் சூரிய ஒளியில் அழகாகத் ஜொலித்தன.

அப்போது- “நான் மாடுகளுக்கு உணவாவதைத் தவிர வேறு எதற்குமே பயனில்லாதவன். என்னுடைய பிறப்பு பயனற்ற வாழ்க்கையாக முடிந்துவிடும் போலிருக்கிறது!” என்ற அவநம்பிக்கைக் குரல் நெற்கதிரின் காதுகளில் மெதுவாக விழுந்தது.

சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த நெற்கதிர், “யாரு… யாரு பேசுறது?” என்று கேட்டது.

“சற்றுத் திரும்பிப் பார். நான்தான் வைக்கோல் பேசுகிறேன்!” என்றது வைக்கோல். வயல்வெளிக்கு அருகில் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல்போரிலிருந்துதான் அந்தப் புலம்பல் ஒலித்தது.

திரும்பிப் பார்த்த நெற்கதிர், “நீ ஏன் இப்படிப் புலம்புகிறாய்?” என்று கேட்டது.

அதைக் கேட்ட வைக்கோல், “உனக்கென்னப்பா… உன் பாடு தேவலை! மனிதர்கள் உனக்கு ராஜமரியாதை தருகிறார்கள். நீயும் அவர்களுக்கு உணவாக மாறி நன்மை செய்கிறாய்!” என்று பொறாமையுடன் கூறியது.

கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் பேசியது வைக்கோல், “உன்னை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பாரேன்! பறவைகள் உன் அருகே வராமல் இருப்பதற்காக சோளக்கொல்லை பொம்மையை வைத்திருக்கிறார்கள். இரவில் வேட்டை நாய்கள் உனக்குப் பாதுகாவலாக இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் என்னை சீண்டுவதே இல்லை! என்னைப் பாதுகாப்பதும் இல்லை!” என்று வைக்கோல் வருத்தமாகக் கூறியது.

இதைக் கேட்டு, அருகிலிருந்து கேலிச் சிரிப்புச் சத்தம் ஒன்று கேட்டது. தொடர்ந்து ஒரு குரலும் கேட்டது. “உன் பிறப்பு அப்படி! இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அவரவர்களுக்கு விதித்ததை அவரவர் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்!” என்று கர்வத்துடன் அந்த ஒலி கேட்டது.

நெற்கதிரும், வைக்கோலும் திரும்பிப் பார்த்தன. அங்கே நெல்மணிகளைக் கொண்டிராத பதர் ஒன்று தலைநிமிர்ந்து விரைப்பாக நின்று கொண்டிருந்தது.

“உன் மண்டையில் ஒன்றுமில்லை என்பதை நீயே திரும்பவும் நிரூபிக்கிறாய். மனிதர்கள் உனக்குப் 'பதர்' என்று பெயர் வைத்ததும் பொருத்தமாகத்தான் இருக்கிறது! உன்னால் மனிதனுக்கும் பயனில்லை. உன் தலையில் நெல்மணிகளும் இல்லை! அதனால்தான் தலைநிமிர்ந்து பெருமையை பீற்றிக் கொள்கிறாய்” என்று திட்டியது நெற்கதிர். பின்னர் வைக்கோலிடம் திரும்பி, “வைக்கோல் நண்பா! உன் கவலை ரொம்ப தப்பு. ஏனென்றால், என்னை பாதுகாப்பதே நீ தானே!” என்றது.

“ என்னது, நானா?!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டது வைக்கோல்.

“ஆமாம்! அதோ நின்று கொண்டிருக்கிறதே காவல்கார பொம்மை. அது வெளிப்பார்வைக்குத்தான் துணியால் ஆன சட்டையும் வேட்டியும் போட்டிருக்கிறது. உண்மையில் அதனுள்ளே நீ தானே இருக்கிறாய். உன்னை வைத்துத்தான் அந்தப் பொம்மையைச் செய்திருக்கிறார்கள்” என்று பொம்மையை சுட்டிக்காட்டிக் கூறியது நெற்கதிர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பொம்மைக்குள்ளிருந்த வைக்கோல், “ஆமாம்! என்னை பார்த்துப் பறவைகள் எல்லாம் பயந்து ஓடுகின்றன. அதுமட்டுமா? சில நேரங்களில் திருடர்கள்கூட என்னைப் பார்த்து மனிதன் நின்றுகொண்டிருக்கிறான் என நினைத்து ஓடிவிடுகிறார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்!” என்று மகிழ்ச்சியுடன் கூறியது.

தொடர்ந்து நெற்கதிர் பேச ஆரம்பித்தது. “இன்னும் இருக்கிறது கேள்! உன்னை ஒன்று சேர்த்துக் கயிறுபோல் திரித்தால், திருவாரூர் தேரைக்கூட இழுத்துவிடலாம். அவ்வளவு பலசாலி ஆகிவிடுவாய்!” என்றது.

இவற்றையெல்லாம் கேட்ட வைக்கோலுக்குப் பெருமை தாங்கவில்லை. “நான் அவ்வளவு பயனுள்ளவனாக இருக்கிறேனா?! எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. நான் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதால் எனக்கு எதுவுமே தெரியவில்லை” என்றது.

உடனே அதற்கு நெற்கதிர் பதில் சொன்னது. “ நாம் நம்மை சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு உழைத்தால்தான், நம்மிடம் உள்ள திறமைகள் நமக்கே தெரிய வரும். உன்னைப் போல ஒரே இடத்தில் இருந்துகொண்டு உலகம் தெரியாமல் இருந்தால் நம்முடைய திறமைகள் எல்லாம் வீணாகப் போய்விடும்!” என்றது. காவல்காரப் பொம்மையும் அதை ஆமோதித்தது.

“இன்னொரு விஷயமும் இருக்கிறது. நீயே நான்… நானே நீ; என்ன புரியவில்லையா? என்னிடம் உள்ள நெல் தானியத்தை அடித்து எடுத்துவிட்டால் நானும் உன்னைப் போல் வைக்கோலாக மாறி விடுவேன். அதனால் நீ என்னைப் பார்த்து பொறாமைப்படாதே” என்றது நெற்கதிர்.

அப்போது ஒரு மனிதன் வைக்கோல்போரை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தான். அதைப் பார்த்த காவல்கார பொம்மை, “அதோ பார்! உன்னைக் கயிறாகத் திரித்து உபயோகப்படுத்த ஒரு மனிதன் வருகிறான். இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள். உடலை வருத்தி மற்றவர்களுக்குப் பயனுள்ளவனாக மாறினால்தான், உன்னிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கும்!” என்றது.

அதைக் கேட்ட வைக்கோல்கள் அனைத்தும், ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று அந்த மனிதனின் கைகளுக்கு வாகாகச் சென்று சேர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x