Last Updated : 27 Dec, 2016 04:51 PM

 

Published : 27 Dec 2016 04:51 PM
Last Updated : 27 Dec 2016 04:51 PM

சித்திரக்கதை: பாடம் படித்த பூஞ்செடிகள்

பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய சுதமதி பாட்டியைச் சந்திக்க ஓடினாள்.

“பாட்டி! நீங்க சொன்னதுபோலவே நேற்று சாயங்காலம் நான் ஒரு வேலையைச் செய்தேன். ‘வெட்டி வெச்சா குட்டி போடும்’ செடியோட இலையைப் பிடுங்கி மண்ணில் புதைச்சு வைத்தேன். அது இப்போ துளிர்த்திருக்குமா பாட்டி?”

“வா! வா… தோட்டத்துக்குப் போய் பார்த்துவிடுவோம்” என்று பதில் சொன்ன பாட்டி, பேத்தியுடன் தோட்டத்துக்குப் போனார். அங்குப் போன சுதமதிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இலை ஓரத்தில் துளிர் விட்டிருந்தது.

உடனே துள்ளிக் குதித்து உற்சாகமடைந்தாள் சுதமதி. பாட்டி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவளுக்குத் தாவரங்களைப் பற்றி நிறையத் தகவல்களைச் சொல்லியிருக்கிறார். விடுமுறை நாட்களில் நாடோடிக் கதைகளும், நாட்டுப்புறப் பாடல்களும் சொல்லித் தந்துள்ளார். எனவே, பாட்டியிடம் சுதமதிக்கு ரொம்ப அன்பு ஜாஸ்தி.

சுதமதியின் பாட்டி இயற்கையை நேசிப்பவர். வீட்டைச் சுற்றிலும் பலவகைப் பூஞ்செடிகள் வளர்த்துவந்தார். அடுக்குச் செம்பருத்தி, கனகாம்பரம், பிச்சி, சிவப்பு ரோஜா, டிசம்பர் பூ, சாமந்தி, மல்லிகை, நந்தியாவட்டை என வீட்டைச் சுற்றிலும் ஏராளமான செடி, கொடிகள் வளர்த்து வந்தார். அவற்றுக்கு இயற்கை உரமிட்டு வளர்த்தார்.

பாட்டியுடன் சேர்ந்து சுதமதியும் தோட்ட வேலையைச் செய்யப் பழகிக்கொண்டாள். பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும், புத்தகப் பையுடன் தோட்டத்துக்குப் போய்விடுவாள் சுதமதி. செடிகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை எழுதுவாள்.

பள்ளியில் சொல்லிக் கொடுத்த பாடங்களைச் செடிகளுக்கு வாசித்துக் காட்டுவாள். எந்தப் பூஞ்செடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து என்னென்ன பாடங்களைப் படித்தேன் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்வாள். செடிகள் பதில் பேசாதவை எனத் தெரிந்தும் ஒவ்வொரு செடியிடமும் கேள்வி கேட்பாள். செடிகளுக்கு எதிரில் தனக்குத் தானே விடையைச் சொல்லிச் சந்தோஷப்படுவாள். எப்போதும் அடுக்கு செம்பருத்திச் செடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபடி அறிவியல் பாடத்தை சுதமதி வாசிப்பாள்.

“ஒரு செல் தாவரம் எவை? பாசி, பூஞ்சை.

அவற்றின் அறிவியல் பெயர் என்ன? கிளாமிடாமோனசஸ்.

இப்படிப் பாடங்கள் மனதில் பதியும்வரை திரும்பத் திரும்ப வாசித்துப் பழகுவாள்.

கனகாம்பரச் செடிக்குக் கீழே உட்கார்ந்து, கணித வீட்டுப் பாடத்தை எழுதி முடிப்பாள். மல்லிகைப் பந்தலுக்குப் பக்கத்தில் நடந்துகொண்டே தமிழாசிரியர் நடத்திய செய்யுளை வாசிப்பாள்.

“பயிரை வளர்த்தால் பலனாகும் – அது உயிரைக் காக்கும் உணவாகும்.

வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்.” என்று அவள், மல்லிகைக் கொடியிடம் ஒப்புவிப்பாள்.

“இந்தச் செய்யுளை எழுதியது யார் தெரியுமா? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார். சரியாக ஒப்பிச்சதுக்கு எத்தனை மதிப்பெண் தருவாய்?” என்று சுதமதி கேட்டவுடன், மல்லிகைக் கொடி ஐந்தாறு பூக்களை மண்ணில் உதிர்க்கும். செல்லப் பிராணிகளைப் போலவே செடிகளும் நம்மைப் புரிந்துகொள்கின்றன என்று அவளுக்கு நம்பிக்கை.

சுதமதி, தனது நெருங்கிய தோழியைப் போலவே பூஞ்செடிகளுடன் நட்பு பாராட்டி வந்தாள். வீட்டுப் பாடங்களைப் படித்துமுடித்த பிறகு, பாட்டியைப் போய்ப் பார்ப்பாள். பாட்டி மடியில் உட்கார்ந்துகொள்வாள். இரவு உணவை ஊட்டிவிடச் சொல்லிக் கெஞ்சுவாள். சாப்பிட்டதும் பாட்டிக்குப் பக்கத்தில் படுத்துத் தூங்குவாள்.

அன்று, சுதமதியின் பள்ளியில் இறுதி தேர்வுக்கான அறிவிப்பு வந்திருந்தது. அடுத்த சில நாட்களுக்குள் அவர்களது வீட்டில் ஓர் அசம்பாவிதம் நடந்தது. அந்தச் சம்பவம் சுதமதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அளவுகடந்த அன்பும் இரக்கமும் செலுத்தி வளர்த்த பாட்டி இறந்துபோனார். அதை எண்ணிஎண்ணி வருந்தினாள் சுதமதி. கண்களில் கண்ணீர் பெருகக் கதறி அழுதாள். இரண்டு நாட்கள் சாப்பிடவும் இல்லை.

தன் அன்புக்குரிய பாட்டியின் நினைவுகளிலிருந்து, அவளால் மீள முடியவில்லை. பாட்டியைப் பற்றிய ஏக்கத்தால் சுதமதிக்குக் காய்ச்சல் வந்திருந்தது. தேர்வு நாட்கள் நெருங்கியதால் சரியாகப் படிக்க முடியாமல் போனது. மனதில் பதிவாகி இருந்த பாடங்கள் மறந்துபோயின. ஆனாலும் ஆண்டு இறுதித் தேர்வைத் தவிர்க்கவும் முடியவில்லை. முக்கியம் ஆயிற்றே.

முதல்நாள் அறிவியல் பரீட்சை. சுதமதியைச் சமாதானம் செய்து, பள்ளிக்கூட வாசலில் இறக்கிவிட்டுப் போனார் அப்பா. சுதமதி தேர்வு அறையில் உட்கார்ந்தாள். விடைத்தாள் தரப்பட்டது. கேள்விக்கான பதில்களை யோசித்து எழுதத் தாமதமானது. சரியான பதிலை ஞாபகப்படுத்தி எழுத ரொம்ப கஷ்டப்பட்டாள்.

நீண்ட நேரம் விடைத்தாளை வைத்துக்கொண்டு யோசித்தாள். படித்தது எதுவும் ஞாபகத்தில் இல்லை. திடீரென்று சுதமதிக்கு ஒரு யோசனை உதித்தது. தோட்டத்தில் உட்கார்ந்து படித்த நாட்களை எண்ணிப் பார்த்தாள். ஆமாம்! அறிவியல் பாடத்தை அடுக்குச் செம்பருத்திச் செடிக்குக் கீழே உட்கார்ந்துதான் படித்தாள். ஒவ்வொரு நாளும் படித்த பாடங்கள் பற்றி ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்திக்கொண்டாள். செடியிடம் பேசுவதைப் போலத் தனக்குத் தானே பேசினாள்.

“செம்பருத்திச் செடியே! உழவனின் நண்பன் என்று மண்புழுவை ஏன் சொல்கிறோம்? ஐயோ! விடை தெரியலையே. மண்புழுக்கள் மண்ணில் வாழும் என்பதைத் தவிர மற்றவை மறந்துவிட்டதே. தயவுசெய்து, நீதான் எனக்கு உதவணும்” என்றாள்.

தேர்வறையில் உட்கார்ந்திருந்த சுதமதியின் குரல் எப்படியோ செம்பருத்திச் செடியைப் போய் அடைந்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில், பரீட்சை அறையின் சன்னல்கள் வழியே நுழைந்த இளங்காற்று சுதமதியின் உடம்பைத் தொட்டு வருடியது.

கேள்வித்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் மெல்ல மெல்ல ஞாபகத்தில் வரத் தொடங்கின. பதில்கள் அனைத்தையும் வரிசையாகப் பிழையில்லாமல் எழுதினாள். அறிவியல் பரீட்சையில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை அவளுக்குத் திரும்பியிருந்தது. ஆசிரியர் கைகளில் விடைத் தாளை ஒப்படைத்த சுதமதிக்குத் திடீரென்று ஒரு ஞாபகம் வந்தது.

“ஐயோ! பாட்டி ஆசைஆசையாக வளர்த்த செடிகளுக்கு நான்கு நாட்களாக யாரும் தண்ணீர் ஊற்றவில்லையே. செடிகளுக்குத் தாகமாக இருக்காதா? எனக்கு உதவிய நண்பர்களை நான்தானே காப்பாற்ற வேண்டும்”.

தேர்வு அறையை விட்டு வெளியேறிய சுதமதி, வீட்டை நோக்கி வேகமாக ஓடினாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x