Last Updated : 08 Feb, 2017 11:40 AM

 

Published : 08 Feb 2017 11:40 AM
Last Updated : 08 Feb 2017 11:40 AM

சித்திரக்கதை: பறவைகள் கண்ட புது அனுபவம்!

பரந்து விரிந்த ஏரிக்கரையில் அடர்ந்த மரங்களும், செடிகொடிகளும் நிறைந்த சிறிய காடு ஒன்று இருந்தது. ஏரிக்கரையை ஒட்டிப் பெரிய ஆலமரப் பொந்துக்குள் ஜோடிப் பறவைகளான கிட்டுவும், சிட்டுவும் வசித்து வந்தன. அவை அந்தச் சிறிய வனப்பகுதிக்குள் தாழ்வாகப் பறந்து இரை தேடின. கிடைக்கும் இரையைப் பகிர்ந்து உண்டன.

ஒருமுறை அவை மரப் பொந்துக்குள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, ஏரிக்கரையில் தவளைகள் எல்லாம் ஒன்றுகூடிப் பேசிக்கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் ஒரு முதிர்ந்த தவளை தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் பேசிக்கொண்டிருந்தது. மற்ற தவளைகள் அதைக் கேட்டு தலையாட்டிக்கொண்டிருந்தன.

குட்டித் தவளை ஒன்று, “இந்த உலகம் எவ்வளவு பெரியது?” எனக் கேள்வி கேட்டது.

“இந்த ஏரியும் காடும் சேர்ந்ததுதான் உலகம். ஏரிக்கு அப்பால் உலகம் முடிந்து விடும்!” என்றது முதிர்ந்த தவளை.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த கிட்டுவும், சிட்டுவும் ‘இந்த உலகம் இவ்வளவுதானா? இதற்குள்தான் நாம் நம் இரையைத் தேடி உயிர் வாழ வேண்டுமா?’என நம்ப ஆரம்பித்தன. அதன்படி வாழவும் ஆரம்பித்தன.

அந்த வருடம் சரியாக மழை பெய்யவில்லை. நீரெல்லாம் வற்றிப் போய் சிறு குட்டை போல ஆனது. தவளைகளுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை. பசியால் வாடி வயதான தவளைகள் இறந்தன.

காட்டிலோ மரங்களும் செடிகளும் பசுமை நிறத்தை இழக்க ஆரம்பித்தன. பூ பூக்கவில்லை. காய் காய்க்கவில்லை. கனி பழுக்கவில்லை. வனமெங்கும் உணவு கிடைக்கவில்லை. கிட்டுவும் சிட்டுவும் வசித்த ஆலமர இலைகளும் பழுத்துக் காய்ந்து உதிர்ந்தன. குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. ஜோடிப் பறவைகள் இரண்டும் பசியும் பட்டினியுமாக நாட்களை ஓட்டின.

“உணவு இல்லாமல் என் உடல் மெலிந்து விட்டது. இந்தக் காட்டைத் தவிர வேறு காடே பக்கத்தில் இல்லையா?” எனக் கேட்டது சிட்டு.

“இந்தச் சின்னஞ்சிறிய காட்டில் நாம் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யோசனை கேட்கவும் ஆளில்லை. முதிர்ந்த தவளை சொன்னதைக் கேட்டுக்கொண்டுதானே இங்கே இருந்தோம். ஒரு வேளை, தூரத்தில் வேறு காடு இருந்தாலும் பறந்து செல்ல நம்மால் முடியுமா? நாம் இருவரும் சாப்பிடாமல் களைத்திருக்கிறோம். பஞ்சத்தின் ஆரம்பத்திலேயே போயிருந்தால் நம்மால் பறந்திருக்க முடியும். இப்போது முடியாதே. கஷ்டப்பட்டுக் காட்டைத் தேடிப் போன இடத்தில் உலகம் முடிந்திருந்தால், மீண்டும் திரும்பிப் பறந்து வர நம் உடலில் தெம்பு இருக்குமா?” என கிட்டு கேட்கவும் சிட்டு அமைதியானது.

எப்படியோ கிடைத்த சிறிது உணவைப் பகிர்ந்துண்டு வாழ்ந்தன அந்தப் பறவைகள்.

சில நாட்களில் மீண்டும் மழை பொழிந்தது. ஏரி நிரம்பி வழிந்தது. காய்ந்துபோன மரங்களும் செடிகளும் துளிர்த்தன. பூக்கள் பூத்து மணம் பரப்பின. பழங்கள் பழுத்துத் தொங்கின. ஜோடிப் பறவைகளுக்கு உணவு தங்குதடையில்லாமல் கிடைத்தன. மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தன.

மழைக்காலம் முடிந்து குளிர் காலம் ஆரம்பித்தது. எங்கிருந்தோ வந்த விதவிதமான வண்ணப் பறவைகள் அந்தக் காட்டில் குடியேற ஆரம்பித்தன.

அழகிய தோற்றத்துடன் வண்ணச் சிறகுகளை உடைய ஜோடிப் பறவைகள் அருகிலிருந்த மற்றொரு மரப்பொந்துக்குள் வந்து அமர்ந்தன. ஒரு கூட்டைக் கட்டின. பிறகு, கிட்டுவும் சிட்டுவும் வசித்து வந்த ஆலமரப் பொந்துக்கு அவை வந்தன. “என் பெயர் டிங்! இவள் பெயர் டாங்! நாளை எங்கள் கூட்டுக்குத் திறப்பு விழா நடத்த இருக்கிறோம். விருந்துக்கு அவசியம் வரவும்” என அழைப்பு விடுத்தன.

மறுநாள் திறப்பு விழாவுக்குச் சென்ற கிட்டுவும், சிட்டுவும் சென்றன. விருந்து முடிந்த பிறகு, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களை இதற்கு முன் நாங்கள் பார்த்ததில்லையே” எனக் கேட்டது கிட்டு.

“நாங்கள் கடலுக்கு அப்பாலுள்ள காட்டிலிருந்து வருகிறோம்”.

“கடல் என்றால் எப்படி இருக்கும்? இந்த ஏரியை விடப் பெரிதாக இருக்குமா?”

“நீங்கள் இதற்கு முன் கடலைப் பார்த்ததில்லையா? அது எல்லையற்றது. பரந்து விரிந்திருக்கும்!”

“அப்படியா? அவ்வளவு தொலைவை உங்களால் எப்படிப் பறந்து கடந்து வர முடிந்தது?” வியப்புடன் கேட்டது கிட்டு.

“எங்கள் இறக்கைகள் வலுவுள்ளவை. மேலும், அடிக்கடி பறந்து எங்களுக்குப் பழக்கமாகி விட்டது. எங்கும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து எங்களால் பறக்க முடியும்!”

“உங்கள் காட்டை விட்டு ஏன் இங்கே வந்தீர்கள்?”

“இப்போது அங்கு கோடைக்காலம். காட்டில் உள்ள மரங்களெல்லாம் காய்ந்துவிடும். இரையும், நீரும் கிடைக்காது. இதுபோன்ற சமயங்களில் குளிர்ப் பிரதேசங்களை நோக்கி வந்து விடுவோம்” என்றது டிங்.

“இந்தக் காட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது எங்களால் இந்த ஏரியைக்கூடப் பறந்து கடக்க இயலவில்லை. உங்களால் மிகப் பெரிய கடலை கடக்க முடிவது ஆச்சர்யம்தான்” என்றது சிட்டு.

“எங்களுக்கு இருப்பது போல்தான் உங்கள் இறக்கைகளும் உள்ளன. இந்த ஏரியைப் பறந்து கடக்க நீங்கள் முயற்சித்தீர்களா?”

“இல்லை! இந்த ஏரியும் காடும் சேர்ந்ததுதான் உலகம் என்று ஒரு தவளை சொன்னது. அதனால் நாங்கள் முயற்சிக்கவில்லை”.

“தவளை சொல்வதையெல்லாம் கேட்டு முயற்சி செய்யாமல் இருந்தது உங்கள் தவறு! அவை இந்த இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லாது. இந்த ஏரியே உலகம் என நம்புபவை”.

கிட்டும் சிட்டும் அமைதியாக இருந்தன.

“இங்கு வசந்த காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பமாகும்போது நாங்கள் எங்கள் காட்டுக்குத் திரும்புவோம். அப்போது உங்களையும் ஏரிக்கு அப்பால் உள்ள கடற்கரைக்குக் கூட்டிச்செல்கிறோம்” என்றது டிங்.

வசந்த காலம் முடியும் நேரத்தில் நான்கு பறவைகளும் கிளம்பத் தயாராயின.

“எங்களால் இந்த ஏரியைக் கடக்க முடியுமா எனச் சந்தேகமாக இருக்கிறது” என்றது கிட்டு.

“கடலைத்தான் உங்களால் பறந்து கடக்க முடியாது. அதற்கான பயிற்சியை நீங்கள் எடுக்கவில்லை. இந்த ஏரியைச் சுலபமாக கடந்து விட முடியும்” எனத் தைரியம் சொன்னது டிங்.

நான்கு பறவைகளும் பறக்க ஆரம்பித்தன. டிங்கும், டாங்கும் உயர உயரப் பறந்தன. ஆனால் கிட்டுவும், சிட்டுவும் தாழ்வாகவே பறந்தன. உயரப் பறப்பதற்குப் பயந்தன.

எத்தனை காடுகள், எத்தனை சோலைவனங்கள் பிரமிப்புடன் சுற்றிலும் பார்த்தபடி பறந்தன கிட்டுவும், சிட்டுவும். ‘இத்தனை நாட்களும் உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருந்து விட்டோமே!’ என வருத்தப்பட்டன.

மிக விரைவில் நான்கு பறவைகளும் கடற்கரையை வந்தடைந்தன.

“நீங்களும் கடலுக்கு அப்பாலுள்ள எங்கள் காட்டுக்கு வருகிறீர்களா?”

“முதலில் கடலைத் தாண்டி பறக்க முடியாது. அப்புறம், ஏரியைத் தாண்டி வந்த பிறகுதான் உலகம் எவ்வளவு பரந்து விரிந்திருக்கிறது என்பதை உணர்கிறோம்! இங்கேயே நாங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய பகுதிகள் நிறைய இருக்கின்றன. எல்லா இடங்களுக்கும் சென்று சில காலம் வாழ்ந்த பிறகு நீங்கள் வாழும் பகுதிக்கு வருகிறோம். அடுத்த வருடம் நீங்கள் இங்கே வரும்போது சந்திப்போம்” என வழி அனுப்பி வைத்தன கிட்டுவும், சிட்டுவும்.

பிறகு தாங்கள் வழியில் பார்த்த சோலைவனங்களை நோக்கி உயர உயரப் பறந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x