Published : 25 May 2016 11:36 AM
Last Updated : 25 May 2016 11:36 AM

சித்திரக்கதை - பயந்தாங்கொள்ளியின் வீரன் வேஷம்!

பல வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவின் ஒரு கிராமத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவர் பெயர் பத்தீஸ்மார்கான். பத்தீஸ்மார்கான் என்றால் முப்பத்தியிரண்டு உயிர்களைக் கொன்றவன் என்று அர்த்தம்.

பத்தீஸ்மார்கான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை முப்பத்தியிரண்டு ஈக்களைக் கொன்றான். இதை வீரச்செயலாக நினைத்துத் தன் பாட்டியிடம் சொன்னான். பாட்டி மகிழ்ச்சியில் அவனுக்கு முத்தம் கொடுத்து பத்தீஸ்மார்கான் என்று அழைத்தாள். அப்போதிருந்து அதுவே அவன் பெயராகிவிட்டது.

அனைவரும் அவனை பத்தீஸ்மார்கான் என்றே கூப்பிட்டார்கள். அவன் ஈயடித்த வரலாறு தெரியாதவர்கள் அவன் போர்க்களத்தில் முப்பத்தியிரண்டு பேரைக் கொன்றதாக நினைத்தார்கள். உண்மையில் பத்தீஸ்மார்கான் சுத்த பயந்தாங்கொள்ளி.

பத்தீஸ்மார்கான் செருப்பு தைப்பதில் கைதேர்ந்தவன். ஆனால், முழுச்சோம்பேறி. ஒரு நாள் வேலை செய்தால் பத்து நாள் படுத்துத் தூங்குவான். அவன் மனைவி குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டாள். அவனது குழந்தைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கிடைத்தது. இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ஒரு நாள் வீட்டில் ஒரு நெல்மணிகூட இல்லாமல் போனது. பத்தீஸ்மார்கானின் மனைவி அவனிடம் நாலுகாசு சம்பாதித்துக் கொண்டுவரும்படி கூறினாள். உடனே பத்தீஸ்மார்கான் வீட்டிலிருந்து கிளம்பினான். ஏதாவது பெரிய நகரத்துக்குச் சென்று கை நிறைய சம்பாதிப்பேன். பிறகுதான் கிராமத்துக்கு வருவேன் என்று மனதில் நினைத்தபடி கிராமத்தை விட்டுப் போனான்.

சில நாட்களுக்குப் பிறகு ஓர் ஊரை அவன் அடைந்தான். அந்த ஊருக்கு வெளியே ஒரு குளம் இருந்தது. 'முதலில் இந்தக் குளத்தில் குளித்துவிட்டு, ஊருக்குள் சென்று யாரிடமாவது வேலை கேட்கலாம் ' என்று நினைத்துக்கொண்டு பத்தீஸ்மார்கான் குளத்தில் இறங்கினான்.

குளத்தின் கரையில் ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அதில், 'இந்தக் குளத்தில் முதலை இருப்பதால் யாரும் குளிக்க வேண்டாம் ' என்று எழுதப்பட்டிருந்தது. பத்தீஸ்மார்கானுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனந்தமாகக் குளித்த பிறகு பத்தீஸ்மார்கான் குளத்தில் சிறிய பாறை இருப்பதைப் பார்த்தான். அவன் துணியைக் காயப்போட அந்தப் பாறையின் மீது ஏறினான். திடீரென்று அந்தப் பாறை நகர ஆரம்பித்தது. உண்மையில் அது பாறை அல்ல, முதலையேதான்.

பத்தீஸ்மார்கான் பாறை எப்படி நகர்கிறது என்று யோசித்துக்கொண்டே அதன் மீது நின்றுகொண்டிருந்தான். அதைக் கவனித்த சிலர், முதலையைத் தனி ஆளாக அவன் பிடித்துவிட்டதாக நினைத்து கைதட்டினார்கள்.

அங்கே ஒரு கூட்டமே கூடிவிட்டது. அப்போதுதான் தான் நின்றுகொண்டிருப்பது பாறையின் மேல் அல்ல, முதலையின் மேல் என்று பத்தீஸ்மார்கான் புரிந்துகொண்டான். பயத்தில் நடுங்க ஆரம்பித்தான்.

அதற்குள் முதலை கரையைத் தொட்டுவிட்டது. மக்கள் ஈட்டியால் குத்தி அதைக் கொன்றார்கள். பத்தீஸ்மார்கானை மாபெரும் வீரனாகக் கருதித் தோளில் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் போனார்கள். பத்தீஸ்மார்கானின் இந்த வீரச் செயல் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது. அவர் அவனை அழைத்து வரச்சொல்லி பல பரிசுகளை வழங்கி, படைத்தளபதியாக நியமித்தார்.

பத்தீஸ்மார்கானின் இந்த வீரக்கதை பக்கத்து தேசங்களுக்கெல்லாம் பரவியது. பத்தீஸ்மார்கான் போன்ற வீரன் படைத்தலைவனாக இருக்கும் நாட்டின் மீது போர் தொடுப்பது சாவை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம் எனப் பக்கத்து நாட்டு ராஜாக்கள் பயந்துகிடந்தார்கள். இதன் காரணமாக பத்தீஸ்மார்கான் போருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு வேறு ஒரு நாட்டு இளவரசனுக்குத் திடீரென்று வீரம் பொங்கியது. அவன் தனது படையுடன் போருக்கு வந்தான். இந்தச் செய்தி ராஜாவுக்குக் கிடைத்ததும், அவர் பத்தீஸ்மார்கானைக் கூப்பிட்டுப் போருக்குச் செல்லக் கட்டளையிட்டார்.

பத்தீஸ்மார்கானுக்குக் குதிரை மீது ஏறக்கூடத் தெரியாது. பின்னர் எப்படிச் சவாரி செய்வது? எப்படிச் சண்டை இடுவது? பிரச்சினையைச் சமாளிக்க அவன் இரண்டு கைகளிலும் கத்தியைப் பிடித்துக்கொண்டு மன்னர் முன் போய்நின்றான்.

இரு கைகளிலும் வாளேந்தி சண்டையிடச் செல்லும் வீரனைக் கண்டு, மன்னர் மகிழ்ச்சியடைந்தார். அவனைத் தூக்கிக் குதிரையின் மீது உட்கார வைக்கும்படி வேலையாட்களுக்குக் கட்டளையிட்டார். பின் நன்றாகச் சண்டை போட வசதியாக அவன் கால்களைக் கட்டச் செய்தார்.

தாரை தப்பட்டைகள் ஒலிக்க ஆரம்பித்தன. குதிரை கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கியது. பத்தீஸ்மார்கான் சிறிது தொலைவு போனவுடன் கைகளிலிருந்த வாள்களைக் கீழே போட்டுவிட்டு, குதிரையை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.

“கடவுளே காப்பாத்து, கடவுளே குதிரையை நிப்பாட்டு” என்று பயத்தில் புலம்பிக்கொண்டே குதிரையின் மீது உட்கார்ந்திருந்தான்.

அப்போது வழியில் அருகருகே நிற்கும் இரண்டு தென்னை மரங்களைப் பார்த்தான். குதிரை அந்த இரண்டு தென்னை மரங்களுக்கு இடையே புகுந்து சென்றது.

குதிரையை நிறுத்துவதற்குப் பத்தீஸ்மார்கான் தென்னை மரங்களைக் கைக்கு ஒன்றாகப் பற்றினான். குதிரை நிற்கவில்லை. படுபயங்கரமான வேகத்தில் தென்னை மரங்கள் இரண்டும் பிய்த்துக்கொண்டு பத்தீஸ்மார்கான் கையோடு வந்தன. அதை தன் தோள்களில் வைத்துக்கொண்டான். இப்படியே எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்றான்.

பத்தீஸ்மார்கானின் வீரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த எதிரிகள் ஏற்கெனவே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பயங்கரத் தோற்றத்தைப் பார்த்ததும் கதிகலங்கிப் போனார்கள். தென்னை மரத்தைப் பிய்த்துக்கொண்டு சண்டைக்கு வரும் பலசாலியுடன் எப்படிப் போரிடுவது என்று பயந்து ஓடினார்கள்.

சிறிது நேரம் ஓடிய பின் களைப்படைந்த குதிரை நின்றது. ராஜா பத்தீஸ்மார்கானைப் புகழ்ந்தார். ஏகப்பட்ட பரிசுகளை அள்ளித் தந்தார். அவற்றையெல்லாம் வாங்கிக்கொண்டு பத்தீஸ்மார்கான் தன் கிராமத்துக்குப் போனான். தனது மனைவியிடம் பரிசுகளைக் கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x