Published : 19 Oct 2016 10:53 AM
Last Updated : 19 Oct 2016 10:53 AM

சித்திரக்கதை: நிழல் சிங்கத்தின் வேட்டை!

தாத்தாவும் பேரனும் சேர்ந்து சொன்ன கதை இது!

வழக்கமாக என்னிடம் கதை கேட்கும் என் பேரன் அன்று வித்தியாசமாக நான் ஒரு கதை சொல்லட்டுமா தாத்தா? இது நானே கற்பனை பண்ணுன கதை!” என்றான்.

“சொல்லேன்” என்று உட்கார்ந்தேன்.

“ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சாம்…” என்று ஆரம்பித்தான்.

“அடடே ஜோரா இருக்கே… ம்… அப்புறம்?” என்று கேட்டேன்.

“அந்தச் சிங்கத்துக்கு ஒரு நாள் ரொம்ப சோம்பலா இருந்துதாம். வேட்டைக்குப் போக மனசே வரலியாம்… படுத்தே கிடந்துதாம்…”

“ம்… அப்புறம்?”

“சிங்கத்தோட கூடவே இருக்குமே. அது என்ன சொல்லு?” என்று கேட்டான்.

“சிங்கத்தோட கூடவே இருக்குமா, என்னது?” என்று புரியாமல் விழித்தேன்.

“ஐயே… இதுகூடத் தெரியலியா? சிங்கத்தோட நிழல்தான்! அந்த நிழலுக்கு சிங்கத்தப் பார்க்க பாவமா இருந்துதாம். அது சிங்கத்துகிட்ட போயி, உடம்பு சரியில்லையான்னு கேட்டுதாம்.”

“ஓஹோ…”

சிங்கம் சோம்பலா கண்ணை முழிச்சுப் பார்த்துட்டு நிழலைப் பார்த்ததும் கண்ணை மூடிக்கிச்சாம்.”

“அப்புறம்?”

“நிழல் சிங்கத்தோட காதுகிட்ட போயி, ‘சிங்கமே… சிங்கமே… நீ கோவிச்சுக்கலேன்னா நான் உனக்கு ஒரு உதவி பண்ணட்டுமா?’ அப்படின்னு கேட்டுச்சாம்”.

“நீயா? எனக்கா?”ன்னு கேட்டுட்டு சிங்கம் ‘ஹாவ்’னு பெரிசா கொட்டாவி விட்டுதாம்.”

“ஆமாம், உனக்குப் பதிலா நான் காட்டுக்கு வேட்டைக்குப் போறேன். உன் உறுமலை மட்டும் எனக்கு இரவலாக் கொடு”- அப்படீன்னு நிழல் கேட்டுச்சாம்.

“என் உறுமலை அதோ அங்கே மாட்டி வச்சிருக்கேன். எடுத்துகிட்டுப்போ” அப்படீன்னு சொல்லிட்டு சிங்கம் மறுபடி தூங்கிப் போச்சாம்.”

“சிங்கத்தோட நிழல் உறுமிக்கிட்டே காட்டுக்கு வேட்டைக்குப் போச்சாம்… அவ்ளோதான் கதை” என்று பேரன் கதை சொல்வதை நிறுத்திவிட்டான்.

“ஆகா! அருமையா இருக்கே. ஆனா கதை பாதியிலேயே முடிஞ்சு போச்சே! என் கற்பனையில மீதிக் கதை இருக்கு. சொல்லட்டுமா?” என்று கேட்டேன்.

“ம்…சொல்லு…” என்றான் என் பேரன்.

“காட்டுல நிழல் சிங்கம் வேட்டைக்குப் போச்சாம். காடு முழுக்க அதோட உறுமல் கேக்குது. எங்க பாத்தாலும் அதோட நிழல் தெரியுது. எல்லா விலங்குகளும் பயந்துபோய் ஒரு பெரிய மரத்துக்குக் கீழ வந்து நின்னுடுச்சுங்க. ஆனா, ஒரு முயல் மட்டும் பயப்படல.”

“ஏன்?” என்று என் பேரன் கேட்டான்.

“அதுக்கு உண்மை தெரிஞ்சு போச்சு. உறுமல் சத்தம் கேக்குது… நிழல் தெரியுது… ஆனா, சிங்கம் ஏன் வெளியே வரலே? இதுல ஏதோ சூது இருக்குன்னு நெனைச்சுது.”

“அப்புறம்?” என்று என் பேரன் கேட்டான்.

“நிழல் சிங்கமே வெளியே வா. உன் உறுமலுக்கு நாங்க பயப்பட மாட்டோம்” அப்படின்னு முயல் சத்தம் போட்டுச் சொல்லுச்சாம்.”

“நிழல் சிங்கம் தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு முயலுக்கு முன்னால் வந்தது.”

“நிழல் சிங்கத்தப் பார்த்து, “உன்னைப் பாத்தா பாவமா இருக்கு. வேணும்னா என்னோட நிழலை எடுத்துகிட்டுப் போ”ன்னு முயல் சொல்லுச்சாம்.

“நிழல் சிங்கம் முயலோட நிழலைக் கவ்விக்கிட்டு ஓடுது. குகைக்குப் போய் நிஜ சிங்கத்துக்கு முன்னால் முயலின் நிழலைப் போட்டுச்சாம்.”

“இதை எப்படித் திங்கிறதாம்?” அப்படின்னு நிஜ சிங்கம் கேட்டுச்சாம்.

“நாந்தான் நிழல் சிங்கமாச்சே… இரையோட நிழல்தான் கிடைச்சுது”ன்னு நிழல் சிங்கம் சொல்லுச்சாம்.

“நிஜ சிங்கம் அப்படியே எழுந்திரிச்சிச்சாம். ஒரு உறுமல் உறுமிச்சு. காடே கிடுகிடுத்தது. சோம்பலை உதறிட்டு சிங்கம் வேட்டையாடப் போச்சு. கூடவே அதோட நிழலும் போச்சு.”

“அப்புறம்?” என்று கேட்டான் என் பேரன்.

“அவ்வளவுதான் கதை” என்று நான் முடித்ததும் சந்தோஷமாக என் பேரன் வெளியே ஓடினான். ஆகா! நிஜ சிங்கம் விளையாடப் போயிடுச்சே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x