Published : 18 Jan 2017 09:47 AM
Last Updated : 18 Jan 2017 09:47 AM

சித்திரக்கதை: நட்பென்னும் சரணாலயம்

‘இந்த மீன்களையும், காய்ஞ்சு போன மரங்களையும் பார்த்துப் பார்த்து போரடிக்குதே.. எப்போதான் இந்தப் பறவைக் கூட்டமெல்லாம் வருமோ. அவை வந்தால்தான் இந்த இடமே களைகட்டும்' - இப்படி மனதுக்குள் நினைத்தபடி நடைபோட்டது அந்தக் குட்டி ஆமை.

அந்த ஆமை இருப்பது ஒரு பறவைகள் சரணாலயத்தின் குளத்தில். அமைதியாக இருக்கும் மீன்களைப் பார்த்தால் ஆமைக்குப் பிடிக்காது. சத்தம் போட்டவாறு வரும் பறவைகளையும் அவற்றின் படபடவென பறக்கும் ஓசையும் அவை பறந்து செல்லும் அழகையும் பார்க்க அதற்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அவை எப்போதும் அங்கிருப்பதில்லையே! வருடத்துக்கு 6 மாதங்கள் மட்டுமே இருக்கும். மற்ற மாதங்கள் தன் சொந்த நாட்டுக்குச் சென்றுவிடுமே!

ஆமை அந்தப் பறவைகளின் வருகையை விரும்ப இன்னொரு காரணமும் உள்ளது. அந்தப் பறவைகளைப் பார்க்க ஊர் மக்கள் திரளாக வருவார்கள். வெளியூர்களிலிருந்தும் மக்கள் வந்து குவிந்துவிடுவார்கள். காமிரா, பைனாகுலர் சகிதம் வரும் அவர்கள் கூடவே குழந்தைகளையும் அழைத்து வருவார்கள். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு அம்மா அப்பாக்கள் பொறுமையாகப் பதிலளிப்பதைப் பார்த்து ஆமை ரசிக்கும்.

குட்டி ஆமைக்கு வீடு அதன் முதுகிலேயே உள்ளது. வீட்டின் உள்ளேயே இருந்து போரடித்துப் போன அதற்குத் திருவிழா போல அந்தச் சரணாலயம் இருப்பதுதான் ரொம்ப பிடிக்கும். பாறையின் மீது உட்கார்ந்து தலையை நீட்டி எல்லோரையும் வேடிக்கைப் பார்க்கும். யாராவது பக்கத்தில் வந்தால் உடனே தலையை உள்ளே இழுத்துக்கொள்ளும்.

இப்படித்தான் பறவைகள் வந்த பிறகு ஆமை உற்சாகமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் நாரை ஒன்று அதன் பக்கத்தில் வந்து, “நண்பா!” என்று கூப்பிட்டது. பயந்துபோன ஆமை வீட்டுக்குள் ஒளிந்துகொண்டது. கொஞ்ச நேரம் கழித்து நாரை போய் விட்டதா என்று மெல்ல எட்டி பார்த்தது.

'ஐயோ! என்ன இது? இன்னும் நின்றுகொண்டிருக்கிறதே! இந்த நாரை போனால்தான் நான் வீட்டை விட்டு வெளியே வருவேன்!' என்று நினைத்தபடியே காத்திருந்தது. 'பேசாமல் தண்ணீரில் குதித்து விடலாமா? ஆனால், அது அங்கேயும் வருமே!' என்று அங்கலாய்த்துக்கொண்டே யோசனையில் இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்துத் தைரியமாக எட்டி பார்த்தது ஆமை. நாரை அங்கேயேதான் நின்றுகொண்டிருந்தது. “ஹலோ நண்பா..” என்றபடியே கையை நீட்டியது அது. ஆமையும் கொஞ்சம் தயங்கிக் கைகுலுக்கியது.

நாரை கம்பீரமாக,”என்னைப் பார்த்துப் பயமா? நான் உன் நண்பன். உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். நான் புதிதாக இங்கு வந்துள்ளேன்” என்றது.

“ஓ... அப்படியா? நீ எங்கிருந்து வந்திருக்கே?” என்று கேட்டது ஆமை.

“நான் சைபீரியாவிலிருந்து வருகிறேன். அங்கு இப்போது பனி அதிகம். எனவே நானும் எனது நண்பர்கள் சிலரும் இந்த இடத்தைத் தேர்வு செய்து வந்துள்ளோம்” என்றது நாரை. “ஓ...நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்குத்தான்” என்றது நாரை.

“நல்லதா போயிற்று. உங்கள் ஊர், நாட்டைப் பற்றி கூற நீதான் சரியான ஆள். அதனாலேயே உன்னுடன் நட்புடன் இருக்க வந்துள்ளேன்” என்றது.

ஆமைக்கு அதன் பேச்சில் ஆர்வம் வந்தது. லாகவமாகப் பேசும் நாரையைப் பார்த்துச் சிரித்தது. “ஓ! அதற்கென்ன, சொல்லிவிட்டால் போச்சு. அதற்கு முன் நீங்கள் ஏன் இப்படி ஊர்விட்டு ஊர் வருகிறீர்கள். அதைப் பற்றி சொல்லேன்” என்றது ஆமை.

“ நான் தான் சொன்னேனே பனி அதிகம் என்று. அப்புறம் என்னைப் போலவே பல பறவைகளும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கின்றன. கூட்டம் கூட்டமாய் வந்தாலும் எங்களுக்கு அந்த இடம் சவுகரியமாக இருந்தால் மட்டுமே இருப்போம். சரி இல்லையென்றால் வேறு இடம் தேடிச் செல்வோம். அப்புறம் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பின் குஞ்சுகளுக்குப் பறக்கத் தெரிந்தவுடன் எங்களுடன் அழைத்துச்செல்வோம். உணவுக்காக அருகில் உள்ள ஊர்களில் உள்ள ஏரிகளுக்குச் செல்வோம். சில சமயம் நாடுவிட்டுக்கூடச் சொல்வோம்” என்றது நாரை.

அதை ஆமை ஆர்வமாகக் கேட்டது. பொழுது போனதே தெரியாமல் கதை பேசிக் கொண்டிருந்ததில் சாயங்கால வேளை நெருங்கியதை இரண்டும் கவனிக்க மறந்துவிட்டன. பின்னர் இரண்டும் அடுத்த நாள் சந்திக்க உறுதி பூண்டன.

பொழுது விடிந்தது. நாரையின் வருகைக்காக ஆமை காத்திருந்தது. வந்தவுடன், “நீ உங்களைப் பற்றி சொன்னாய் அல்லவா! நான் எங்கள் நாட்டைப் பற்றி சொல்கிறேன்” என்று காட்டுக்குள் கூட்டிச் சென்றது.

அங்கு மயில் ஒன்று தோகையை விரித்து நடனமாடிக்கொண்டிருந்தது. 'இத்தனை அழகான பறவையா!' என்று நாரை அதனை வைத்த கண் வாங்காமல் பார்த்தது.

“இதுதான் எங்கள் தேசியப் பறவை. அதோ அந்தக் குளத்தில் அழகழகாய்ப் பூத்திருக்கிறதே, அதுதான் எங்கள் தேசிய மலரான தாமரை” என்றது ஆமை. இரண்டின் அழகில் சொக்கிப்போனது நாரை. தேசிய விலங்கான புலியின் கம்பீரத்தைப் பற்றியும், வீரத்தைப் பற்றியும் கூறியது.

ஆமை மேலும் தொடர்ந்தது, “இந்த நாட்டின் மக்களும் அன்பானவர்கள். அருகில் சரணாலயம் இருந்தால் ஊர் மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுவார்கள். பறவைகள் பயப்படக் கூடாது என்பதற்காக இதைச் செய்வார்கள். அப்புறம் இடையூறு செய்யக் கூடாது என்று தொலைநோக்கிக் கருவி மூலமே பறவைகளைப் பார்த்து ரசிப்பார்கள். விலங்குகள், பறவைகள் மீது அவர்களுக்கு எப்போதும் ரொம்ப அன்பு உண்டு” என்றது ஆமை.

நாரை வியந்து கேட்டுக் கொண்டிருந்தது. “ நண்பா! தங்கப்போகும் இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன். இப்போது பெருமையாக இருக்கிறது” என்றது.

அதன்பின் தினந்தோறும் இரண்டும் சந்தித்துப் பல கதைகள் பேசி மகிழ்ந்தன. இப்படியே நாட்கள் கடந்தன. நாரை தன் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய நாள் வந்தது. ஆமைக்கு நண்பனை விட்டுப் பிரிய மனமில்லை. விரைவில் தாம் மீண்டும் சந்திப்போம் என்று நாரை தைரியம் கூறித் தன் நண்பர்களுடன் கிளம்பியது. ஆமைக்குத் துக்கம் அதிகமானது.

இப்போது தன் நண்பன் எப்போது வருவான், அவனோடு எப்போது கதைகள் பேசி மகிழலாம் என்று ஏங்கிக் காத்துக்கொண்டிருக்கிறது ஆமை.

குழந்தைகளே! அந்த ஆமையைப் பார்த்தால், நாரை எப்போது வரும் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x