Last Updated : 08 Mar, 2017 11:10 AM

 

Published : 08 Mar 2017 11:10 AM
Last Updated : 08 Mar 2017 11:10 AM

சித்திரக்கதை: தேனீயும் சிட்டுக்குருவியும்!

பூச்செடிகள் நிறைந்த வனத்தின் நடுவில் தேனீ ஒன்று அங்குமிங்கும் திக்கு தெரியாமல் அலைந்துகொண்டிருந்தது.

“அய்யோ… நான் எங்கிருக்கிறேன், எந்தத் திசையிலிருந்து வந்தேன். வரும் வழியில் எதையெதை அடையாளமாகக் குறித்துக்கொண்டேன், எதுவுமே நினைவுக்கு வரவில்லையே! ஒரே குழப்பமாக இருக்கே. நான் எப்படி என் கூட்டுக்குப் போவேன்?” எனப் பதற்றத்துடன் யோசித்தபடி சுற்றிச் சுற்றி வந்தது.

அப்போது, எதன் மீதோ திடீரென்று மோதிக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் புரண்டு எழுந்த தேனீ, நிமிர்ந்து பார்த்தது.

மரத்தின் வண்ணத்தையும், ஆங்காங்கே கறுப்பு நிறத்தையும் உடைய சிறகுகளை, படபடவென அடித்தபடி தேனீயின் எதிரே வந்தமர்ந்தது சிட்டுக்குருவி. சிட்டுக்குருவி தன்னைக் கொத்தித் தின்றுவிடுமோ என்ற அச்சத்தில் நடுங்கியது தேனீ.

“மன்னிச்சுக்க, ரொம்ப அடிபட்டுச்சா?” என அக்கறையோடு விசாரித்த சிட்டுக்குருவியை ஆச்சரியமாகப் பார்த்த தேனீக்குப் பயம் நீங்கியது.

“அடிபடல… ஆனால், நீதான் என்னை மன்னிக்கணும். எங்கே போறதுன்னு குழம்பிப் போனதால நீ எதிர்ல வந்ததைக் கவனிக்கல” என்றது.

“ ரெண்டு பேர் மேலேயும் தப்பிருக்கு. நானும் குழப்பத்துலத்தான் வந்தேன்” எனச் சிட்டுக்குருவி சொன்னதும், “ என் கூட்டுக்கு வழி தெரியாம நான் குழம்பிக் கிடக்கிறேன், நீயுமா?” எனக் கேட்டது தேனீ.

“நான் கூட்டைத் தேடல. கூடு கட்டறதுக்குச் சரியான இடத்தைத் தேடுறேன். நம்ம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே நோக்கத்துலதான் போறோம். வா, பேசிக்கிட்டே பறக்கலாம்!” எனக் கூறிய சிட்டுக்குருவி சொன்னது. சிட்டுக்குருவி பறந்த வேகத்துக்கு இணையாக ‘வீ...ஈ…ங்…’ என்ற சத்தத்துடன் தேனீயும் பறந்தது.

“எந்த வழியில் வந்தோங்கறதை ஞாபகம் வச்சுக்கறதுல நீ கில்லாடியாச்சே, எப்படி மறந்தே?” சிட்டுக்குருவி கேட்டது.

“தெரியல. அதோ தெரியுது பாரு ஒரு தோட்டம்! அங்க இருக்குற மலரில் தேன் எடுத்துவிட்டு வரப்போதான் குழம்ப ஆரம்பிச்சுது”

திரும்பிப் பார்த்த சிட்டுக்குருவி, “நானும் அந்த வழியாத்தான் வந்தேன். அங்கே வரப்போ உடம்புக்கு ஒத்துக்காத ஏதோ வாசனை அடிச்சது. தலை சுத்துச்சு. அதான் பயந்துபோய் வந்துட்டேன்”

தேனீயும், சிட்டுக்குருவியும் பேசிக்கொண்டே பறந்தன. எங்குப் பார்த்தாலும் கட்டிடங்களும், செல்போன் டவர்களும் தெரிந்தன. சில இடங்களில் மட்டும் ஓரிரு மரங்கள் தென்பட்டன.

“எங்க தாத்தா காலத்துல இந்தப் பக்கம் நிறைய மரங்கள் இருந்துச்சாம். இங்கதான் ஒரு மரப் பொந்துக்குள்ள கூடு கட்டி வாழ்ந்தாராம். ஆனா, நான் ஓட்டு வீட்டு இடுக்குக்குள்ளேதான் பிறந்தேன். அங்கதான் எங்கம்மா கூடு கட்டியிருந்தாங்க. அதான் ஓட்டு வீடாவது கிடைக்குமான்னு தேடிக்கிட்டு இருக்கேன். ஒண்ணுகூட இல்லையே!” எனச் சலித்துக்கொண்ட சிட்டுக்குருவி, ஒவ்வொரு வீடாக நோட்டம் விட்டது. தேனீயும் பின்தொடர்ந்தது.

பெரிய வீடுகளும் சிறிய வீடுகளும் கலந்திருந்த பகுதிக்குள் நுழைந்து பறந்தன. தேனீ, மரம் ஏதாவது தென்படுகிறதா எனக் கவனித்தபடி பறந்தது. அப்படித் தென்பட்டால் அதில் தன்னுடைய கூடு இருக்கிறதா எனத் தேடியது.

அப்போது பச்சை வண்ண பெயிண்ட் அடித்த வீட்டருகில் இரண்டும் சென்றன. காம்பவுண்டு் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், “இந்த இடத்துக்கு ஏற்கெனவே நான் வந்தது மாதிரி இருக்கு. என்னோட கூடு இங்கத்தான் எங்கேயோ இருக்குன்னு நினைக்கிறேன்” எனத் தேனீ கூறிக்கொண்டிருக்கும்போதே, “அய்! அங்கே பாரு எனக்கான கூடு கிடைச்சுடுச்சு!” என சந்தோஷமாகக் கூறியது சிட்டுக்குருவி.

“இந்த வீட்டுச் சொந்தக்காரர் எங்களுக்காக அட்டைப்பெட்டியில் கூடு செஞ்சு வச்சுருக்காரு பாரு!” என மீண்டும் கூறிய சிட்டுக் குருவி, அதன் உள்ளே நுழைந்தது. அந்த அட்டைப்பெட்டியின் நடுவில் சிட்டுக்குருவி உள்ளே நுழையும் அளவுக்கு வட்டமாக ஓட்டை போடப்பட்டிருந்தது. தேனீ அந்தக் கூட்டை வியப்புடன் பார்த்தது. கூட்டுக்குள் வைக்கோல் பரப்பி வைக்கப்பட்டிருப்பதையும், சிறிய மண்சட்டியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்துச் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது சிட்டுக்குருவி.

“இந்தக் கூட்டுல எல்லா வசதியும் இருக்கு. குஞ்சுகளுக்குப் பாதுகாப்பா இருக்கும்” எனக் கூறிக்கொண்டே கூட்டிலிருந்து வெளியே வந்தது.

அப்போது கீழே நின்றுகொண்டிருந்த சிறுவன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக்கொண்டே, “அப்பா, அம்மா! இங்க வந்து பாருங்க!” எனக் கத்தினான். சிறுவனின் சந்தோஷமான அழைப்பைக் கேட்டு வெளியே வந்த அவனுடைய அம்மாவும், அப்பாவும் தாங்கள் உருவாக்கி வைத்திருந்த கூட்டுக்குக் குருவி ஒன்று வந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

“ஓ… இந்தக் கூட்டைச் செஞ்சு வச்சு, ரொம்ப நாளா காத்திருக்காங்கன்னு நினைக்கிறேன். அதான் இவ்ளோ சந்தோஷப்படறாங்க” எனக் கூறிய சிட்டுக்குருவி, “இந்த இடம் உனக்கு ரொம்ப பழக்கமான இடம் மாதிரி இருக்குன்னு சொன்னியே!” எனத் தேனீயிடம் கேட்டது.

“ஆமா, அதோ அங்கே தெரியற பூச்செடியில தேனெடுத்த ஞாபகமும் வருது”.

“பெரும்பாலும் வீட்டுக்குப் பின்னாடி சிலர் மரம் வளர்ப்பாங்க. வா, போய்ப் பார்க்கலாம்!” என்ற சிட்டுக்குருவி, தேனீயுடன் வீட்டின் பின்புறம் பறந்தது. அங்கே, பசுமையான வேப்பமரம் இருந்தது.

இரண்டும் அதனருகில் சென்றன. அப்போது, தேனீ, “அங்க பாரு என்னோட கூடு கிடைச்சுடுச்சு!” என்றது. மரக்கிளையில், கறுப்பு நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்த கூட்டருகில் சென்றது தேனீ. சிட்டுக்குருவி, அருகிலிருந்த மற்றொரு கிளையில் அமர்ந்துகொண்டது. கும்பலாக மொய்த்துக்கொண்டிருந்த தேனீக்களில் ஒன்று,”எங்கே போன? ஏன் இவ்வளவு நேரம்?” எனக் கேட்டது. தேனீ, தன் மூளை குழம்பிப் போன கதையைச் சொல்லி, “நல்லவேளை! சிட்டுக்குருவி என்னை இங்கே கூட்டி வந்துச்சு!” என்றது.

“அந்தத் தோட்டத்துல செடி, கொடி, பயிர்களெல்லாம் நல்லா வளர்றதுக்காகச் செயற்கை உரம் போட்டிருப்பாங்க. நாம அங்கே பூத்திருக்கிற பூக்கள்ல உட்கார்ந்து தேனெடுக்கும்போது அந்த உரங்கள் நம்ம உடம்பைப் பாதிக்குது. மூளையைக் குழம்ப வைக்குது. விவசாயிகளின் நண்பனான நம்மாலதான் அயல் மகரந்தச் சேர்க்கை நடந்து காடுகளும், தோட்டங்களும் உசுரோட இருக்குங்கறது அவங்களுக்குத் தெரியும். ஆனாலும் இந்தத் தப்பைச் செய்றாங்க! இயற்கை உரங்கள் போட்டாங்கன்னா நமக்குப் பிரச்சினையில்லை!” எனக் கூறிய அந்தத் தேனீ, “ஆமா, அந்தச் சிட்டுக்குருவி எங்கே?” எனக் கேட்டது.

அருகில் மற்றொரு கிளையில் அமர்ந்திருந்த சிட்டுக்குருவியிடம் சென்ற இரண்டு தேனீக்களும் அதற்கு நன்றி கூறின. “இதுக்கு எதற்கு நன்றி?! என்னால முடிஞ்சத செஞ்சேன். ரெண்டு பேருக்கும் கூடு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். என்னோட ஜோடியைப் போய்க் கூட்டிட்டுப் புதுக் கூட்டுல இன்னைக்கே குடியேறப் போறேன்!” எனக் கூறிவிட்டுச் சிறகடித்துப் பறந்து சென்றது சிட்டுக்குருவி. அந்த ஓசை, புல்லாங்குழல் இசைத்தது போல் இதமாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x