Published : 30 Dec 2015 12:05 PM
Last Updated : 30 Dec 2015 12:05 PM

சித்திரக்கதை: சூரியனைச் சுட முடியுமா?

நாம் இப்போது பார்க்கப் போறது ஒரு விசித்திரமான நாடு. அந்த நாட்டில் யாருமே செருப்பு போட்டிருக்க மாட்டார்கள். அந்த நாட்டு ராஜாவின் மகன் ஒரு நாள் வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, வெயில் அதிகமாக இருந்ததால் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த அவனுடைய கால் பொத்துப்போய்விட்டது. சூடு தாங்க முடியாமல் இளவரசன் ஓரமாக உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டான்.

அரசரின் மகன் அழுவதைப் பார்த்த காவலன் பதறிப்போய் ராஜாவிடம் ஓடினான்.

“அரசரே, இளவரசர் அழுதுகொண்டிருக்கிறார். என்னவோ தெரியவில்லை” என்று சொன்னான்.

“அப்படியா!” என்று கேட்டுக்கொண்டே ராஜாவும் ராணியும் இளவரசனைப் பார்க்க ஓடினார்கள்.

“ஏன் அழுகிறாய் மகனே?” என்று இருவரும் கேட்டார்கள். அதற்கு இளவரசன், “தந்தையே, நான் வெயிலில் விளையாடிக்கொண்டிருந்ததால், என் கால் பொத்துப்போய்விட்டது. சூடு தாங்க முடியவில்லை” என்று சொன்னான்.

உடனே கோபத்துடன் அந்த ராஜா அமைச்சரைக் கூப்பிட்டார். “நீர் என்ன செய்வீர் என்று எனக்குத் தெரியாது. வெயிலில் என் மகனுக்குக் கால் பொத்துவிட்டது. என் மகன் கொளுத்தும் வெயிலிலும்கூட சுகமாக விளையாட வேண்டும். இதற்கு நீங்கள் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஆணையிட்டார்.

என்ன செய்வது என்று தெரியாத அமைச்சர் ஏதோ வாய்க்கு வந்ததை உளறினார். “ராஜா, நாம் ஏன் சூரியனை சுட்டு விரட்டக் கூடாது” என்றார்.

அதற்கு ராஜாவோ சற்றும் யோசிக்காமல், “படைத் தளபதியே, அமைச்சர் சொன்னபடி சூரியனை உடனடியாக சுட்டு விரட்டுங்கள்” என்று கட்டளையிட்டார். ராஜா சொன்னபடி படைத் தளபதியும் சேனைகளும் எல்லா ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு சூரியனை விரட்ட புறப்பட்டார்கள்.

அவர்கள் எல்லாரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். வேல்கம்பு, ஈட்டியை எறிந்து பார்த்தார்கள். எதுவும் சூரியன் பக்கம்கூட செல்லவில்லை. பீரங்கிக் குண்டுகளைக் கொண்டு சுட்டுப் பார்த்தார்கள். அது பக்கத்து நாட்டிலேயே போய் விழுந்தது.

அந்த நேரத்தில், வெளிநாட்டிலிருந்து ஒரு விஞ்ஞானி வந்தார். அவர் தன் கால்களில் செருப்பு போட்டிருந்தார். அவர் போட்டிருப்பது செருப்பு என்று அந்த நாட்டு மக்களுக்குத் தெரியவில்லை. அதைப் பார்த்த படைத் தளபதி, அந்த வெளிநாட்டுப் பயணியை ராஜாவிடம் இழுத்துக்கொண்டு போனார்.

“அரசே, மணலில் நடக்கும்போது நமக்கெல்லாம் சூடு தாங்காமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். ஆனால், இந்த வெளிநாட்டுக்காரன் காலில் எதையோ போட்டுக்கொண்டு மணலில் மிகச் சாதாரணமாக நடந்து வருகிறான். அதான் உங்களிடம் இவரைக் கூட்டிக்கொண்டு வந்தேன்” என்றான்.

ராஜா, அந்த நபரைப் பார்த்து, “நீ அணிந்துள்ளாயே, அது என்ன? ஏதோ விசித்திரமாக இருக்கிறதே. மாய மந்திரம் செய்து அதைப் போட்டிருக்கிறாயா?” எனக் கேட்டார்.

அதற்கு அந்த விஞ்ஞானி, “இல்லை, இல்லை ராஜா. இதை நாம் காலில் அணிந்துகொள்ளலாம். இதன் பெயர் செருப்பு. இதைப் போட்டுக்கொண்டு நடந்தால் வெயில் சூடு நம் கால்களுக்குத் தெரியாது. முள், கரடுமுரடான பாதையில்கூட பயமில்லாமல் நடக்கலாம்” என்றார்.

“ஓ… அப்படியா! அப்படியானால் என் மகனின் பிரச்சினைக்கு உன்னால் தீர்வு சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு நடந்த அனைத்தையும் ராஜா சொன்னார்.

அதற்கு அந்த விஞ்ஞானி, “சூரியனை உங்களால் மட்டுமல்ல, யாராலும் சுட முடியாது ராஜா. ஆனால், அதன் சூட்டிலிருந்து நம் பாதங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்தப் பிரச்சினையை என்னிடம் விட்டுவிடுங்கள். எனக்கு இரண்டு நாள் அவகாசம் தாருங்கள்” என்றார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, இளவரசர் கால்களுக்குப் பொருத்தமான செருப்பைச் செய்து கொண்டுவந்து கொடுத்தார் அந்த விஞ்ஞானி. இளவரசர் அதைக் காலில் போட்டுக்கொண்டார். உடனடியாக வெளியில் ஓடிப்போய் விளையாடிப் பார்த்தார். பின்னர், உள்ளே ஓடி வந்தார்.

“தந்தையே, என் காலில் சூடே தெரியவில்லை. இது கால்களுக்கு இதமாக இருக்கிறது” என்று கூறினார்.

ராஜாவுக்கும் ராணிக்கும் ரொம்ப சந்தோஷம்! அந்த வெளிநாட்டுப் பயணியைப் பாராட்டி, பரிசுகள் கொடுத்தார்கள். அதுமட்டுமா! பிரச்சினைகளுக்கு சாமர்த்தியமாக யோசித்துச் செயல்படும் நபரே மந்திரியாக இருக்கத் தகுதியானவர் என்று கூறி அந்த விஞ்ஞானியை மந்திரியாக நியமித்தார் ராஜா. புதிய அமைச்சர் சொன்ன பல விஷயங்களைக் கேட்டு நடந்த ராஜா நல்லாட்சி நடத்தினார்.

கதை சொன்னவர்:


ஆ.மதுமிதா, 6-ம் வகுப்பு,
ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளி,
மயிலாப்பூர், சென்னை.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x