Last Updated : 25 Nov, 2015 12:01 PM

 

Published : 25 Nov 2015 12:01 PM
Last Updated : 25 Nov 2015 12:01 PM

சித்திரக்கதை: சிரிப்பால் வந்த சிரிப்பு

சிரிப்பூர் நாட்டு ராஜாவின் அலம்பல்களுக்கு ஒரு அளவே இல்லை. அவருடைய அட்டகாசம் தாங்க முடியாமல் கொஞ்சப் பேர் கிமெரிக்கா, கிங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் போய்விட்டார்கள். சாதாரண மக்கள் வேறு வழியில்லாமல் ராஜாவின் கோமாளித்தனங்களைப் பொறுத்துக்கொண்டனர்.

ஒரு நாள் அரசவையில் ராஜா தன்னுடைய பருத்த உடம்பைத் தூக்கிக் கொண்டுவந்து அரியணையில் உட்காரப் போனார். அப்போது கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டார். அத்தாப் பெரிய உடம்பு ஒரு சிறு மலையைப் போல படிக்கட்டுகளில் உருண்டு கீழே விழுந்ததைப் பார்த்த அரசவையிலிருந்த முதல் மந்திரி, துணை மந்திரிகள், இணை மந்திரிகள், சேனாதிபதி, தளபதி, அரசவையிலிருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசவைப் புலவர்கள், விதூஷகர்கள், கோமாளிகள், சேவகர்கள், சேடிப்பெண்கள், பொது மக்கள் என , அரண்மனைக்கு வெளியே பொருட்களை விற்றுக்கொண்டிருந்த வியாபாரிகள், நாய்கள், பூனைகள், அரண்மனை தோட்டத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குருவிகள், மைனாக்கள், புறாக்கள் என எல்லாருமே சிரித்துவிட்டார்கள்,

அந்தச் சிரிப்பினால் அந்த நாடே குலுங்கியது. வீடுகள் ஆடின. வீட்டிலிருந்த மக்களும் ஆடினர். அந்த ஆட்டத்தைப் பார்த்து ஒருவருக்கொருவர் சிரித்தனர். அந்தச் சிரிப்பால் சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனங்கள்கூட குதித்தன. மரங்கள் தலையாட்டி ‘ஹா ஹா ஹா'வென கும்மாளமிட்டுச் சிரித்தன. இத்தனை சத்தத்தில் ஏற்கெனவே படிக்கட்டுகளில் உருண்டு கொண்டிருந்த ராஜா, மேலும் மேலும் உருண்டு அரண்மனையின் வாசலுக்கே வந்துவிட்டார்.

ராஜா உருள உருள அரசவையின் தரை அதிர்ந்தது. அந்த அதிர்ச்சியால் சிரித்துக்கொண்டிருந்தவர்களும் கீழே விழுந்து உருண்டனர். உருண்டவர்கள் அப்படியே ராஜாவை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த ஆபத்தை உணர்ந்த சேவகர்கள் தட்டுத் தடுமாறி எழுந்து, உருண்டவர்களைத் தடுத்து அணை போட்டனர். உருண்டு கொண்டிருந்தவர்களிடையே ராஜாவைத் தேடினார்கள். ராஜாவைக் காணவில்லை. அவர்தான் அரண்மனை வாசலில் கிடந்தாரே.

கடைசியில் அரண்மனை வாசல் படிக்கட்டுகளின் கடைசிப் படியில் ராஜா குப்புற விழுந்து கிடந்ததைப் பார்த்தார்கள். அவரால் அசையக்கூட முடியவில்லை. ஐம்பது சேவகர்கள் சேர்ந்து அவரைத் தூக்கிக்கொண்டு வந்து, அந்தப்புரத்தில் படுக்க வைத்தார்கள். பதினெட்டு நாட்டு மருத்துவர்களும் வந்து, அவருக்கு சிகிச்சை செய்தார்கள். சிகிச்சையால் சில நாட்களில் ராஜா நடக்க ஆரம்பித்தார்.

ஒரு மாதத்துக்குப் பிறகு அரண்மனைக்கு வந்த ராஜா, ஒரு சட்டம் போட்டார். என்ன சட்டம் தெரியுமா? இனிமேல் நாட்டில் யாரும் வாயைத் திறந்து சிரிக்கக் கூடாது. என்ன நடந்தாலும் சரி; என்ன பேசினாலும் சரி; என்ன விழுந்தாலும் சரி; என்ன எழுந்தாலும் சரி; யாரும் சிரிக்கக் கூடாது. அப்படிச் சிரிப்பவர்களுக்கு ஐம்பது கசையடிகள் தண்டனை என்று தண்டோரா போடச் சொன்னார்.

அரண்மனையிலிருந்த விதூஷகர்களையும் கோமாளிகளையும் நாடு கடத்த உத்தரவிட்டார். நகைச்சுவையாக எழுதுகிற எழுத்தாளர்களைச் சிறையில் அடைத்தார். அது மட்டுமல்லாமல் அவர்களைப் பத்து கோடி தடவை, ‘இனி நான் சிரிப்புக்கதை எழுத மாட்டேன். இனி நான் சிரிப்புக் கதை எழுத மாட்டேன்' என்று எழுதச் சொல்லி தண்டனை கொடுத்தார்.

இந்தச் சட்டம் போட்ட பிறகு தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கசையடிகள் வாங்கினார்கள். கசையடி கொடுக்க ஆட்கள் போதவில்லை. மேலும் கசையடி கொடுக்கும்போதே, அடிக்கிற ஆட்கள் சிரித்துவிட அவர்களும் கசையடி வாங்கினார்கள். இப்படிக் கசையடி வாங்கியவர்களால் இரண்டு நாட்களுக்கு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. விவசாயம் நடக்கவில்லை. தொழிற்சாலைகள் செயல்படவில்லை. பள்ளிக்கூடங்கள் நடக்கவில்லை. கல்லூரிகள் மூடிக் கிடந்தன. வீடுகளில் சமையல் செய்ய ஆளில்லை. எல்லோரும் மருத்துவமனையில் கிடந்தார்கள்.

உடம்பு சரியாகி வந்ததும் ஏதாவது ஒரு காரணத்துக்காகச் சிரித்து விடுவார்கள். ஏன் முதல் மந்திரியே இரண்டு தடவை கசையடி வாங்கினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதிலிருந்து முதல் மந்திரி தொடங்கி அதிகாரிகள், ஊழியர்கள், சேவகர்கள், பொதுமக்கள் என்று எல்லோரும் ராத்திரியில் சத்தமாக ரேடியோ, தொலைக்காட்சி சேனல்களை போட்டு சிரியோ சிரியென்று சிரிப்பார்கள். ரேடியோ, தொலைக்காட்சி சத்தத்தில் சிரிப்புச் சத்தம் வெளியே கேட்காது. இப்படியெல்லாம் சிரிப்பூர் மக்கள், வெளிப்படையாகச் சிரிக்க முடியாமல் சங்கடப்பட்டார்கள். நீங்களே சொல்லுங்கள்? யாராலும் சிரிக்காமல் வாழ முடியுமா?

ஆனால், தொடர்ந்து வாங்கிய தண்டனையால் மக்கள் சிரிப்பை மறந்து அழத் தொடங்கினார்கள். முன்பு எதற்கெல்லாம் சிரித்தார்களோ, அதற்கெல்லாம் இப்போது அழுதார்கள். வீடே அழுதது. தெருவே அழுதது. ஊரே அழுதது. நாடே அழுதது. பகலும் இரவும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

ராஜா ஒரு நாள், அவருடைய மந்திரிகளுக்கு விருந்து வைத்தார். அந்த விருந்தில் முதல் மந்திரி வறுத்த கோழிக்குஞ்சு ஒன்றை அப்படியே விழுங்க முயற்சித்து வாயை அகலமாகத் திறந்தார். கோழிக்குஞ்சு உள்ளேயும் போகாமல் வெளியேயும் வராமல் வாய்க்குள்ளே நின்றுவிட்டது. முதல் மந்திரியின் வாய் தவளையின் வாய், மாதிரி ஆகிவிட்டது.

அந்த நேரம் பார்த்து ராஜா முதல் மந்திரியிடம், “எப்படி விருந்து?” என்று கேட்டார்.

அதற்கு முதல் மந்திரி “விழ்ந்து பிழ்மாதம்” என்று சொன்னார்.

அதைக் கேட்ட ராஜா, சிரிப்பு பொங்கிவர சிரித்துவிட்டார். உடனே விருந்தில் கலந்துகொண்டவர்கள் “ஹேய்... ராஜா சிரித்துவிட்டார் ராஜா சிரித்துவிட்டார்...” என்று கத்தினார்கள்.

உடனே ராஜா சேவகர்களைக் கூப்பிட்டு,“யாராயிருந்தாலும் சட்டம் சட்டம்தான்... நிறைவேற்றுங்கள்...” என்று சொன்னார் ராஜா. எல்லோரும் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், ராஜா பிடிவாதம் பிடித்தார். ‘சரி' என்று சேவகர்களில் ஒருவன் ராஜாவை திருப்பி நிறுத்தி, முதுகிலும் பிட்டத்திலும் ஐம்பது கசையடிகள் கொடுத்தான். அவ்வளவுதான் ராஜா துடிதுடித்து, உடம்பெல்லாம் தடித்து உருண்டு புரண்டுவிட்டார்.

ராஜா துடிப்பதைப் பார்த்து எல்லோருக்கும் சிரிப்பு வந்தாலும் யாரும் சிரிக்கவில்லை. மறுநாள் ராஜா முதல் வேலையாக முதல் மந்திரியைக் கூப்பிட்டு அவருடைய சிரிப்புத் தடைச் சட்டத்தை உடனே நீக்கிவிடச் சொன்னார். முதல் மந்திரி ராஜாவின் வீங்கிப்போன உடம்பைப் பார்த்து சிரிப்பு பொங்கிவரச் சிரித்தார். ராஜாவும் அந்தச் சிரிப்பில் கலந்துகொண்டார். சிரிப்பூர் நாட்டிலிருந்த மக்களும் அன்றிலிருந்து சுதந்திரமாகச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x