Last Updated : 02 Mar, 2016 12:05 PM

 

Published : 02 Mar 2016 12:05 PM
Last Updated : 02 Mar 2016 12:05 PM

சித்திரக்கதை: அனான்சிக்குக் கிடைத்த அறிவுப் பானை!

முன்னொரு காலத்தில் வானுலகின் கடவுளான நியாமி பூமிக்கு வந்தார். அனான்சி எனும் ஒரு சிலந்திக்கு வித்தியாசமான பரிசு ஒன்றைக் கடவுள் கொடுத்தார். அது ஒரு அதிசயப் பானை. அந்தப் பானையில் உலகில் உள்ள ஒட்டுமொத்த அறிவும் நிரம்பிக்கிடந்தது.

‘தான் கொடுத்த அறிவுப் பரிசை உலகில் இருக்கும் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்று நியாமி கடவுள் அனான்சியிடம் சொன்னார். அதற்கு அனான்சியும் ஒத்துக்கொண்டது.

அந்தப் பானை முழுவதும் அற்புதமான திறமைகளும், கருத்துகளும் நிரம்பிக் கிடந்தன. பானைக்குள்ளே பார்த்து தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை அனான்சி கற்றுக்கொண்டது. ஆனால், அனான்சி இயல்பிலேயே மிகவும் சுயநலத்தோடும் பேராசையோடும் இருந்தது. அதனால், அதிசயப் பானை மூலம் தனக்குக் கிடைத்த அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அது விரும்பவில்லை.

“ம்… பானையில் இருக்கும் எல்லா அறிவும் எனக்கு மட்டும்தான் சொந்தம். அதை எங்கேயாவது மறைத்து வைத்துவிடுவேன். எனக்குக் கிடைத்த அறிவை யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டேன்” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டது அனான்சி.

ஒரு நாள்-

அந்த அதிசய அறிவுப் பானையை ஒளித்து வைப்பதற்காக அனான்சி இடத்தைத் தேடியது. ஒரு வழியாக, ஒரு பெரிய மரத்தின் உச்சியில் உள்ள கிளையில் பானையை மறைத்து வைக்கலாம் என்று அது முடிவு செய்தது. மரத்தின் கொடிகளை ஒன்றாக்கி வலுவான ஒரு கயிறு செய்தது. அந்தக் கயிற்றால் பானையைத் தன் உடலோடு சேர்த்துக் கட்டிக்கொண்டது. அந்தப் பானையை தன் வயிற்றில் கட்டிக்கொண்டது.

பானையுடன் சேர்ந்து அது மரத்தின்மேல் மெதுவாக ஏறத் தொடங்கியது. ஆனால், பானையை வயிற்றில் வைத்துக்கொண்டு மரம் ஏறுவது அனான்சிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அது ஏறும்போதும், பானை மரத்தில் இடிப்பட்டது. அதனால், அனான்சிக்கும் அடிபட்டது. இதை மரத்துக்குக் கீழே இருந்து அனான்சியின் மகன் நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து, அனான்சியை மகன் அழைத்தான். “அப்பா, நீங்கள் அந்தப் பானையை ஏன் முதுகில் கட்டிக்கொண்டு ஏறக் கூடாது? அப்படி ஏறினால் பானை மரத்தில் இடிபடாது. நீங்களும் சுலபமாக மரம் ஏறலாமே” என்றான்.

அனான்சி தன் மகன் சொன்ன யோசனையை உடனே பின்பற்றியது. மகன் சொன்னதுபோல, இப்போது மரம் ஏறுவது மிகவும் சுலபமாக இருந்தது. கொஞ்ச நேரத்திலேயே அது மரத்தின் உச்சிக்குப் போய்விட்டது. ஆனாலும், அனான்சிக்கு மிகவும் கோபம்.

“ஒரு சின்ன பையனுக்கு என்னைவிட அதிகமான அறிவு இருக்கே… அப்படியானால் இந்த அறிவுப் பானையை வைத்திருப்பதில் என்ன பயன்?” என்று மனதில் நினைத்துக்கொண்டது. நினைத்தவுடனேயே அறிவுப் பானையை மரத்தின் உச்சியிலிருந்து கீழே போட்டது அனான்சி.

கீழே விழுந்த பானை சுக்கு நூறாக உடைந்தது. பானைக்குள் இருந்த அறிவு முழுவதும் பல திசைகளில் பறந்து சென்றது. உலக மக்கள் எல்லோரும் ஏதோவொரு விதத்தில் அறிவுத் துகள்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தார்கள். அந்த அறிவைச் சேகரித்து தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தாரோடும் பகிர்ந்துகொண்டார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை, எந்த ஒரு மனிதனும் உலகின் மொத்த அறிவையும் பெறவில்லை. அதனால்தான், உலகம் முழுவதும் மக்கள் தங்களுடைய அறிவை மற்றொருவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அறிவைப் பகிர்ந்துகொள்வதால் அது பெருகவும் செய்கிறது.

குழந்தைகளே, நீங்கள் அறிவைப் பகிர்ந்துகொள்வீர்கள் அல்லவா?

(ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதையைத் தழுவியது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x