Last Updated : 18 Jan, 2017 10:00 AM

 

Published : 18 Jan 2017 10:00 AM
Last Updated : 18 Jan 2017 10:00 AM

குழந்தைகளுக்கான குறும்படம்: சிறுமியும் சுண்டு விரல் சிறுவனும்

நீங்கள் காகிதத்தில் ராக்கெட் செய்து அதை மேலே பறக்க விட்டு விளையாடியிருப்பீர்கள். இதைப்போலவே ஒரு சிறுமி செய்யும் குட்டி விமானத்தின் ஐடியா சுண்டு விரல் அளவுக்கு உள்ள ஒரு குட்டியூண்டு சிறுவனுக்கு எப்படி உதவுகிறது என்பதைச் சொல்கிறது ‘சோர்’ (soar) என்ற குழந்தைகளுக்கான குறும்படம். அதோடு எந்த ஒரு முயற்சியையும் எப்படித் திருவினையாக்க வேண்டும் என்றும் சொல்கிறது இந்தப் படம்.

அந்தச் சிறுமி ஒரு குட்டி விமானத்தைச் செய்து அதை வானில் தூக்கி வீசுகிறாள். ஆனால், அது சிறிது தூரம் பறந் போனதும் கீழே விழுந்து விடுகிறது. உடனே அவள் சோகத்தில் அமைதியாக உட்கார்ந்துவிடுகிறாள். அப்போது வானத்திலிருந்து ஒரு சிறிய பை அவளது தலையில் ‘தொப்’ பென்று விழுகிறது. அது என்னவென்று பார்ப்பதற்குள், ஒரு சிறிய விமானம் அவள் அருகில் வந்து, மரத்தில் மோதி உடைந்து விழுகிறது.

அதிலிருந்து ஒரு குட்டியூண்டு சிறுவன் வெளியில் வருகிறான். அவன் சுண்டு விரல் அளவே இருக்கிறான். பெரிய உருவமாக நிற்கும் அந்தச் சிறுமியைப் பார்த்துப் பயப்படுகிறான். அருகில் கிடக்கும் ஒரு பென்சிலை எடுத்துச் சிறுமியுடன் சண்டைக்குத் தயாராகிறான். பயந்தபடியே அந்தப் பையை எடுக்க முயல்கிறான்.

ஆனால், அந்தச் சிறுமியோ அந்த பென்சிலை அவனிடமிருந்து பிடுங்கி, அவனது உடைந்த விமானத்தின் இறக்கைகளைச் சரி செய்கிறாள். தான் செய்த விமானத்தோடு அவனது விமானத்தையும் சேர்த்துக் கட்டுகிறாள். குட்டிச் சிறுவனின் நண்பர்கள் பறந்துசெல்லும் திசையை நோக்கிப் பறக்க வைக்க முயல்கிறாள். ஆனால், அந்த விமானம் மீண்டும் கீழே விழுந்து விடுகிறது. இப்படி ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.

அதனால் அச்சிறுவன் இனிமேல் தன் நண்பர்களோடு சேர முடியாதோ என்று சோகத்தில் மூழ்குகிறான். அந்தச் சிறுமியும் நம்மால் உதவ முடியவில்லையே என்று வருத்தம் கொள்கிறாள். அப்போது காற்றில் ஒரு காகிதம் பறந்து வருகிறது. அதைப் பார்த்ததும் அச்சிறுமிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அந்த யோசனைப்படி குட்டிச் சிறுவனை வானில் பறக்க வைக்கச் சிறுமியால் முடிகிறதா? அதற்கு அவள் என்ன செய்தாள்? அந்தக் குட்டி சிறுவன் தன் நண்பர்களோடு சேர்ந்தானா? இதுதான் ‘சோர்’ அனிமேஷன் குறும்படத்தின் கதை.

மொத்தம் 6.14 நிமிடங்கள் இந்தக் குறும்படம் ஓடுகிறது. 2014-ம் ஆண்டு மார்ச் வெளியானது இப்படம். அலைஸ் ட்சுயூ என்ற தைவானைச் சேர்ந்த பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கினார். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற அடிப்படைக் கருத்தை அழகாகக் கூறி, பல விருதுகளை அள்ளிக் குவித்தது இந்தப் படம். இந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? இதோ