Published : 22 Mar 2017 09:26 AM
Last Updated : 22 Mar 2017 09:26 AM

காரணம் ஆயிரம்: கப்பலைக் காத்த கறுப்பு!

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நிறம் ரொம்ப பிடிக்கும். சிலருக்குச் சிவப்பு பிடிக்கும். சிலர் மஞ்சள் நிறத்தில் மயங்குவார்கள். அதெல்லாம் சரி, பிடித்தமான நிறங்களை நீங்கள் வரிசைப்படுத்தி எழுதுங்கள் என்று சொன்னால், கறுப்புக்கு எத்தனையாவது இடம் கொடுப்பீர்கள். “கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலர்” என்று சொல்கிறீர்களா?

இப்போது ஏன் இந்தக் கறுப்புப் புராணம் என்று நினைக்க வேண்டாம். விஷயம் இருக்கிறது. கறுப்பு நிறம் ஒரு கப்பலையே காப்பாற்றியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்தக் கதையைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

இது கோடைக்காலம். வெயில் கொடுமையாய்த் தகிக்க ஆரம்பித்துவிட்டது. கோடையின் வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெளிர் நிறங்களைப் பயன்படுத்துகிறோம். அடர்த்தியான நிறங்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியவை.

அதிலும் கறுப்பு நிறம் என்றால் வெப்பம் மிகவும் கடுமையாக இருக்கும். கறுப்பு நிற ஆடைகள் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சி உடம்புக்கு அனுப்பும். உடல் மிக அதிகமாகச் சூட்டை உணரும். தலைமுடி கறுப்பாக இருப்பதால்தான் வெயில் காலங்களில் நம் தலை அதிகச் சூட்டை உணர்கிறது. வெள்ளை நிறத்தைவிடக் கறுப்பு நிறம் எவ்வளவு சீக்கிரமாக வெப்பத்தை உறிஞ்சுகிறது என்பதை ஒரு சின்ன சோதனை மூலம் அளவிடலாம். பிறகு, கறுப்பு நிறம் கப்பலைக் காப்பாற்றிய கதையைப் பார்க்கலாம்.

ஒரே அளவில் இரண்டு பனிக்கட்டித் துண்டுகளை உங்கள் வீட்டு பிரிட்ஜிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பனிக்கட்டித் துண்டைக் கறுப்புத் துணியாலும், இன்னொரு பனிக்கட்டித் துண்டை வெள்ளை நிறத் துணியாலும் மூடி வெயிலில் வைத்துவிடுங்கள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கறுப்புத் துணியால் மூடப்பட்ட பனிக்கட்டி உருகி, நீர் ஓடுவதைப் பார்க்கலாம். வெள்ளை நிறத் துணியால் மூடப்பட்ட பனிக்கட்டி பாதியளவுக்கு மேல் உருகாமல் இருக்கும். கறுப்பு நிறம் தன்மீது விழும் சூரியக் கதிர்களைப் பெருமளவுக்குக் கிரகித்து வெப்பமடைந்துவிடுகிறது. வெள்ளை நிறம் சூரியக் கதிர்களின் பெரும் பகுதியைச் சிதறடித்து விடுவதால் அதிகம் வெப்பமடைவதில்லை. கறுப்பு நிறத்துக்கும் வெள்ளை நிறத்துக்கும் மட்டும் உள்ள வேறுபாடு அல்ல இது. சிவப்பு, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களும் தங்களின் அடர்த்திக்கு ஏற்ப வெப்பத்தைக் கிரகிப்பதில் மாறுபடுகின்றன.

கலர் கலரான துணிகளை மொட்டை மாடியில் காயப் போட்டுவிட்டு வெப்பத்தை அவை எவ்வாறு உறிஞ்சுகின்றன என்பதை உற்றுக் கவனியுங்கள். வெளிர் வண்ணச் சட்டைகள் சீக்கிரம் காய்ந்து விடும். அடர்த்தியான வண்ணத் துணிகள் காய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இவ்வாறு வெப்பத்தை நிறங்கள் உள்வாங்கிக் கொள்வது என்பது சாதாரண விஷயமில்லை. அது நம் தினசரி வாழ்க்கையில் பல பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

கோடைக்காலத்தில் “வெயிலில் சுருண்டு முதியவர் சாவு” என்று செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். வண்ணங்களைப் பற்றிய தெளிவான சிந்தனை இல்லாததால் இது நடக்கிறது. அடர்த்தியான நிறத் துணிகளால் முண்டாசு கட்டிக்கொண்டு சிலர் வேலை செய்வார்கள். அடர்த்தியான முண்டாசுத் துணி அதிக வெப்பத்தை உள்வாங்கி, தலை வலியையும், மயக்கத்தையும் ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் இது இறப்புவரை கொண்டு சென்றுவிடுகிறது.

இந்த நிறங்களைப் பற்றிய அறிவு ஒரு கப்பலையே காப்பாற்றியிருக்கிறது.

1903-ம் ஆண்டு ஜெர்மானியர்கள் ‘ஹாஸ்’என்ற கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். இந்தக் கப்பல் போன பாதையில் கடல் நீர் திடீரென்று உறையத் தொடங்கிவிட்டது. கப்பலைச் சுற்றி இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்குக் கடல் நீர் உறைந்துவிட்டது, என்ன செய்வதென்று யோசித்தவர்களுக்கு வண்ணங்களைப் பற்றிய அறிவு கை கொடுத்தது.

பனிக்கட்டிகளைப் பெரியபெரிய ரம்பங்களை வைத்து அறுத்துப் பார்த்தார்கள், முடியவில்லை. வெடிகளை வைத்துத் தகர்த்துப் பார்த்தார்கள் அப்போதும் முடியவில்லை. உடனே கப்பலில் இருந்த கறுப்பு நிறமுடைய நிலக்கரித் துகள்களைக் கப்பலின் முன்னால் பனிக்கட்டிகளின் மீது சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு நெருக்கமாகத் தூவினார்கள். நிலக்கரித் துகள்கள் சூரியக் கதிர்களை அதிக அளவில் கிரகித்துக்கொண்டு பனிக்கட்டியை உருகச் செய்தன. கப்பல் தன் பயணத்தைத் தொடங்கியது.

கறுப்பு நிறத்துக்கு எவ்வளவு மகத்துவம் பார்த்தீர்களா?

(காரணங்களை அலசுவோம்)

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x