இலைக்குள் வாழும் பச்சோந்தி

Published : 08 Jan 2014 00:00 IST
Updated : 06 Jun 2017 17:48 IST

ஊர்ந்து நகரும் தன்மை கொண்டவை ஊர்வன. ஆமை, பல்லி, பாம்பு, முதலை மற்றும் பிடரிக்கோடன் ஆகியவை ஊர்வனவாகும். ஊர்வனவற்றில் பெரும்பாலானவை நிலத்தில் வாழ்பவை. சில ஊர்வன உயிர்கள் நீரிலேயே அதிக நேரம் காணப்படும். ஊர்வன எல்லா பருவநிலைகளிலும் வாழும் இயல்புடையவை. அதிக பனியும், குளிரும் காணப்படும் துருவப் பகுதிகளில் மட்டும் ஊர்வன உயிர்கள் இருப்பதில்லை.

எவை ஊர்வன?

#முதுகெலும்பிகள்

#குளிர் ரத்தப் பிராணிகள். இவற்றால் தங்கள் உடல் வெப்பநிலையைச் சூழ்நிலைக்கு ஏற்ப முறைப்படுத்திக்கொள்ள இயலாது. உற்சாகமாகவும் ஊக்கத்துடன் இருக்க அவற்றுக்குச் சூரியஒளி அவசியம். வெப்பநிலை அதிகமானால் அவை நிழல் அல்லது பொந்துகளுக்குள் போய் மறைந்துகொள்ளும்.

#உடல் செதில்களால் போர்த்தப்பட்டிருக்கும்

#நுரையீரல்கள் உள்ளவை

#முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை

கடல் ஆமை

ஊர்வன உயிர்களில் அளவில் பெரிய உயிரி கடல் ஆமை. இந்தப் பூமியில் தோன்றிய தொன்மையான உயிரினங்களில் இதுவும் ஒன்று. இதன் ஓடு நீரில் நீந்துவதற்குத் தகுந்தாற்போல வடிவமைக்கப்பட்டது. பச்சை, மஞ்சள், கருப்பு, பழுப்பு நிறங்களில் காணப்படும். இவை அசைவ உணவுப் பழக்கம் கொண்டவை. ஜெல்லி மீன்கள் முதல் நத்தைகள் வரை சாப்பிடும். முட்டையிடுவதற்காகவும், கூடு அமைப்பதற்காகவும், உணவுக்காகவும் ஆயிரக்கணக்கான மைல்கள் கடலில் பயணம் செய்யும் வல்லமை கொண்டவை.

ப்ரூகெசியா மைக்ரா

தீக்குச்சியின் மருந்து முனை அளவே உள்ள பச்சோந்திகள் சமீபத்தில் மடகாஸ்கர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இவைதான் உலகிலேயே சிறிய ஊர்வன என்று கருதப்படுகிறது. இதற்கு ப்ரூகெசியா மைக்ரா என்று பெயர். குட்டி வாலும் சற்று பெரிய தலையும் கொண்டது. ஒரு இலை மடிப்பில் பகல் முழுவதும் இருக்கக் கூடியது. இரவு, மரத்தில் சிறிது தூரம் ஏறித் தூங்கும் தன்மை கொண்டது.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor