Last Updated : 18 Jan, 2017 09:51 AM

 

Published : 18 Jan 2017 09:51 AM
Last Updated : 18 Jan 2017 09:51 AM

இப்படியும் மழை நீரை சேமிக்கலாம்! - மாற்றுத்திறனாளி மாணவியின் ஐடியா

மண் சாலைகள் எல்லாம் தார் சாலைகளாகவும், சிமெண்ட் சாலைகளாகவும் மாறிவிட்டன. அப்படியானால், மழை பெய்தால் நீர் எப்படி மண்ணுக்குள் செல்லும்? என்றாவது இதை யோசித்திருக்கிறீர்களா? பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி இப்படி யோசித்துப் பார்த்திருக்கிறார். அதை எப்படிச் சரி செய்வது என்றும் தீவிரமாகச் சிந்தித்திருக்கிறார். இப்போது அதற்காக ஒரு கண்டுபிடிப்பையும் செய்துகாட்டியிருக்கிறார். யார் அந்தச் சிறுமி? அவர் அப்படி என்ன செய்தார்?

அந்த மாணவியின் பெயர் பிரேம் தேவதர்ஷினி. இவர் மாற்றுத்திறனாளி. தேங்காய்த்திட்டில் உள்ள பச்சையப்பன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மூலக்குளத்தில் வசித்துவரும் தேவதர்ஷினிக்கு அறிவியல் என்றால் அவ்வளவு ஆர்வம். ஆண்டுதோறும் புதுச்சேரியில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் ஏதாவது ஒரு படைப்பைப் பார்வைக்கு வைத்துவிடுவார். அப்படி 2015-16-ம் ஆண்டு அறிவியல் கண்காட்சியில் அவர் வைத்த பார்வையற்றவர்கள் வாக்களிப்பதற்கான இயந்திரம் மாநில அளவில் ஊக்கப்பரிசு கிடைக்க உதவியது.

இந்தக் கல்வி ஆண்டில் கண்காட்சியில் நல்ல படைப்பைப் பார்வைக்கத்ு வைக்க தேவதர்ஷினி முயற்சி செய்து வந்தார். இந்த வகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும், அதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கினார். இந்தப் படைப்பு மண்டல அளவிலும், மாநில அளவிலும் சிறப்பிடம் பெற்றது. அதைத் தொடர்ந்து அண்மையில் நடந்த தென்னிந்திய அறிவியல் கண்காட்சியிலும் இந்தப் படைப்பு தனிநபர் பிரிவில் சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டு, சுழற்கோப்பையும் கிடைத்தது. இதன் அடுத்தபடியாக டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் கண்காட்சிக்கு இவரது படைப்பு தகுதி பெற்றது.

சரி, வெள்ளப்பெருக்கு வந்தால், மக்கள் பாதிக்காமல் இருக்க என்ன வழி? இதற்காக என்ன செய்தார் அந்த மாணவி? இதுபற்றிச் செய்கையாலே விளக்கினார் தேவதர்ஷினி.

“மழை வெள்ளப் பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்பட்டால் அதனால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று ரொம்ப நாளாக நினைச்சேன். இதற்காக ஆசிரியர், பெற்றோர் உதவியுடன் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் மாதிரித் திட்டத்தைச் செய்தேன். தற்போது எங்கும் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள்தான் போடப்படுகின்றன. இந்தச் சாலைகள் மழை நீரை உள்வாங்குவதில்லை.

இதனால் மழை நீர் அப்படியே தேங்கி நிற்பது, குடியிருப்புகளைச் சூழ்வது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால், சிறுசிறு துளைகளுடன் கூடிய சாலையை அமைப்பதன் மூலம் மழை நீரை விரைவாக உள்வாங்கிக் கொள்ளும். கனமழை பெய்தாலும்கூடக் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வது குறைந்து பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இதன் மூலம் வெள்ளப்பெருக்கை ஓரளவு தடுப்பதுடன் உயிர் சேதத்தையும் தவிர்க்கலாம்” என்றார் மாணவி தேவதர்ஷினி.

மழை நீரைச் சாலைகளிலும் சேகரிக்க ஐடியா சொல்லும் இந்த மாற்றுத்திறனாளி மாணவியை நாமும் பாராட்டுவோமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x