Last Updated : 30 Nov, 2016 10:03 AM

 

Published : 30 Nov 2016 10:03 AM
Last Updated : 30 Nov 2016 10:03 AM

ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை: ஆறுகளின் ராஜா யார்?

ஒரு காலத்தில் காட்டு விலங்குகளும் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தார்கள். அப்போது விலங்குகளின் ராஜாவாக யானை இருந்தது. விலங்குகளுக்கு ராஜா இருப்பதுபோலவே ஆறுகளுக்கும் சதுப்பு நிலங்களுக்கும் ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யானை ராஜா நினைத்தது.

மழை வரும் செய்தியை முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்க ஒரு பொறுப்பான நபர் தேவை என்று யானை விரும்பியது. மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள மக்களுக்கு நேரம் கிடைக்கும் என யானை ராஜா முடிவுசெய்தது. அதனால்தான் ஆறுகளுக்கு ஒரு ராஜாவை நியமிக்க ஆர்வம் காட்டியது.

ஆறுகளுக்கு ராஜாவாக விரும்புபவர்களை அரசவைக்கு வருமாறு தண்டோரா போடச் சேவலை அனுப்பியது யானை ராஜா. ராஜாவின் செய்தியை அந்தப் பகுதி முழுக்கத் தண்டோரா போட்டுச் சொன்னது சேவல். அடுத்த நாள், காலை உணவை முடித்துவிட்டு அரசவைக்கு வந்தது யானை ராஜா. ஆறுகளின் ராஜா பதவிக்குப் பலரும் ஆர்வத்துடன் வந்திருப்பதைப் பார்த்து யானை மகிழ்ந்தது. பூனை, குரங்கு, தேரை, தவளை, கொக்கு, நண்டு ஆகியவை அரசவைக்கு வந்திருந்தன.

யானை ராஜா, ஒவ்வொன்றின் தகுதிகளைத் தனித்தனியாக அலசி ஆராய்ந்தது.

பூனையிடம், “பூனையாரே! உங்களுக்குத் தண்ணீரே பிடிக்காது. மழைத்துளியைக் கண்டவுடன் நீங்கள் ஓடிப்போய் ஒளிந்துகொள்வீர்கள். உங்களை எப்படி ஆறுகளுக்கும் சதுப்பு நிலங்களுக்கும் ராஜாவாக நியமிப்பது?” என்று கேட்டது யானை ராஜா. பூனை பதிலேதும் சொல்லவில்லை. பூனை நிராகரிக்கப்பட்டது.

குரங்கிடம், “குரங்காரே, நீங்கள் இங்கே வந்திருப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் எப்போதும் விளையாட்டுத்தனமாக இருப்பீர்களே. அதனால், உங்களுடைய பொறுப்புகளைச் சரியாகச் செய்ய முடியுமா? உங்களை இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பது கஷ்டம்தான்” என்றது யானை. உடனே குரங்கு இடத்தைக் காலி செய்தது.

கொக்கிடம், “கொக்காரே, நீங்கள் இந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள். ஏனென்றால், உங்களுக்குத் தண்ணீரில் இருப்பதுதான் ரொம்ப பிடிக்குமே. ஆனால், உங்களால் சத்தமாகக் குரல் எழுப்ப முடியாது. யாராலும் உங்களுடைய குரலைக் கேட்கவும் முடியாது! அதனால், உங்களை ராஜாவாக்குவது யோசனைக்குரியது” என்று சொன்னது யானை ராஜா.

நண்டிடம், “அன்புக்குரிய நண்டே, தண்ணீரில் இருப்பதால் இந்தப் பதவியைத் தேடி வந்தீர்களா? உங்களுக்குத் தலையே இல்லையே? உங்களாலும் இந்தப் பதவிக்கு வர முடியாது” என்றது யானை.

இப்போது தேரையும் தவளையும் மட்டும்தான் மீதமிருந்தன. யானை ராஜா தன்னுடைய தலையை ஆட்டியது, “உங்கள் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப கடினமான காரியம். ஏனென்றால், நீங்கள் இருவருமே இந்தப் பதவிக்குப் பொருத்தமாக இருப்பீர்கள். உங்கள் இருவருக்கும் நல்ல குரல் வளம் இருக்கிறது. அதனால் உங்களில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது?” குழப்பத்தில் ஆழ்ந்தது ராஜா யானை.

அரசவையில் இருந்த பிராணிகள் எல்லாம் இருவருக்கும் ஓட்டப் பந்தயம் வைப்போம்; வெற்றி பெறுபவரை ஆறுகளுக்கு ராஜாவாக்கலாம் என்று ஆலோசனை சொல்லின. இந்த முடிவை யானை ராஜா ஏற்றுக்கொண்டது. “ஓட்டப் பந்தயம் நடக்கட்டும். அரசவையிலிருந்து ஆற்றங்கரைக்கு யார் முதலில் வருகிறார்களோ, அவரே ஆறுகளின் ராஜா” என்று அறிவித்தது யானை ராஜா.

போட்டி தொடங்குவதற்கு முன்பே மற்ற விலங்குகள் எல்லாம் ஆற்றங்கரைக்கு ராஜாவுடன் சென்றுவிட்டன. ஓட்டப் பந்தயத்தை சேவல் தொடங்கி வைத்தது. தவளையும் தேரையும் ஒரு தாவல், இரட்டைத் தாவல் என வேக வேகமாகத் தாவிக் குதித்துச் சென்றன. தவளையைவிடத் தேரைதான் ரொம்ப வேகமாகப் போனது. நடுவில் பெரிய பள்ளம் வந்தது. அதைப் பார்த்தவுடன் வேகமாகப் போன தேரை நின்றுவிட்டது.

ஒரு புயலின்போது உருவான இந்தப் பள்ளத்தைத் தேரை மறந்துவிட்டது. இதை எப்படித் தாண்டலாம் என்று தேரை யோசித்துக்கொண்டிருந்தது. அந்த வேளையில், பின்னால் வந்துகொண்டிருந்த தவளை அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. “இதை என்னால் நிச்சயமாகத் தாண்ட முடியும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு ஒரே தாவலில் பள்ளத்தைத் துணிந்து தாவியது. பள்ளத்தைப் பார்த்துப் பயந்த தேரை, தாவுவதற்கு முயற்சி செய்தது. ஆனால், எதிர்பாராதவிதமாகத் தவறிப் பள்ளத்தில் விழுந்தது.

ஓட்டப் பந்தயத்தில் தவளை வெற்றி பெற்றது. யானை ராஜா தவளையை வாழ்த்தி, ஆறுகளுக்கும் சதுப்பு நிலங்களுக்கும் ராஜாவாக நியமித்தது.

“நீங்கள்தான் ஆறுகளின் ராஜா. உங்களுடைய முதல் வேலை மழையை விவசாயிகளுக்கு அறிவிப்பதுதான். உங்களுடைய ‘கொர்க்கு… கொர்க்கு…’ பாடலைப் பாடி மழை வரும் செய்தியை அறிவிக்கவேண்டும்” என்று தவளை செய்ய வேண்டிய பணியை விளக்கியது யானை ராஜா.

அதனால்தான், இன்றளவும் தவளையின் பாடலைக் கேட்டால் மக்கள் கொண்டாட்டமாகிவிடுகிறார்கள். ஏனென்றால், வறண்ட காலம் முடிந்து பருவ மழை தொடங்குவதற்கான முதல் அறிவிப்பு தவளை ராஜாவின் பாடல்தான்.

தவளை ராஜாவின் பாடல் தொடர்ந்து ஒலிக்கட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x