Last Updated : 12 Jul, 2019 10:00 AM

 

Published : 12 Jul 2019 10:00 AM
Last Updated : 12 Jul 2019 10:00 AM

இழந்த கெளரவம், இழந்த செல்வம், இழந்த நிம்மதி; ஆனந்த வாழ்வு தருவாள் பட்டீஸ்வரம் துர்கை

பொதுவாகவே துர்கையை வணங்குவது சிறப்பு. அதிலும் வெள்ளிக்கிழமைகளில், ராகுகால வேளையில் துர்கைக்கு தீபமேற்றி வணங்குவது கூடுதல் விசேஷம். எல்லாவற்றுக்கும் மேலாக பட்டீஸ்வரம் துர்கையை தரிசித்துவிட்டு வந்தால், வாழ்வில் எல்லா நல்லதுகளையும் தந்தருள்வாள், இழந்த செல்வம், கெளரவம், நிம்மதி என அருளுவாள் துர்காதேவி.

துர்கை... அம்பிகையின் அம்சம். ஆதிபராசக்தியின் இன்னொரு வடிவம். கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரத்தில் சிவனாரும் அம்பாளும் இருந்தாலும் ஆலயத்தின், திருத்தலத்தின் நாயகி துர்கைதான். பொதுவாக, கோஷ்டத்தில் இருப்பவள், இங்கே தனிச்சந்நிதியில் எழுந்தருள்கிறாள்.

 பார்வதி தேவி, ஞானம் பெறுவதற்காக, சிவ தீட்சை பெறுவதற்காக, சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தாள். அப்போது, காமதேனுவின் நான்கு மகள்களில் முதல் மகளான பட்டி எனும் கன்று, உதவிகள் புரிவதற்காக இங்கு வந்து சேர்ந்தாள்.

களிமண்ணில் அழகான சிவலிங்கத்தை உருவாக்கினாள் பட்டி. பின்னர் தன் கொம்புகளைக் கொண்டு, ஊற்று ஒன்றை உருவாக்கினாள். அது குளமென உருவானது. சிவனாருக்கு பார்வதி அபிஷேகம் செய்ய ஏதுவாக புனித நதிகளான கங்கையையும் காவிரியையும் தனது ஆத்ம பலத்தால் இந்தத் திருக்குளத்துக்குள் கொண்டுவந்து சேர்த்தாள்.

தானே பால் சுரந்தாள். அபிஷேகத்துக்கு வழங்கினாள். இதில் மகிழ்ந்த ஈசன், பட்டீஸ்வரன் என்ற பெயர் ஏற்று இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினான். அன்று முதல் பட்டீஸ்வரம் என்றே இந்தத் தலத்துக்கு பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

இந்தத் தலத்தில்தான், மிகப் பிரமாண்டமான ஆலயத்தில்தான், அழகுறக் காட்சி தந்து அகிலத்தையே அருளிக்கொண்டிருக்கிறாள் துர்காதேவி.

ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் ரோஜா மாலை அணிந்து காட்சி தந்தால்... அவளைக் காண்பதே பேரின்பம். செய்த பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.  மூன்று கண்களால், முக்காலமும் நம்மையெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். எருமை முகனான மகிஷாசுரனை தன் காலில் மிதித்து, உலகைக் காத்துக்கொண்டிருக்கிறாள். எட்டு கரங்களில் ஒன்றை அபயஹஸ்தமாகவும், மற்றொன்றை இடை மீது வைத்து கம்பீரமாகவும்  ஒயிலாகவும் காட்சி தரும் துர்கை, தரிசிப்பதற்கு அரிதானவள் என்கிறாள் ஆலயத்தின் சித்தநாத குருக்கள்.

பொதுவாகவே துர்கை தீமைகளையும் பாவங்களையும் அழித்து வெற்றியை அளிப்பவள். ரேணுகா தேவியின் புதல்வரான, சத்திரிய குலத்தை அழிக்கும் குறிக்கோளைக் கொண்டு, பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்ட பரசுராமர் துர்கையை வணங்கி சாப விமோசனம் பெற்றார் என்கிறது புராணம்.

ராகுகாலவேளையில் இங்கே துர்கைக்கு சிறப்பு ஆராதனகள் நடைபெறுகின்றன. அப்போது அவளைக் கண்ணாரத் தரிசித்து, மனதார வேண்டிக்கொண்டால், இழந்த கெளரவம், இழந்த செல்வம், இழந்த நிம்மதி ஆகியவற்றையெல்லாம் தந்தருள்வாள் பட்டீஸ்வரம் துர்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x