Last Updated : 08 Jul, 2019 04:08 PM

 

Published : 08 Jul 2019 04:08 PM
Last Updated : 08 Jul 2019 04:08 PM

மூன்று மயில்... ஒரே சந்நிதி... திண்ணியம் பெருமை!

திண்ணியம் நாயகனான ஸ்ரீமுருகப்பெருமானின் சந்நிதிக்குச் சென்றால் ஆச்சரியம்...

ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை, ஸ்ரீமுருகப்பெருமான் மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்தபடி அருட்காட்சி தருகிறார்கள். அதேபோன்று, சிவனாரையும் முருகனையும் ஒரே இடத்தில் நின்று, ஒரே நேரத்தில் தரிசிக்கமுடியும்!

ஆமாம்... திருச்சி லால்குடி அருகில் உள்ள திண்ணியத்தில், முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் சந்நிதியில், வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் என மூவரும் தனித்தனி மயில்களில் காட்சி தருகின்றனர்.

உத்ஸவர் முருகன் வள்ளி- தெய்வானையுடன் மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். இவரின் திருமேனியும் அழகு!

பொதுவாக, சிவாலயங்களில் ஸ்ரீதட்சிணாமூர்த்திதான் தென்திசை நோக்கி அமர்ந்திருப்பார். இங்கே முருகப்பெருமானே குரு அம்சத்துடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். ஆகவே, இவரை வழிபட கல்வி- ஞானம் பெருகும் என்பது ஐதீகம். மேலும், ஆறுமுகமும் ஈராறு கரங்களுமாகத் திகழும் திண்ணியம் முருகனுக்கு செவ்வரளி மற்றும் விருட்சிப்பூ மாலை சார்த்தி வழிபட... திருமணத் தடை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும். கல்வியில் சிறக்கலாம் என்று நம்பிக்கையுடன் தெரிவிக் கிறார்கள் பக்தர்கள்.

இங்கு ஒருமுறையேனும் வந்து, கந்தனையும் கந்தனின் தந்தையையும் தாயையும் வழிபட்டால் போதும்... தோஷங்கள் அகன்று விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.

திண்ணியம் சென்று குருவாய் அமர்ந்த கந்தகுமாரனை வழிபடுங்கள். எண்ணியதை ஈடேற்றித் தருவான் திண்ணியம் முருகன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x