குருபெயர்ச்சி பலன்கள் – 2018

ஏ.எம்.ராஜகோபாலன்

அஹோபில மடத்தின் ஆஸ்தான வித்வான் (ஜோதிடம்), பகவத் கைங்கர்ய, ஜோதிட சாகர சக்ரவர்த்தி, ஞானச் செம்மல், ஏ.எம்.ராஜகோபாலன் கணித்துள்ள குருபெயர்ச்சி பலன்கள்:

பெறுதற்கு இனிய மனிதப் பிறவி, இறைவன் பரம கருணையுடன் நமக்கு அளித்துள்ள தெய்வீக வாய்ப்பாகும்.

தர்மநெறியிலிருந்து சிறிதளவும் பிறழாது சுகங்கள் அனைத்தையும் அளவோடு அனுபவித்து, நம் வசதிகளுக்கு உட்பட்டு தர்மகாரியங்களைச் செய்து, தீர்த்த, தல யாத்திரைகள், மற்றும் இஷ்ட தெய்வத்துக்கு அன்றாட பூஜைகள் தவறாது செய்து, அவற்றின் புண்ணிய பலனாக மேன்மேலும் உயர் பிறவிகளை எடுத்து, இறைவன் திருவடிகளில் இணைந்து விடுவதே பிறவியின் நோக்கமாகும்.

இவ்விதம் ஒவ்வொரு பிறவியிலும் நாம் சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்கும் புண்ணியத்தின் பலனாக நமக்குக் கிடைப்பவையே,  உத்தமமான தாய் தந்தையருக்கு குழந்தையாகப் பிறத்தல், நோயற்று வளர்தல், உயர் கல்வித் தகுதியைப் பெறுதல், நல்ல உத்தியோகத்தில் அமர்வது, அன்பும், அறநெறியும், கற்பும் உடைய மனைவி அமைதல், வசதியான வீடு, ஆரோக்கியமான வாழ்க்கை, தீர்க்கமான ஆயுள் ஆகிய பாக்கியங்களாகும்.

பூவுலகில் பிறக்கும் ஒவ்வொருவரின் புண்ணிய பலன்களையும் கணக்கில் வைத்துக்கொண்டு அவற்றுக்கேற்ப வாழ்க்கை நலன்களை நமக்கு அந்தந்த உரிய காலத்தில் வழங்குகின்றனர் நவக்கிரக நாயகர்கள்.

சூரியன் அழகும், ஆரோக்கியமும் உள்ள சருமத்தையும், சந்திரன் தெளிவான சிந்தனை, கிரகிப்புத்திறனையும், புதன் கல்வி உயர்வு, விவேகம், ஞாபகத் திறன், வசீகரமான தோற்றம், பேச்சுத்திறனையும், குருபகவான் பேராசையற்ற மனநிறைவான வாழ்க்கை, நற்குணங்கள் அமைந்த மனைவி, குழந்தைகள் மற்றும் அன்பு காட்டும் உறவினர்களையும், அமைதி நிலவும் உயர் குடும்பத்தையும் உத்தம பெற்றோர்கள் வயிற்றில் பிறக்கும் பாக்யத்தையும் தந்தருள்கின்றனர்.

சுக்கிரன் அழகான மனைவி, ஆடம்பரமான வாழ்க்கை சுகங்களையும், செவ்வாய் துணிவு, தன்னம்பிக்கை, பொறுமை, தலைமை தாங்கும் தன்மையையும், சனிபகவான் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், கடல் தாண்டி செல்லும் யோகங்களையும், ராகு கங்கா ஸ்நான பலன், நிர்வாகத் திறன், எதிரிகளை வீழ்த்தும் துணிவையும், கேது ஆன்மிகச் சிந்தனை, தெய்வ பக்தி, புண்ணிய நதிகளில் நீராடும் வாய்ப்புகளையும் தந்தருள்கின்றனர்.

குருபகவானின் சக்தி

நவக்கிரகங்கள் தந்தருளும் நற்பலன்கள் அனைத்தும் நமக்கு கிடைக்க, நம் ஜாதகத்தில் குருபகவான் சுபபலன் பெற்றிருக்க வேண்டும். ஜெனன கால ஜாதகத்தில் குருபகவான் நன்கு அமைந்திருக்க வேண்டும் என்றால், நாம் புண்ணிய காரியங்களைச் செய்து, அதன் நற்பலன்களைச் சேர்த்து வைத்திருக்க வேண்டும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது மணமகன், மணமகள் இருவர் ஜாதகங்களிலும் குருபகவானின் நிலையை ஆராய வேண்டியது மிக மிக அவசியமாகும்.

இந்த ஆண்டுக்கான குருபெயர்ச்சி அக்டோபர் மாதம் 4-ம் தேதி நடந்தது. துலா ராசியை விட்டு விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் குருபகவானின் ராசி மாறுதலை அனைவரும் ஆவலுடனும், கவலையுடனும் எதிர்பார்க்கிறார்கள்.

குருபகவானின் பெருமை

தேவர்களின் பிரஹஸ்பதி எனக் கொண்டாடப்படும் குருபகவானின் பெருமையை வராகமிகிரரின் ‘பிருஹத் ஜாதகம்’, காளிதாசனின் ‘உத்தரகாலாம்ருதம்’, பராசர மகரிஷியின் ‘பூர்வபராசார்யம்’, சாணக்யரின் ‘அர்த்த சாஸ்திரம்’ ஆகிய புராதன புகழ்வாய்ந்த க்ரந்தங்கள் விவரித்துள்ளன.

ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், பாழடைந்த திருக்கோயில்களைப் புனர் நிர்மாணம் செய்தல், பசு பராமரிப்பு, திருக்கோயில்களில் தீபம் ஏற்றுதல், கங்கை, நர்மதை போன்ற நதிகளில் நீராடுதல், பெரியோர்களை வணங்கி அவர்கள் ஆசி பெறுதல், துளசி, வில்வம், வன்னி, வேம்பு ஆகிய தெய்வீக விருட்சங்களை வளர்த்தல் ஆகிய புண்ணிய காரியங்களால் குருபகவானின் அனுக்ரஹத்தை எளிதில் பெற்றுவிட முடியும்.

வெளிநாடுகளில்…

கிரேக்க நாட்டில் குருவை ‘ஜூபிடர்’ எனபூஜித்து வந்துள்ளனர். தங்கத்தில் நிர்மாணித்து, விலை உயர்ந்த கற்கள் பதிக்கப் பெற்ற ஜூபிடர் திருக்கோயில் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்ததை ‘ரோமானிய சரித்திரம்’ விவரிக்கிறது.

இந்த ஆண்டில் நிகழ்ந்த குருபெயர்ச்சி

பாரத பூமி புண்ணிய பூமி. பாகீரதி (கங்கை), யமுனை, காவிரி, சரஸ்வதி, கிருஷ்ணை, கோதாவரி, நர்மதை, கொசஸ்தலை, அலக்நந்தா, துங்கபத்ரா, வேகவதி, சந்திரபாகா, பிரம்மபுத்ரா போன்ற புண்ணிய நதி தேவியர்களால், மேலும் புனிதமாயிற்று பாரதம். ஒவ்வொரு ஆண்டும், குருபகவான் ஒவ்வொரு புண்ணிய நதியில் இணைந்திருப்பதாக புராதன நூல்கள் விவரித்துள்ளன. அந்த புண்ணிய காலத்தை மகாமேளா, கும்பமேளா என்று கொண்டாடி அவரை பூஜிக்கிறோம்.

அந்த வகையில், இந்த ஆண்டு குருபகவான் விருச்சிக ராசியில் பிரவேசிக்கும்போது மகத்தான புண்ணிய நதியான தாமிரபரணியில் இணைகிறார். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும் இந்த புஷ்கரம், மகாபுஷ்கரம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில் தாமிரபரணியில் புனித ஸ்நானம் செய்வது, மிகக் கொடிய பாவங்களையும் ஒரே விநாடியில் போக்கிவிடும்.

உலகம்

விருச்சிகம், அக்னி (நெருப்பு) கிரகமாக செவ்வாயின் ஆட்சி ராசியாகும். அரசியல், யுத்தம், உள்நாட்டு கலகங்கள், அறுவை சிகிச்சைகள், கடன் உபாதைகள் ஆகியவற்றுக்கு ஆதிபத்யம் கொண்ட கிரகம் செவ்வாயின் ஆட்சி வீடான விருச்சிக ராசியில் குருபகவான் சஞ்சரிப்பது உலகுக்கு நன்மைகளை அளிக்கும்.

உலகளவில், மத, தீவிரவாதச் செயல்களுக்கு எதிர்ப்பு அதிகரிக்கும். இஸ்லாமிய நாடுகளிடையே ஒற்றுமை குறையும். உள்நாட்டு கலகங்களும் ஏற்படும். தற்போதைய சவுதி அரேபிய மன்னருக்கு அவரது நெருங்கிய உறவினர் ஒருவரால் ஆபத்து ஏற்பட்டு, அதிலிருந்து அவர் தப்பி விடக்கூடும் என்பதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன. அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மத தீவிரவாதிகளின் கை ஓங்கும். காஷ்மீர் பிரச்சினை நீடிக்கும். கடும் பொருளாதார நெருக்கடி உருவாகும். அமெரிக்கா – பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்படும்.

பாரத புண்ணிய பூமி

பாரதம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற நேர லக்னம் ரிஷபம், ராசி கடகம். அந்த நேரத்தில் குருபகவான் அனுகூல நிலையில் அமைந்திருக்கவில்லை. இதர முக்கிய கிரக நிலைகளும் சரியாக இல்லை.

தற்போது நிகழ்ந்த குருவின் விருச்சிக ராசி பிரவேசம் நம் பாரத தேசத்துக்கு அளவற்ற நன்மைகளை அளிக்கக் கூடிய ராசி மாறுதலாகும். பொருளாதாரம், ராணுவ பலம் ஆகியவற்றில் நம் நாடு இதுவரை கண்டிராத அளவுக்கு முன்னேற்றத்தை அடையும். மத தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நல்ல பலனைத் தரும். 2019-ல்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கடுமையாகப் போராடியே வெற்றி பெற வேண்டியிருக்கும்.

அந்நிய நாடுகளின் தலையீடுகள்

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது போன்று, நம் நாட்டில் 2019-ல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஜகவை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தான் செயல்பட்டு வருகின்றன. நம் நாட்டிலும் சில அரசியல் தலைவர்கள், மதவாதக் கட்சிகளுடன் இணைந்து பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்று சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தின் ஜென்ம ராசியில் நிலை கொண்டுள்ள ராகுவின் நிலை உறுதியாக எடுத்துக் காட்டுகிறது. நரேந்திர மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வழி பிறக்கும். பாரதத் திருநாட்டில் பூமி குளிரும், பயிர்கள் செழிக்கும். விவசாயிகள் நன்மை அடைவர். பசுக்கள் நன்மை பெறும். தேசபக்தி அதிகரிக்கும். இந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். தமிழகத்திலும் மிக முக்கிய அரசியல் மாறுதல்கள் நிகழும்.

ராசி பலன்கள்

குருவின் இந்த ராசி மாறுதலினால், ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்துள்ள அன்பர்கள் அமோக நற்பலன்களைப் பெறுவார்கள். சிம்மம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு ஆகிய ராசியினருக்கு அளவோடு நன்மைகள் ஏற்படும். மேஷம், கும்பம் ஆகிய ராசியினருக்கு நன்மையும், பிரச்சினைகளும் மாறி மாறி வரும்.

வாழ்க வளமுடன்.

More In