Last Updated : 18 Jun, 2018 12:35 PM

 

Published : 18 Jun 2018 12:35 PM
Last Updated : 18 Jun 2018 12:35 PM

ஜோதிடம் அறிவோம்! 49: இதுதான்... இப்படித்தான்! நவக்கிரகங்கள்; நவதானியங்கள்; பலன்கள்!

பஞ்சாங்கம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

ஜோதிடர்கள் மட்டுமே பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துவார்கள் என நினைக்கவேண்டாம், பஞ்சாங்கம் என்பது நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய ஒன்று.

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை உள்ளடக்கியது, அதாவது பஞ்சபூதங்களை உள்ளடக்கியது. இந்த பூமியும் பஞ்சபூதங்களால்தான் கட்டமைக்கப்பட்டது.

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் மனிதன் உட்பட பஞ்சபூதங்களின் தொகுப்புதான். அதனால்தான் உயிர் பிரிந்த பின்இந்த உடல் பஞ்சபூதங்களில் தன்னை ஆட்படுத்திக்கொள்கிறது,

பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் எவை தெரியுமா? 1) வாரம் 2) திதி 3) நட்சத்திரம் 4) யோகம் 5) கரணம் இந்த ஐந்து காரணிகள்தான் பஞ்சாங்கம்.

அன்றைய தின பஞ்சாங்கக் குறிப்புகளை, அதாவது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் இவற்றை தினமும் வாசித்து வருபவர்களுக்கு கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே உண்டாகும் என்பது ஐதீகம்,

அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று “பஞ்சாங்கம் வாசித்தல்” என்ற வழக்கம் இன்றளவிலும் உள்ளது. இது அனைத்து ஆலயங்களிலும் நடக்கும்.

திருமலை திருப்பதி ஶ்ரீநிவாச பெருமாளுக்கு அதிகாலையில் அன்றைய பஞ்சாங்க விபரங்களை வாசித்துக் காட்டும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

பஞ்சாங்கத்தை தானம் தருவதும் மிகுந்த நன்மையைத் தரும்.

பொதுவாக கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டும் என்றால் அந்த கிரகங்களுக்குண்டான நாட்களில் அந்த கிரகங்களின் தானியத்தால் செய்த உணவுகளை தானம் தருவதன் மூலம் நல்ல பலன்கள் நம்மை வந்தடையும்.

சூரியன்:- இவரின் தானியம் “கோதுமை.” எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும்,

வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள், ஆண் குழந்தை எதிர்பார்ப்பவர்கள், அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள், தலைமுறையாக தொழில் செய்பவர்கள், இவர்களைல்லாம் இந்தப் பரிகாரம் செய்துவர நினைத்தது நடக்கும்.

சந்திரன்:- இவரின் தானியம் “நெல்.” எனவே “பச்சரிசி” யில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும்.

கதை, கவிதை, இலக்கியம் படைப்பவர்கள், அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், வாகனம் சம்பந்தப்பட்ட ( டிராவல்ஸ் ) தொழில் செய்பவர்கள்,வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள்,உணவகத்தொழில் செய்பவர்கள்,

அடிக்கடி பணி இடமாற்றத்தை சந்திப்பவர்கள் இவர்களெல்லாம் இந்தப் பரிகாரத்தை செய்துவர நன்மை உண்டாகும்.

செவ்வாய்:- இவரின் தானியம் “துவரை.” எனவே துவரையால் செய்த உணவுகளை தானம் செய்ய வேண்டும்.

மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மையங்கள் நடத்துபவர்கள், ஜேசிபி , டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், கட்டிடத்தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் வியாபாரம் செய்பவர்கள், செங்கல் சூளை, கேட்டரிங் தொழில் செய்பவர்கள்,மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் இவர்களெல்லாம் துவரை கலந்த உணவுகளை செவ்வாய்க்கிழமைகளில் தானம் செய்துவர நன்மை பெருகும்.

புதன்:- இவரின் தானியம் “பச்சைப்பயறு.” இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும்.

கல்வியாளர்கள், எழுத்துத் துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கமிஷன் மண்டி தொழில், ஏஜென்சி தொழில், தரகுத்தொழில், திருமணத்தரகர்கள், மளிகைக்கடைக்காரர்கள், ஆடிட்டர்கள், கணக்காளர்கள், வங்கி பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், மனை வியாபாரம் செய்பவர்கள், நரம்பு மற்றும் தோல் மருத்துவர்கள், அழகுநிலையம் நடத்துபவர்கள் என இவர்கள் பச்சைப்பயறு தானங்களை புதன்கிழமைகளில் செய்துவர நன்மை அளிக்கும்.

குரு:- இவரின் தானியம் “கொண்டைக்கடலை.” இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும்.

திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித்தருவார்,

கல்வியாளர்கள், உபதேசத் தொழில் செய்பவர்கள், பேச்சைத் தொழிலாக கொண்டவர்கள், உபந்யாசம் செய்பவர்கள், வட்டித்தொழில், அடகுத் தொழில், சிட்பண்ட், கிளப், தவணைமுறை வியாபாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வங்கிப்பணியாளர்கள் என இவர்களெல்லாம் வியாழன் தோறும் கொண்டைக்கடலை தானம் செய்துவர, குருவின் அருள் பார்வை கிடைக்கும்.

சுக்கிரன்:- இவரின் தானியம் “மொச்சை.” இந்த மொச்சைப் பருப்பை சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும்.

கலைத்துறை சார்ந்தவர்கள், இசை, நடனம், கலை, சினிமா, நாடகத்துறை , ஆபரணக்கடை, ரெடிமேட் கடை, கவரிங் கடை, வளையல் பொட்டு போன்ற பெண்கள் தொடர்புடைய கடை நடத்துபவர்கள், வெள்ளிப் பொருட்கள், ஆடம்பரப்பொருள் விற்பனை, அழகுநிலையம், இவர்களெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் மொச்சை தானம் தர செல்வம் பெருகும்.

சனி:- இவரின் தானியம் “எள்.” எனவே, எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும்.

தொழிலாளிகள், உடல் உழைப்பு அதிகம் உடையவர்கள், சேவைசார்ந்த தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், கடைநிலை ஊழியர்கள், தோல் பொருள் விற்பனை, காலணி கடை, இரும்புத் தொழில், பழைய இரும்பு வியாபாரம்,கால்நடை வளர்ப்பு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள், சாலைப் பணியாளர்கள், இவர்களெல்லாம் எள் கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்,

ராகு:- இவரின் தானியம் “உளுந்து.” எனவே உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர அளப்பரிய நன்மைகள் வந்து சேரும்,

அயல்நாட்டு தொடர்புடைய தொழில், ஏற்றுமதி இறக்குமதித் தொழில், சூதாட்ட விடுதி, மது விற்பனை, மால் போன்ற மல்ட்டி காம்ப்ளக்ஸ், சூப்பர் மார்க்கெட், IATA என்னும் ஏஜென்சி, இறைச்சி வியாபாரம், தோல் வியாபாரம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் உளுந்து சம்பந்தப்பட்ட உணவை தானம் தர வளமை பெருகும்.

கேது:- இவரின் தானியம் “கொள்ளு.” எனவே கொள்ளு கலந்த உணவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.

ஆன்மிகம் தொடர்புடைய தொழில், இறை சம்பந்தபட்ட கடை, பூஜை மற்றும் படக்கடை, உபந்யாசம், புரோகிதம், ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாட்டாளர், கைடு என்னும் வழிகாட்டி, உளவுத்துறை, தூதரகப் பணி, துப்பறிவாளர்கள், கைரேகை நிபுணர், டிடெக்டிவ் ஏஜென்சி, ஜோதிடர்கள் என இவர்களெல்லாம் கொள்ளு உணவை தானம் தர நிம்மதியான வாழ்வும், வளமான வாழ்க்கையும் அமையும்.

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள: 98841 60779

அடுத்த அத்தியாயம் வரும் 20.6.18 புதன்கிழமை வெளியாகும். அத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது.

- தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x